குழந்தைகளின் மனநலனைப் பாதுகாக்க...
By | Published On : 19th October 2021 06:15 PM | Last Updated : 19th October 2021 06:21 PM | அ+அ அ- |

குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவர்களை இயற்கையோடு ஒன்றிணைந்து வளர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கை மனிதனுக்குக் கிடைத்த கொடை. தன்னை மறந்து இயற்கையை ரசிப்பவர்கள் பலர். மனதுக்கு இதமளிக்கும் இயற்கை அழகு அனைவரையும் வசீகரிக்கும்.
இயற்கை மனநிலையுடன் தொடர்புடையது. இயற்கையான சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்பது உண்மை. மனநிலை சரியில்லாதவர்கள்கூட சுற்றுலா இடங்களுக்கு சென்று வருவதுண்டு. அது மனதுக்கு அமைதியை ஏற்படுத்தும்.
அந்தவகையில் இயற்கை குழந்தைகளிடமும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையோடு இணைந்த குழந்தைகளுக்கு உணர்ச்சிகள் குறித்தப் பிரச்னை குறைவாக இருக்கிறது.
இயற்கையோடு வாழும் குழந்தைகள் இயல்பாக நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இயற்கையின் மீது தொடர்பு இருக்கும் குழந்தைகள் இயல்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு கோபம், பதட்டம் போன்ற பிரச்னைகள் இல்லாதிருப்பது தெரிய வந்துள்ளது.
குழந்தைகளுக்கு புத்தக அறிவுடன் இயற்கை சார்ந்த அறிவும் அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள். குழந்தைகளை அதிக நேரம் வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும், பள்ளிகளில் தோட்டக்கலை, பின்தங்கிய பகுதி மக்களின் நிலை அறிதல் என இயற்கை மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைந்து இருக்கும்பட்சத்தில் குழந்தைகள் இயல்பாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள குழந்தைகளின் மன ஆரோக்கியம் குறித்து பெற்றோர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவர்களை இயற்கையோடு விளையாட விடவேண்டும் என்று தெரிவித்தார்.