குழந்தை மீட்பு பணிகளிடையே மனதைக் குடையும் தாயின் ஓலம்! தேவையா நேரலை ஒளிபரப்பு?!

இப்படித் தொடர்ந்து குழந்தைகளை பலியிட்டும் கூட நாம் ஏன் இன்னும் திருந்தாமல் இருக்கிறோம் என்பது தான் புரியாத புதிர். இந்த நிலையில் ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் என்ன?
trichy sujith's mother borewell victim
trichy sujith's mother borewell victim

இன்னும் எத்தனை காலங்களுக்கு இப்படி பரிதவித்துக் கொண்டிருக்கப் போகிறோம்!

இன்று முழுவதும் இந்நேரம் வரையிலுமே செய்தி ஊடகங்களில் நேரலைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது திருச்சியில் 2 வயது ஆண் குழந்தை ஆழ்துளைக் கிணறு விபத்தில் சிக்கிக் கொண்ட மீட்புப் பணிக் காட்சிகள். நேரலையில் ஒளிபரப்புவதால் மட்டும் என்ன நிகழ்ந்து விடப்போகிறது?

இது மாதிரியான விபத்துக்களை இனிமேல் நேராமல் தடுத்து விடப்போகிறோமா என்ன?

இன்று நேற்றா நடக்கத் தொடங்கி இருக்கின்றன இம்மாதிரியான ஆழ்துளைக் கிணறு விபத்துக்கள்?!

1990 ஆம் வெளிவந்த ‘மாலூட்டி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் கரு இப்படியொரு விபத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.

அந்தத் திரைப்படத்திலும் 3 வயது பேபி ஷாமிலி இப்படித்தான் கைவிடப்பட்டதொரு ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்து விடுவார். தட தட வென பரபரப்புடனும் மனம் பதற வைக்கும் காட்சிகளுடனும் நகரும் திரைக்கதையின் முடிவில் அந்தக் குழந்தை காப்பாற்றப் பட்டு விடும்.

ஆனால், இங்கு திருச்சி குழந்தை விஷயத்தில் குழந்தை ஆழ்துளைக் குழாய் கிணற்றுக்குள் தவறி விழுந்து இப்போது 20 மணி நேரங்கள் கடக்கவிருக்கிறது.

நம் மாநில அரசும், அமைச்சர்களும், சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் மாணவர் குழுவும், தனிநபர் தன்னார்வலர்களும், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவுமாய் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். ஆனால், நேரம் செல்லச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் நம்பிக்கை வலுவிழந்து கொண்டே வருகிறது. 

போதாக்குறைக்கு நம்முடைய செய்தி ஊடகங்கள் பின்னணி இசையெல்லாம் சேர்த்து மீட்புப் பணிகளை நேரலை செய்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் நமதுய் ஊடகங்கள் செய்யத் தகுந்த பணி தானா இது? என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டாக வேண்டிய நேரமிது.

விபத்தில் சிக்கிய குழந்தையின் தாயாரது பரிதாப ஓலம் கேட்ட மாத்திரத்தில் மனம் பதறுகிறது.

இத்தனைக்கும் இது யாருடைய தவறு?

ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுவது எதற்காக? தோண்டிய கிணற்றில் தண்ணீர் இல்லையென்றால் அதை அப்படியே கைவிட்டு விடுவதா? நம் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் எந்தக் ஒரு குழந்தையும் இப்படி விபத்தில் சிக்கிக் கொண்டால் அதற்கும் இதே வேதனை தானே? அப்படியானால் அவற்றை முறையாக மூடுவதற்கான வேலைகளை சம்மந்தப்பட்ட குடும்பங்கள் செய்து முடித்திருக்க வேண்டுமா இல்லையா? அவர்கள் செய்து முடித்தார்களா? இல்லையா? எனும் விவரங்கள் சம்மந்தப்பட்ட பகுதியின் கிராம நிர்வாக அலுவலரையோ அல்லது பஞ்சாயத்துத் தலைவரையோ சென்றடைந்திருக்க வேண்டுமா இல்லையா? இப்படி ஒட்டுமொத்தமாக பல அடுக்குகளில் மக்கள் கவனக்குறைவாக இருந்து விட்டு இப்போது ஒரு குழந்தையை மரண ஆபத்தில் சிக்க வைத்து விட்டு நேரலையில் அந்த பரிதாபத்தைக் காட்டிக் கொண்டிருப்பது வெட்கக் கேடான விஷயம்.

