புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்!

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய புத்தாண்டில் எடுக்க வேண்டிய10 முக்கிய தீர்மானங்கள்!
புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்!
ANI
Published on
Updated on
2 min read

2025 புத்தாண்டையொட்டி உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டில் புதிய தீர்மானங்களை எடுப்பதும் அதில் பெரும்பாலானோர், சில நாள்கள் மட்டும் அந்த தீர்மானங்களை பரபரப்பாகக் கடைப்பிடித்து பின்னர் பாதியிலேயே விட்டுவிட்டு ஆண்டு இறுதியில் 'எதுவும் செய்யவில்லையே' என கவலைப்படுவதும் வாடிக்கையானதுதான்.

சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பலரும் பதிவிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஒருசிலர் இதற்கு விதிவிலக்கு. தீர்மானங்களில் பெரும்பாலானவற்றை அல்லது ஒன்றிரண்டையாவது நிறைவேற்றியிருப்பார்கள்.

இந்த சூழ்நிலையில் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், சிறிதேனும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கு தீர்மானங்கள் குறித்த சில பரிந்துரைகள்...

1. புதியதை கற்றுக்கொள்ள..

வரும் ஆண்டில் உங்கள் வேலைசார்ந்து புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கலாம். புது படிப்பு, புதிய திறன் என ஏதாவது ஒன்றை புதியதாகக் கற்றுக்கொள்ளலாம். இது பொருளாதார ரீதியாகவும் உங்களை மேம்படுத்தும்.

2. படிக்க..

அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். அவ்வப்போது படிப்பவராக இருப்பின் தொடர்ந்து புத்தகம் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பயன்படும்.

3. சேமிப்பு

இன்றைய வாழ்க்கைக்கு அவசியத் தேவை பணம். எனவே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். எதிர்கால நலன் கருதி இந்தாண்டு முதல் குறைந்தபட்சமாவது சேமிக்கத் தொடங்குங்கள். செலவுகளையும் முடிந்தவரை குறைக்கலாம்.

4. தவறான பழக்கங்கள்

தவறான பழக்கவழக்கங்களை கைவிட இந்தாண்டு முடிவு செய்யலாம். அது சிறிய கோபம் முதல் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய விஷயங்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது உங்களுக்கு மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும்.

5. உடல்நலம்

நோய்களில் இருந்து தப்பிக்க உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே, சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டுவரலாம். இதனை தொடர்ந்து பின்பற்றுவதுதான் சவால் என்பதை மனதில் வைத்துகொள்ளவும்.

6. மனநலம்

மனநலம் சார்ந்த பிரச்னைகள் தற்போது அதிகமாக இருக்கிறது. மனநல பாதிப்பால் உடல்ரீதியான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எனவே, மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வாழ்க்கைமுறையைப் பின்பற்றலாம். நாள்தோறும் தியானம் செய்ய முயற்சிக்கலாம்.

7. பயணம்

உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு அல்லது செல்ல வேண்டும் என்று நினைத்த இடங்களுக்கு இந்தாண்டு சென்றுவர திட்டமிடலாம். பயணங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். புதிய அனுபவங்களைக் கொடுக்கும்.

8. குடும்பம்

'வேலை வேலை..' என்று இருக்கும் பெரும்பாலானோரை பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிலர் அலுவலகம் முடிந்தாலும் வீட்டிற்கு வந்து லேப்டாப்பை திறந்துவைத்துக்கொண்டோ அல்லது அலுவலக நண்பர்களுடன் வேலைரீதியாக பேசிக்கொண்டோ அல்லது புலம்பிக்கொண்டோ இருப்பார்கள். அவர்கள் இன்று முதலாவது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம். அலுவலக நேரத்தைத் தவிர மற்ற நேரத்தை குடும்பத்துக்கென்று ஒதுக்கலாம்.

9. தூக்கம்

தூக்கம் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், பல காரணங்களால் யாரும் சரியான நேரத்திற்கு தூங்குவதில்லை. வேலையாக இருக்கலாம், அல்லது போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம். எதுவாகினும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வத்தையும் குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்குவதையும் பழக்கப்படுத்துங்கள்.

10. மின்னணு சாதனங்கள்

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இன்றைய வாழ்க்கைமுறை மாறியதற்கு காரணமே டிஜிட்டல் சாதனங்கள்தான். வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் மொபைல் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சமூக வலைத்தளங்கள்தான் வாழ்க்கை என்றே இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இருக்கிறார்கள். மொபைலையும் சமூக வலைத்தளங்களையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் தீர்மானத்தை எடுங்கள்.

வாரத்தில் ஒருநாள் அல்லது சில மணி நேரங்களாவது மொபைல் போனை பயன்படுத்தாமல் இருக்கும் உறுதிப்பாட்டையும் எடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com