
எந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடியவில்லையா? எதையும் நினைவில் வைத்திருக்க முடியவில்லையா? யாரேனும் கேள்வி கேட்டால் நீண்ட நேரம் கழித்து பதில் அளிக்கிறீர்களா? அப்படியெனில் உங்களுக்கு இந்த பிரெயின் ஃபாக்(brain fog) பிரச்னை இருக்கலாம்.
2019 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து நாட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் ஓரிரு ஆண்டுகளுக்கு நீடித்த இந்த வைரஸ் பரவல், சிகிச்சைகள், பாதுகாப்பு வழிமுறைகள், தடுப்பூசிகளின் மூலமாக ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது என்று கூறலாம். எனினும் தற்போது சில நாடுகளில் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. முந்தைய கரோனா வைரஸ் வகைகளைப் போன்று இதன் பாதிப்புகள் இருக்காது என்று கூறப்படுகிறது.
கரோனாவுக்குப் பிறகு பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் கரோனாவுக்குப் பின் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நினைவாற்றல் உள்ளிட்ட மூளை தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக 'பிரெயின் ஃபாக்' எனும் பிரச்னை அதிகம் பேசப்படுகிறது. பிரெயின் ஃபாக் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? எப்படி தடுப்பது? பார்க்கலாம்.
பிரெயின் ஃபாக்
பிரெயின் ஃபாக் என்பது மருத்துவ ரீதியாக இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், மருத்துவத்தில் இந்த சொல் இல்லை என்றாலும் நினைவாற்றல் தொடர்பான பிரச்னைகளை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். மேலும், கரோனா காலத்திற்கு பின்னர் இதுபற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ளன.
நினைவாற்றல் குறைவது, கவனம் செலுத்துவதில் சிரமம், சரியான தூக்கமின்மை, நினைவில் குழப்பம், மறதி ஆகியவையே இந்த பிரெயின் ஃபாக் கோளாறு.
தொற்றுநோய்களிலிருந்து மீண்டு வருபவர்களிடமும் குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் இது அதிகம் காணப்படுவதாக கொச்சி அமிர்தா மருத்துவமனையின் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கோபிகிருஷ்ணன் கூறுகிறார். கரோனா நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சிதைத்து மூளையின் செயல்பாட்டைக் குறைப்பதால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் அருண் நாயர் இதுபற்றி "படிப்படியாக நினைவாற்றல் குறைவதில் இருந்து இது தொடங்கலாம். புதிய விஷயங்களை ஞாபகம் வைத்திருக்க முடியாமல் போகலாம். ஒருவர் உங்களிடம் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல நீங்கள் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம். மேலும் பகல்நேர தூக்கம், சோர்வு, மந்தநிலை ஆகியவற்றுடன் இது தொடர்புடையது. எண்ணங்களின் மந்த நிலை காரணமாகவே நாம் பதில் சொல்வதற்கும் மற்ற வேலைகளைச் செய்வதற்கும் தாமதம் ஆகிறது.
இதனால் நீங்கள் அன்றாட வேலைகளைச் செய்ய இயலாது. சிலருக்கு இதனால் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வாழ்க்கையில் இனி முன்னேற முடியாது என்று சிலர் உணர்வார்கள். கரோனா மற்றும் அதற்கு பிந்தைய காலத்தில் நடுத்தர மற்றும் முதியோர்களிடம் இந்த பிரச்னைக்கான அறிகுறிகள் இருந்தன.
பிரெயின் ஃபாக் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அவர்கள் படித்ததை மனப்பாடம் செய்ய முடியாமல் போகலாம், பகல்நேர தூக்கம், சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கலாம். மேலும் தலைவலி, எரிச்சல், நினைவாற்றல் குறைபாடு, மனரீதியான பிரச்னைகள் ஏற்படலாம்" என்று தெரிவித்தார்.
காரணங்கள்
கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதன் பின்னர் ஏற்பட வாய்ப்புள்ளது.
நோயெதிர்ப்பு சக்தி குறைவினால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு
வைட்டமின் டி குறைபாடு
தூக்கக் கோளாறுகள்
தீவிர மன அழுத்தம்
ஊட்டச்சத்து குறைபாடு
மது மற்றும் புகைப்பழக்கம்
சிகிச்சை
"பிரெயின் ஃபாக் அறிகுறிகள் இருந்தால் எதனால் பிரச்னை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். வைட்டமின் குறைபாடு, தூக்கத்தில் பிரச்னை, தைராய்டு அல்லது வேறு உடல்நல பிரச்சனைகள் என காரணத்தைக் கண்டறிவது முதலில் முக்கியம். இதற்கு நீங்கள் மருத்துவர் உதவியை நாடலாம்.
அதன்பின்னர் அந்த பிரச்னையை சரிசெய்ய முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். வைட்டமின் குறைபாடு என்றால் உணவுகள், மருந்துகள் மூலம் சரிபடுத்துவது, சரியான நேரத்திற்கு தூக்கம், குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவது, உடல் ரீதியான பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுப்பது என மற்ற பிரச்னைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
மன அழுத்தத்தைச் சரி செய்யவும் முயற்சிக்க வேண்டும். சத்தான ஊட்டச்சத்து மிக்க உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவது மட்டுமின்றி தேவைப்பட்டால் மன நல ஆலோசனைகளையும் பெறலாம். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வைட்டமின் டி குறைபாட்டுக்கு சூரிய ஒளியைப் பெறலாம்." என்று டாக்டர் அருண் கூறினார்.
சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர் கோபிகிருஷ்ணன் கூறுகையில், "அமைதியான வாழ்க்கை முறை இருந்தாலே இளம் மற்றும் நடுத்தர வயதினர் நினைவாற்றல் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். ஏனெனில் இந்த நினைவாற்றல் கோளாறு உங்கள் வேலையை, மனநிலையை ஏன் உறவுகளைக்கூட பாதிக்கும். உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றின் மூலமாகவே இதன் அறிகுறிகள் பெரும்பாலும் குறைந்துவிடும்" என்று டாக்டர் கோபிகிருஷ்ணன் தெரிவித்தார்.
செய்ய வேண்டியவை
இரவில் 8 மணி நேர தொடர்ச்சியான தூக்கம் அவசியம்.
உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து இருக்க வேண்டும். போதுமான தண்ணீர் அல்லது பழச்சாறுகளை அருந்த வேண்டும்.
அதிக புரதம், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் கொண்ட சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவு தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குறைந்தது இரவு 8 மணிக்கு முன் சாப்பிட்டுவிட வேண்டும். குறைந்தது உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னராவது சாப்பிட வேண்டும். இரவில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது என்பதை கடைப்பிடிக்க வேண்டும்.
summary
Are you having trouble concentrating? Are you unable to remember anything? Do you take a long time to answer someone's question? If so, you may have Brain fog.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.