நம் நாடு தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடாகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நாடு.

இங்கே நாம் சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறோம். அது தோல்வியில் முடிகிறதோ, வெற்றியில் முடிகிறதோ அதைப் பற்றிய கவலைகளை எல்லாம் புறம் தள்ளி மேலும் மேலும் அதற்காக பெருந்தொகை செலவிட்டு எப்படியாவது நிலவில் கால் பதித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பணி செய்து வருகிறார்கள் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள். ஆம், இது நமது வளர்ச்சியின் அத்தாட்சியாகும் நாளை. ஆனால், ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். நாளை நிலவுக்குச் செல்லும் நாள் வந்தே தீரும். அப்படி ஒரு நாள் வரும் போது, அங்கு சென்றும் கூட தண்ணீருக்காக ஆழ்துளை கிணறுகளைத் தோண்டி விட்டு அதில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அப்போது அதையும் கைவிட்டு அங்கே ஏதாவது ஒரு குழந்தையை விபத்தில் சிக்கவைத்து விட்டு  இப்படித்தான் நிலவிலிருந்தும் கூட ஏதோ ஒரு அபலைத்தாயின் மரண ஓலக்குரலை நேரலை செய்து கொண்டிருப்போம்.

ஏனென்றால் நமது டி என் ஏ டிசைன்கள் அப்படி?

நமது மூளைச்செல்லின் விழிப்புணர்வு எல்லை அத்தகையது?

நோயாகட்டும், போராகட்டும், ஒவ்வொன்றுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகட்டும் எதிலுமே...  ‘வரும் முன் காப்போம்’என்பதில் நமக்கு நம்பிக்கை இருப்பதில்லை. வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பதே நமது தாரக மந்திரமாக இருக்கிறது.

இது முற்றிலும் தவறான அணுகுமுறை.

இதற்குத் தொடர்ந்து பலிகடாக்கள் ஆகிக் கொண்டிருக்கின்றனர் நமது இந்தியக் குழந்தைகள்.

இந்திய அளவில் இப்படிக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் வாயிலாக ஆண்டுதோறும் மாநிலவாரியாக குழந்தைகள் பலியாகிறார்கள். இதற்கான கருத்துக் கணிப்பொன்றை எடுத்துப் பார்த்தால் மொத்த இந்தியாவிலும் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்கள் ஹரியானா மற்றும் குஜராத்துக்கு. பட்டியலில் ராஜஸ்தானுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த மாநிலங்களில் எல்லாம் மக்கள் ஆழ்துளைக் கிணறு விபத்து விஷயத்தில் ஏன் இத்தனை விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி.

Borewell accidents..
Borewell accidents..

2016 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சர்வே இது. இது தவிர 2010 ஆண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் படி;

2010 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...
2010 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்...

குழந்தை மீட்பு விவரப் பட்டியலைப் பாருங்கள். அரிதாக மீட்கப்பட்ட இரு குழந்தைகள் கூட மீட்புக்குப் பிறகான மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் இறந்திருக்கின்றனர் என்று தெரிய வருகிறது.

இப்படித் தொடர்ந்து குழந்தைகளை பலியிட்டும் கூட நாம் ஏன் இன்னும் திருந்தாமல் இருக்கிறோம் என்பது தான் புரியாத புதிர். 

இந்த நிலையில் ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் என்ன?

மீட்புப் பணிகளை நேரலையில் ஒளிபரப்புவதைக் காட்டிலும் இந்தியா முழுவதிலுமாக இதுவரை நடந்திருக்கும் ஆழ்துளைக் கிணறு விபத்துக்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் மார்க்கங்கள் எதையாவது கண்டுபிடித்துச் சொல்லலாம்.

அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கிக் கொண்ட குழந்தைகளை மீட்பதற்கான நவீன கருவிகள் எதையேனும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். அதெல்லாம் எங்கள் வேலையில்லை என்பவர்கள் அப்படி யாரேனும் கண்டுபிடிக்கப் பின்புலமாகவோ அல்லது பக்கபலமாகவோ இருக்க முயற்சிக்கலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com