தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? ஏன்? யாருக்கெல்லாம் பாதிப்பு வரும்?

'ஸ்லீப் அப்னியா' எனும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்னை பற்றி...
sleep apnea
கோப்புப் படம்IANS
Published on
Updated on
2 min read

தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படுவது ஒரு தீவிரமான அல்லது பொதுவான தூக்கக் குறைபாடு. சாதாரணமாக எல்லாருக்குமே தூக்கத்தின்போது மூச்சு தடைபட்டு பின்னர் சரியாகிவிடும். இது ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கும். ஆனால், சிலருக்கு அதிக நேரம் மூச்சு தடைபடும்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதாவது 10 நொடிகள் முதல் அதிகபட்சமாக ஒரு நிமிடம் வரை மூச்சு தடைபடும்போது அதனை 'தூக்கத்தில் மூச்சுத்திணறல்'(sleep apnea) என்கிறோம்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஒருவருக்கு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஏற்படலாம். தூங்கிக்கொண்டிருக்கும்போது மூச்சு பகுதியளவு தடைபடலாம் அல்லது முழுமையாக தடைபடலாம். தொண்டைப் பகுதியில் உள்ள தசைகள் அதிகம் தளர்வடைந்து காற்றோட்டத்தைத் தடுக்கின்றன. இதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சு தடைபடுகிறது. அப்போது மூளை, சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் தசைகளுக்கு தகவலை வழங்குவதில்லை. இதில் பொதுவான, சிக்கலான மூச்சுத்திணறல் என வகைகள் இருக்கின்றன.

அறிகுறிகள் என்ன?

ஒருவர் தூக்கத்தில் இருக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதால் இதனைக் கண்டறிவது சற்று சவாலானதுதான். பொதுவான மூச்சுத்திணறலுக்கு குறட்டைச் சத்தம் ஒரு முக்கியமான அறிகுறியாகும்.

அடுத்த கட்டமாக தூக்கத்தின்போது கடுமையான மூச்சுத் திணறல், அடிக்கடி இரவு நேரத்தில் விழிப்பது, பகல்நேர சோர்வு, தொண்டை வறண்டு போதல், தொண்டை வலி, காலையில் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.

இந்தியாவில்...

தற்போது இந்தியாவில் குறிப்பாக நகர்ப்புறங்களில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் பலருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை எனில் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய், நினைவாற்றல் பிரச்னைகள், கவனம் செலுத்துவதில் சிரமம், எரிச்சல் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் நுரையீரல் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பி.எஸ். ஷாஜஹான் கூறுகிறார்.

"சாலைப் போக்குவரத்து விபத்துகளுக்கு ஓஎஸ்ஏ எனும் பொதுவான தூக்க மூச்சுத்திணறல்தான் காரணமாக இருக்கலாம். ஏனெனில் மேற்கத்திய நாடுகளில் சாலை விபத்துகளில் 10-15% வாகன ஓட்டிகள் தூங்குவதால்தான் ஏற்படுகிறது. மேலும் குறட்டை சத்தம், உடன் படுத்திருப்பவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கிறது. இதனால் உடன் இருப்பவர்களும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தம்பதிகளுக்கு இடையே விவாகரத்தும் நடைபெறுகிறது. தூக்கத்தில் மூச்சுத்திணறலால் ஏற்படும் ஒரு முக்கியமான சமூக உளவியல் பிரச்னை" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இதுபற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் இன்னும் பல பேருக்கு இதனால் பாதிக்கப்படுவது தெரியவில்லை என்ற நிலைமையும் இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர வயதினரில் 10-20% பேர் இதனால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அறிகுறிகள் தீவிரமாகும்வரை மக்கள் பெரும்பாலும் மருத்துவர்களை அணுகுவதில்லை, இதனால் தொடக்கத்திலேயே இந்த பிரச்னையை கண்டறிவது சவாலாக இருப்பதாகக் கூறுகிறார்.

யாருக்கு அதிகம் பாதிப்பு?

உடல் பருமன் இருப்பவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக கழுத்தில் அதிக கொழுப்பு, கழுத்துப் பகுதி தடிமனாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை வரலாம்.

அடுத்து வயதும் ஒரு முக்கியமான காரணி. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தல், மது அருந்துதல், மரபியல் காரணிகள், நீரழிவு நோய், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை எனில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கடுமையாக குறைந்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதுடன் நேரடியாக இதயத்தைப் பாதிக்கும். நீரழிவு நோயுடன் தொடர்புடையது என்பதால் உடல், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிரமம் ஏற்படும். இதனால் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மனச்சோர்வு, பதட்டம், மனநலக் கோளாறுகள் ஏற்படலாம். நினைவாற்றலில் பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன் முடிவெடுப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.

சிகிச்சைகள்...

பாலிசோம்னோகிராஃபி என்பது இதற்கான மிகவும் துல்லியமான பரிசோதனை. தூங்கிக்கொண்டிருக்கும்போதுதான் இந்த பரிசோதனையை செய்ய முடியும். தூக்கத்தின்போது மூளை செயல்பாடு, இதயத் துடிப்பு, சுவாசம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது.

மேலும் இந்த தூக்க கோளாறின் வகை மற்றும் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சை மாறுபடும். பொதுவான லேசான அறிகுறிகள் இருப்பவர்கள், உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்சி, உணவு முறைகளில் மாற்றம், மது, புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது என வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.

மிதமானது முதல் தீவிரமான பிரச்னை இருந்தால் காற்றோட்டத்தை மேம்படுத்தும் காற்றோட்டத்தில் உள்ள தடைகளை நீக்கும் இயந்திரத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலமாக சீரான காற்று கிடைப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படாது.

மிகவும் தீவிரமான பிரச்னை உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம், தொண்டையில் டான்சில் வளர்வது அல்லது விலகுவது, செப்டம் விலகல் போன்றவற்றால் மூச்சுத்திணறல் ஏற்பட வழிவகுக்கும். முதல்நிலை சிகிச்சைகள் முடிந்து தேவைப்பட்டால் கடைசி கட்டமாக அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com