காதலர் தினத்தைக் கொண்டாட நீங்க ரெடியா?
By IANS | Published On : 02nd February 2022 01:28 PM | Last Updated : 02nd February 2022 04:50 PM | அ+அ அ- |

காதலர் தினத்தைக் கொண்டாட நீங்க ரெடியா?
பிப்ரவரி மாதம்.. இந்த மாதத்தின் பெயரைக் கேட்டதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது காதலர் தினம். காதலைச் சொல்லவும், காதலை உறுதி செய்து கொள்ளவும் உகந்த மாதமாகும்.
காதல் எனும் தேர்வெழுதி காத்திருக்கும் மாணவர்கள் பலருக்கும் தேர்வு முடிவு வெளியாகும் மாதமல்லவா இது. காதல்.. உயிர்களை இணைக்கும் ஒற்றைப்புள்ளி. மனங்களை இணைக்கும் இரும்புப் பாலம். அதனை ஒரே நாளில் கொண்டாடி முடித்துவிட முடியுமா என்ன? அதுவும் காதல் என்றால் காதல் மட்டும்தானா? அன்பு, பாசம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லாதா?
இதையும் படிக்க.. தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
காதலுக்குரிய மாதமாக பிப்ரவரி மாதத்தை உலகமே அங்கீகரித்துள்ளது. ஆனால், காதலர் தினம் மட்டுமல்ல.. ஒருவர் தன்னைத் தானே விரும்பவும், நேசிக்கவும், தன் நலம் குறித்து கவனிக்கவும் கூட இந்த மாதம் ஊக்குவிக்கிறது. குடும்பத்துடனான உறவு, நண்பர்கள், வாழ்க்கைத் துணை என அனைவரின் பேரிலான அன்பையும் வெளிப்படுத்த இந்த மாதத்தை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தலாம். தவறேதுமில்லை.
365 நாள்களைக் கொண்ட ஓராண்டில் காதலர் வாரம் என்ற அந்த 7 நாள்கள்தான் மிகவும் அழகான நாள்கள். இந்த நாள்களில் காதலர்கள், தம்பதிகள் பலரும் ஒன்றாக தங்களது நாள்களை செலவிட விரும்புவார்கள். குடும்பங்களும் ஒன்றாக இணைந்து இந்த வாரத்தைக் கொண்டாடலாம்.
எனவே, இந்த ஆண்டு காதலர் வாரத்தை மறக்க முடியாத வகையில் கொண்டாட இங்கு சில டிப்ஸ்களை வழங்கவிருக்கிறோம். அது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த 7 நாள்களைக் கொண்ட ஒரு வாரத்தில் நீங்கள் விரும்புபவருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பரிசு வீதம் 7 பரிசுகளை அல்லது 7 நிறத்தில் ஒவ்வொரு நாளும் ரோஜாக்களை அளித்து அசத்தலாம்.
பிப்ரவரி 8ஆம் தேதி ஆரம்பிக்கிறது கொண்டாட்டம்.
பிப். 8 - காதலைச் சொல்லும் நாள்..
பொதுவாக காதலிப்பவர்கள் இந்த நாளில் தங்களது இணையர்களிடம் காதலை வெளிப்படுத்துவார்கள். காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணத்துக்கான விருப்பத்தை சொல்வார்கள். பிப். 9 - சாக்லேட் நாள்..
அனைவருக்குமே பிடித்த நாள். தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்ளும் நாளாக இது இருக்கும்.
பிப். 10 - டெட்டி நாள்
பெண்களுக்கு பொதுவாக கரடி பொம்மைகள் அதிகம் பிடிக்கும். எனவே, தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு கரடி பொம்மையை பரிசளிப்பது இந்த நாளில் வழக்கம். சிலர், காதல் ரசம் சொட்ட சொட்ட கரடி பொம்மையை பரிசளித்து அந்த நாளை மிக இனிய நாளாக மாற்றவும் செய்வார்கள்.
பிப். 11 - உறுதியளிக்கும் நாள்
இந்த நாள் நாம் காதலிக்கும் அல்லது அன்பு செலுத்தும் நபர்களுக்கு அவர்களை எப்படிப் பார்த்துக் கொள்வோம் என்பது குறித்து உறுதியளிக்கும் நாள். உங்கள் உறவை உறுதி செய்ய, உங்கள் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் நாளாகக் கூட இதைக் கொள்ளலாம்.
பிப். 12 - அரவணைப்பு நாள்
தங்களது காதலை அழகாக வெளிப்படுத்தும் நாள். நாம் அன்பு செலுத்தும், பாசம் காட்டும் நபர்களை அரவணைத்து, நமது அன்பை பரிமாறும் நாளாகக் கூட இதைக் கூறலாம். நாம் ஒருவரை எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதை அரவணைப்பால் வெளிப்படுத்தும் நாள். பிப். 13 - முத்தம் நாள்
வெளிநாடுகளுக்கு இது பொருந்தும். முத்தமிட்டு, தங்களது அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.பிப். 14 - காதலர் தினம்
நீங்கள் கொண்ட காதலை நீங்களும், நீங்கள் காதலிப்பவரும் உணரும் நாள். இதனை மிக அழகாகத் திட்டமிட்டுக் கொண்டாடுபவர்களும் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து, கொண்டு, வாழ்க்கையைப் புரிந்து கொண்டு காதலை வளர்த்து, தாங்களும் வளர்ந்து.. வாழ்நாளெல்லாம் காதலிக்கும் பேறு பெறலாம்.