என் தாயைக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளியுங்கள்! ருக்மிணியம்மாளின் மகன் உருக்கமான வேண்டுகோள்!
By RKV | Published On : 14th May 2018 12:36 PM | Last Updated : 14th May 2018 01:09 PM | அ+அ அ- |

குழந்தைக் கடத்தல் வதந்தியாலும், தவறான புரிதலாலும் கடந்த வாரம் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ருக்மிணியம்மாளின் மகன் 42 வயது கோபிநாத்தின் துயரம் எல்லையற்றது. கோபிநாத்தைப் பின் தொடர்ந்து வந்த அவரது 2 வயது மகன் தனது பாட்டியைக் காண வேண்டும் என்று அழுத காட்சி மேலும் உருக்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. கடந்த வாரம் செவ்வாய் மாலை வரை தனது பேரன், பேத்திகளுடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்த தனது மகன் வீட்டில் கதை பேசி மகிழ்ந்து சோறூட்டிக் கொண்டாடி இரவுகளில் அவர்களைத் தூங்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அறிமுகமில்லாத கிராம மக்களில் சிலர் குழந்தைக் கடத்தல்காரி எனச் சந்தேகித்து சரமாரியாகத் தாக்கிக் கொன்ற விதம் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டு துக்கத்திலும், ஆத்திரத்திலும் பொங்கியவராக அவரது மகன் கோபிநாத், ‘எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும், எது அதிகபட்ச தண்டனையோ அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அரற்றுவது ஒருவகையில் நியாயமானதாகக் கூடத் தோன்றுகிறது.
காரணம் பிற குழந்தைக் கடத்தல் வதந்திகளைப் போல அல்லாது ருக்மிணியம்மாளின் மரணம் மிக மிக அபத்தமானதாக இருக்கிறது.
கடந்த வாரம் புதன் அன்று அதிகாலை 4 மணிக்கு தனது மருமகன் மற்றும் மைத்துனருடன் அத்திமூர் கிராமத்தில் இருக்கும் குல தெய்வக் கோயிலைத் தேடி காரில் கிளம்பிய ருக்மிணியம்மாளுக்கு அங்கே சென்று நெடுங்காலம் ஆனபடியால் கோயிலிருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமமும், குழப்பமும் இருந்திருக்கிறது. இரண்டு, மூன்று இடங்களில் காரை நிறுத்தி கோயிலிருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்திருக்கின்றனர். பின்னரும் குழப்பம் நீடித்ததால் மூன்றாவதாக ஓரிடத்தில் காரை நிறுத்தி கோயிலைப் பற்றி விசாரிக்கையில் அங்கே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ருக்மிணியம்மாள் காரில் இருந்து சில சாக்லேட்டுகளை எடுத்து அவர்களிடம் ப்ரியமாக உண்ணத் தந்திருக்கிறார். அதைக் கண்டு சந்தேகித்த அங்கிருந்த கிராம மக்கள் சத்தம் போடத் தொடங்கியுள்ளனர்.
அம்மாவின் இத்தகைய செயலைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவரது மகன் கோபிநாத் கூறியது;
‘என் அம்மாவுக்கு எப்போதுமே குழந்தைகள் என்றால் அதிகப் ப்ரியம் உண்டு. எங்கே குழந்தைகளைக் கண்டாலும் அவர்களுடன் அன்பாகப் பேசத் தொடங்கி விடுவார், அந்தச் சமயத்தில் கையில் ஏதும் தின்பண்டங்கள் இருந்தால் குழந்தைகளுக்குத் தராமல் உண்ணவே மாட்டார். இதெல்லாம் அன்பினால் செய்யக்கூடிய காரியங்கள். சம்மந்தப்பட்ட கிராம மக்கள் இதை தவறாக எண்ணி சாக்லேட் கொடுத்து குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என எண்ணி என் அம்மாவையும், அவருடனிருந்த உறவினர்களையும் தாக்கிய செயல் முற்றிலும் வன்முறையானது மட்டுமல்ல கொடூரனமானதும் கூட. குல தெய்வக் கோயிலைக் காண மலேசியாவில் இருந்து தமிழகம் வந்திருந்த உறவினர்களுடன் என் தாய்க்கு நேர்ந்த இந்த கதியை காணொளியாகக் காணும் போது இதயம் நொறுங்கிப் போகிறது’
கிராம மக்களுக்கு சந்தேகம் இருந்திருந்தால் உடனடியாக காவல்துறையை அணுகியிருக்கலாம். பொதுமக்கள் இரும்புக் கம்பிகளாலும், ஆயுதங்களாலும் தாக்கத் தொடங்கியதுமே அவர்கள் தகராறு எதற்கு என காரை கிளப்பியுள்ளனர். அதைப் புரிந்து கொள்ளாமல் தப்பியோடப் பார்ப்பதாகக் கருதி மேலும் மூர்க்கமாகத் தாக்கி வயதான பெண்மணி என்றும் பாராமல் கொலை செய்த விதம் மனிதத் தன்மையற்றது.
என் அம்மா இதுவரையிலும் யாருக்கும் தீங்கு நினைத்தவரே அல்ல. அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டது கண்டு நெஞ்சம் பதறுகிறது.
என் குடும்பத்தினருக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. இப்படியொரு மோசமான துர்நிகழ்வு வேறு எவருக்குமே ஏற்படக்கூடாது. நமது நீதிஅமைப்பு இப்படிப்பட்ட வதந்தி பரப்புவர்கள் மற்றும் ஆராயாது கொலைத் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனை அளித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். என்று கதறுகிறார் தாயை இழந்த கோபிநாத்.
Video Courtesy: sun news.