குழந்தைகளிடம் தற்கொலை எண்ணம் ஏற்பட தாயின் மனச்சோர்வு காரணமா?

தாய்மார்களிடம் காணப்படும் மனச்சோர்வு குழந்தைகளிடம் தற்கொலை எண்ணங்களை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தாய்மார்களிடம் காணப்படும் மனச்சோர்வு குழந்தைகளிடம் தற்கொலை எண்ணங்களை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

குழந்தைகளின் பதின்பருவம் என்பது உடல், மனரீதியாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டது. குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களின் வழிநடந்த குழந்தைகள் பதின்வயதில் தனியே பயணிக்கத் தொடங்குகின்றனர். சமூகத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது, வித்தியாசமான சூழ்நிலைகளை சந்திக்கும் அவர்கள் நினைத்தது நடைபெறாதபோது மன அழுத்தம் ஏற்படுகிறது. சில சூழ்நிலைகளை எதிர்கொள்ள பக்குவம் இல்லாதபோது மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே, பதின்வயது குழந்தைகளின் மனநிலையில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவது அவசியம். பெற்றோர்கள் தங்கள் கஷ்டங்களை, மன அழுத்தங்களை குழந்தைகளிடம் ஒருபோதும் திணிக்கக் கூடாது. அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து வழிநடத்த வேண்டும். 

இதன் ஒருபகுதியாக, கர்ப்பகாலம் முதல் குழந்தையின் பதின்வயது வரை தாய்மார்கள் மனச்சோர்வு அடையக்கூடாது என்று கூறுகிறது ஓர் ஆய்வு. ஏனெனில், மனச்சோர்வுள்ள தாய்மார்களின் குழந்தைகள் இளம்பருவத்தில் தற்கொலை எண்ணங்களை அனுபவிப்பதற்கும் தற்கொலைக்கு முயற்சிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறும் இந்த ஆய்வின் முடிவுகள் 'வளர்ச்சி மற்றும் மனநோயியல்' இதழில் வெளியிடப்பட்டன. 

குழந்தை பிறப்பு முதல் 20 வயது வரை உள்ள 1,600 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தாய்மார்களின் மனச்சோர்வு, குழந்தைகளின் மனநிலை குறித்து ஆராயப்பட்டது. 

இதில் 13 வயது முதல் 20 வரையுள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணங்களுக்கு பெற்றோர்களின் மனநிலை காரணமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. 

அதாவது அம்மாக்களின் மன அழுத்தம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் இளம் பருவத்தில் பிரச்னைகளை சந்திக்கும்போது தற்கொலை முயற்சிக்கு செல்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

அதிலும் மனச்சோர்வு அதிகம் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு இது 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று உச்சரிக்கப்படுகிறது. 

இளம்வயதினரின் தற்கொலை முயற்சிக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும், அந்த சூழ்நிலையை அவர்கள் கடப்பது தாய்மார்களின் எண்ணங்களைச் சார்ந்தது உண்மைதான். 

தாய் ஒருவர் குழந்தை பிறப்பு முதல் மிகவும் மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருக்கிறார் என்றால் அந்த குழந்தை இளம் வயதில் தைரியமாக அனைத்து பிரச்னைகளையும் எதிர்கொள்ளும். அதே தாய், பிரசவம் முதல் குழந்தை வளரும் வரை மனசோர்வுடன் காணப்பட்டால் குழந்தைகளுக்கு கடினமான சூழ்நிலையில் தற்கொலை எண்ணங்கள் வரும் என்கின்றனர். 

எனவே, பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் குழந்தைகள் வளர்ப்பில் தங்கள் மனநிலையையும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும். தற்கொலை  எண்ணங்களுக்கு மரபியல் அல்லது பிற காரணிகள் இருப்பினும் குழந்தைகள் பிரச்னைகளை எதிர்கொள்ள தயார்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பெரும்பலாக இளம் வயதினர் தங்கள் உணர்வுகளை யாரிடமும் சொல்லாமல் தனிமையை உணர்வதால் இளைஞர்களிடம் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர், எனவே தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக இருந்து அவர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப வழிநடத்துங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com