‘அன்றொரு நாள் இல்லத்தரசி இன்று பல்ப் ஃபேக்டரி முதலாளி’ எனப் பலருக்கும் வெளிச்சம் தரும் தனலட்சுமியின் கதை!

இப்போது எங்களுடைய வருடாந்திர டர்ன் ஓவர் 9.6 லட்சம் ரூபாய். இதில் மூலதனம் மற்றும் பணியாளர்களுக்கான செலவுகள் எல்லாம் போக நிறுவனத்தின் வருடாந்திர வருமானமாக 4.1 லட்ச ரூபாய் நிற்கும்.
‘அன்றொரு நாள் இல்லத்தரசி இன்று பல்ப் ஃபேக்டரி முதலாளி’ எனப் பலருக்கும் வெளிச்சம் தரும் தனலட்சுமியின் கதை!

திருநெல்வேலிக்குப் பக்கத்துல அரசனார் குளம் தாங்க எங்க ஊரு. ஆரம்பத்துல என் கணவர் அசோக் தூத்துக்குடியில ஒரு பல்ப் ஃபேக்டரியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். வருமானம் போதல. என்ன பண்றதுன்னு சதா யோசனை. அப்போ தான் ஒரு நாள் திடீர்னு நானும் என் கணவருமா சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம். என் கணவர் கிட்ட இருந்த பல்ப் தயாரிக்கிற திறமையை நானும் கத்துக்கிட்டு அதையே மூலதனமா வச்சு நாமளே சின்னதா ஒரு பல்ப் கம்பெனி ஆரம்பிச்சா என்னன்னு... அந்த நோக்கத்தை உடனடியா செயல்பாட்டுக்கு கொண்டு வர எங்களுக்கு ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்காரங்க உதவி செய்ய முன் வந்தாங்க. இந்த நிறுவனம் டி வி எஸ் மோட்டார் கம்பெனிக்காரர்களுடைய கிராம சேவை அமைப்புகளில் ஒன்று. அவங்க எங்களுக்காக ஸ்மால் ஸ்கேல் பிசினஸ் பிளான் ஒன்றை தயாரிச்சதோட இதை திறம்பட நடத்த 15 பெண் உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் தன்னார்வக் குழு ஒன்றைத் தொடங்கவும் வழிகாட்டினாங்க. அப்படி ‘காந்தி’  என்ற பெயரில் நாங்க தொடங்கின மகளிர் அமைப்பு மூலமா திருமண வீடுகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் விழாக்களுக்குத் தேவையான சீரியல் பல்புகள் மற்றும் டியூப் லைட்டுகளைத் தயாரிச்சு விற்கத் தொடங்கினோம்.

நாங்க தயாரித்த பல்புகளுக்கான விற்பனையைப் பெருக்க எங்களது தன்னார்வ அமைப்பும், என் கணவரும் உதவினாங்க.

நாங்க இருக்கற அரசனார்குளம் ஒரு ஒதுக்குப்புறமான கிராமம், இங்கே பெரும்பாலான பெண்கள் வீட்டுப்படி தாண்டி வேற்றூருக்கோ அல்லது நகரங்களுக்கோ செல்வதெல்லாம் அரிது. அப்படியான ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு எங்களது ‘காந்தி’ மகளிர் தன்னார்வக் குழு மூலமாக இந்த பல்ப் ஃபேக்டரியைத் தொடங்கி இன்று என்னைப் போன்ற பல பெண்களுடன் அதை வெற்றிகரமாக நடத்தி வருவது என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய சாதனை.

இப்போது எங்களுடைய வருடாந்திர டர்ன் ஓவர் 9.6 லட்சம் ரூபாய். இதில் மூலதனம் மற்றும் பணியாளர்களுக்கான செலவுகள் எல்லாம் போக நிறுவனத்தின் வருடாந்திர வருமானமாக 4.1 லட்ச ரூபாய் நிற்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஆரோக்யமான வளர்ச்சி. நிறுவனத்தின் தயாரிப்பு திறனும் தற்போது 30 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டுகள் வரை அதிகரித்திருக்கிறது. வளர்ச்சி இருக்கும் அதே நேரத்தில் பெண்கள் அனைவரும் இணைந்து நடத்தும் இந்தத் தொழிலில் சவால்களும் இல்லாமல் இல்லை. ஆரம்பகட்டத்தில் நாங்களும் பல தடைகளைத் தாண்டித்தான் இதில் வளர்ச்சியை எட்டி இருக்கிறோம். என் கணவர் SST யின் துணையுடன் எங்களது காந்தி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் பல்ப் தயாரிப்பதில் இருக்கும் தொழில்நுட்பத்தை மிகப் பொறுமையாகக் கற்றுக் கொடுப்பார். நான் எங்களது தயாரிப்புகளுக்கான மார்க்கெட்டிங் வேலை முதற்கொண்டு சந்தையில் எங்கு எங்களுக்கான ரா மெட்டீரியல்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று தேடுவது போன்றதான வேலைகளைப் பகிர்ந்து கொள்வேன். தற்போது சென்னை, கேரளா, மும்பை மற்றும் கொல்கத்தா வரை எங்களது தயாரிப்புகளுக்கான விற்பனையாளர்களைக் கண்டடைந்துள்ளோம். சில சமயம் இங்கே சீசன் டல்லாக இருக்கும் போது வேற்று மாநிலங்களுடனான வியாபாரம் எங்களுக்குக் கைகொடுக்கும்.

- என்று சொல்லும் தனலட்சுமி, இன்று தனது கிராமத்தில் இருக்கும் பெண்கள் பலருக்கும் ரோல் மாடல். பல பெண்களுக்கு தனலட்சுமியைப் போல திறமையுடனும், தன்னிச்சையாகவும் இயங்க ஆசையும், கனவும் வளர்ந்திருக்கிறது. அவர்களின் கனவுகளை நனவாக்கித் தந்த பெருமையும் இன்று தனலட்சுமிக்கே! கணவனுடன் இணைந்து குடும்ப வருமானத்தில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலும் குடும்ப நிர்வாகத்தில் மட்டுமல்ல எடுத்து வைக்கும் அத்தனை அடியிலும் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற உந்துதலே தனலட்சுமியை இவ்விதமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தச் சிந்தனையானது தனலட்சுமியை மட்டுமல்ல அவரது கிராமத்திலிருக்கும் பல பெண்களையும் தன்னம்பிக்கையுடன் சிந்திக்க வைத்திருப்பதோடு சுயகால்களில் நிற்கவும் வைத்திருக்கிறது. இப்போது தனலட்சுமி மட்டுமல்ல அவரோடு இணைந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வெற்றிபெற்ற அத்தனை பெண்களுக்குமே அவர்களது அடுத்த இலக்கு தங்களது வாரிசுகளுக்கு அருமையான கல்வியறிவைப் பெற்றுத் தந்து அவர்களையும் சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு முன்னேற்றுவது ஒன்றே! பெண்கள் தங்களுக்கான சுயமரியாதை மற்றும் சமூக அங்கீகாரத்தை வெளியில் தேட வேண்டியதில்லை அது தங்களிடத்திலேயே எப்போதும் உறைந்திருக்கக் கூடிய விஷயம். அதை வெளிக்கொண்டு வரும் முனைப்பு மட்டுமே பெண்களிடம் எப்போதும் இருக்க வேண்டும். அந்த முனைப்பிருந்தால் வெற்றி உறுதி என்பதற்கு தனலட்சுமியும் அவரது காந்தி தன்னார்வ மகளிர் சேவை அமைப்பு உறுப்பினர்களுமே முன்னுதாரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com