மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

நாட்டில் தற்போது சுமார் 40 முதல் 50% கருவுறாமை பிரச்னைகளுக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர்...
Metabolic syndrome: Symptoms and causes
மெட்டபாலிக் சின்ட்ரோம் எனும் வளர்சிதை மாற்றப் பிரச்னை பற்றி... |கோப்புப்படம்IANS
Published on
Updated on
2 min read

மெட்டபாலிக் சின்ட்ரோம் எனும் வளர்சிதை மாற்றப் பிரச்னை சத்தமில்லாமல் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது வருங்காலத்தில் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது வளர்சிதை மாற்ற நோய்க்குறி எனப்படுகிறது. இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவற்றின் அபாயத்திற்கான நிலை. அதாவது இந்த நோய்கள் வருவதற்கு முந்தைய நிலை என்று கூறலாம்.

ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு, அதிகப்படியான தொப்பை(வயிற்றைச் சுற்றி கொழுப்பு காணப்படுதல்), அதிக ட்ரைகிளிசரைடுகள், உடலில் நல்ல கொழுப்பு குறைவாக இருப்பது(கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது) ஆகிய 5 காரணிகளில் 3 பாதிப்புகள் இருந்தால் அவருக்கு மெட்டபாலிக் சின்ட்ரோம் இருக்கலாம்.

டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவது, உடல் பருமன், மன அழுத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தாலும் இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி இருக்கலாம் என ஐவிஎப் சிகிச்சை நிபுணர் டாக்டர் கௌரி அகர்வால் கூறுகிறார். மேலும் இது கருத்தரித்தலில் குறிப்பாக ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைக்கு காரணமாகிறது என்று கூறுகிறார்.

அதிக உடல் எடை, சருமம் கருமையாகுதல், தொடர்ந்து சிறுநீர் கழிப்பது, அதிக தாகம், தூங்கும்போது குறட்டை விடுதல், தூக்கத்தில் மூச்சு விடுவது சிரமம் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம்.

கேள்விகளும் பதில்களும்...

இந்தியாவில் ஆண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரிப்புக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி காரணமா?

உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு போன்ற பிரச்னைகளை உள்ளடக்கிய வளர்சிதை மாற்ற நோய்க்குறி, இந்தியாவில் ஆண் மலட்டுத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணமாக மாறி வருவது உண்மைதான். இது ஹார்மோன் அளவை பாதிக்கிறது. விந்தணுக்களைச் சேதப்படுத்துகிறது. குறைந்த விந்தணு எண்ணிக்கை, மோசமான விந்தணு இயக்கம் ஏன் சில சூழ்நிலைகளில் விந்தணு இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் கருவுறாத தம்பதிகளில் சுமார் 23% ஆண்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளது. இந்தியாவில் 25% ஆண்களின் விந்தணு மட்டுமே தரமானதாக இருக்கிறதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போது சுமார் 40 முதல் 50% கருவுறாமை பிரச்னைகளுக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர்.

வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் எந்த பிரச்னைகள் கருவுறுதலில் ஆண்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகின்றன?

உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகிய இந்த இரண்டும் கருவுதலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இது ஆண்களிடையே டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவைக் குறைகிறது, ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கிறது. இதனால் விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை, இயக்கம், டிஎன்ஏ ஆகியவற்றை சேதப்படுத்துகிறது. இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு நோயுடன் தொடர்புடையது.

வாழ்க்கை முறையை மாற்றுவதால் இதனைத் தடுக்க முடியுமா?

வாழ்க்கை முறை மாற்றங்கள் கண்டிப்பாக வளர்சிதை மாற்ற நோய்க்குறி பிரச்னையை சரிசெய்யும்.

உடல் எடையைக் குறைப்பது, சத்தான உணவு உட்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது, யோகா, தியானம் செய்வது, சுறுசுறுப்பாக இருப்பது, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கலாம், விந்தணுக்களின் தரத்தையும் இயக்கத்தையும் மேம்படுத்த வாய்ப்புள்ளது.

2023 ஆம் ஆண்டு 'ஃபிரன்டியர்ஸ் இன் எண்டோகிரைனாலஜி'யில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இதுபோன்ற வளர்சிதை மாற்றப் பிரச்னைகளை சரிசெய்யும்போது இயற்கையாகவோ அல்லது மருத்துவ உதவியுடனோ கருவுறுதல் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகிறது.

மெட்டபாலிக் சின்ட்ரோம் - ஆரம்ப அறிகுறிகள் என்ன?

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு குறைவது, அதிக வேகமான இன்சுலின், உடல் எடை அதிகரிப்பினால் கூடும் பிஎம்ஐ, இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு ஆகியவை சில ஆரம்ப அறிகுறிகளாகும்.

வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆண்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

வளர்சிதை மாற்ற நோய்க்குறி நிலைமைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படும் சில மருந்துகள், ஆண்களின் உடல்நலத்தை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கின்றன.

டைப் 2 நீரிழிவு நோய்க்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மெட்ஃபோர்மின், இன்சுலின் அளவை சரியாக வைத்திருப்பதன் மூலம் விந்தணுக்களின் தரம் மேம்படலாம். குறிப்பாக வளர்சிதை மாற்ற பிரச்னைகள் உள்ள ஆண்களிடையே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் சில ஸ்டேடின்கள் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஆன்டிஹைபர்டென்சிவ்கள் சிலருக்கு ஹார்மோன் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனினும் இதனால் அனைத்து ஆண்களும் பாதிக்கப்படுவதில்லை. அதுபோல ஒவ்வொருவருக்கும் பக்க விளைவுகள் மாறலாம். மருந்துகளை எடுத்துக்கொள்வதால் ஹார்மோன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

Summary

What Is Metabolic Syndrome? Symptoms and causes and it affects fertility - doctor interview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com