பிசிஓஎஸ் உள்ள பெண்கள் கர்ப்பமாக முடியாதா? காரணம் என்ன? எப்படித் தடுக்கலாம்?

பெண்களுக்கு பிசிஓஎஸ் எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்னை ஏன் ஏற்படுகிறது? தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?
pregnancy
கோப்புப் படம் ENS
Published on
Updated on
3 min read

பிசிஓஎஸ் எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறைபாடு கருத்தரிக்கும் வயதுடைய பெண்கள் அல்லது இளம் பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான ஹார்மோன் மாறுபாடு. பெண்கள் கருவுறாமைக்கான மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று.

பெண்களுக்கு இந்த பிசிஓஎஸ் பிரச்னை ஏன் ஏற்படுகிறது? தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? பிசிஓஎஸ் இருந்தால் கருத்தரிக்க முடியாதா? விரிவாகப் பார்க்கலாம்.

பிசிஓஎஸ் என்பது என்ன?

பிசிஓஎஸ் என்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு நிலை. கரு முட்டைகளை உற்பத்தி செய்து வெளியிடும் கருப்பை, அதிகப்படியான ஹார்மோன்களை உருவாக்குவதே பிசிஓஎஸ். அதாவது உங்களுக்கு பிசிஓஎஸ் இருந்தால் உங்களுடைய கருப்பை, ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன்களை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இதனால் கருவுறுதலுக்கு சிரமம் ஏற்படுகிறது.

பாதிப்புகள் என்னென்ன?

இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாய் தாமதம், கணிக்க முடியாத அண்ட விடுப்பு, ஆண்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாக அதிகப்படியான முடி வளர்ச்சி அல்லது முடி உதிர்தல், முகப்பரு, எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பதில் சிரமம், தோல் கருமையாகுதல், பாலிசிஸ்டிக் ஓவரிஸ் எனும் கருப்பையில் நீர்க்கட்டிகள், கருச்சிதைவுகள், கருவுறாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், பிசிஓஎஸ் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, பதற்றம், மனச்சோர்வு, கருப்பை புற்றுநோய் ஆபத்தும் ஏற்படலாம்.

காரணங்கள் என்ன?

உட்கார்ந்தே வேலை செய்யும் முறை, ஆரோக்கியமற்ற உணவு முறைகள், உடல் பருமன், மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இந்தியாவில் பிசிஓஎஸ்

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பிசிஓஎஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஆய்வுகளின்படி, இந்தியாவில் குறிப்பாக நகரங்களில் 9 -22% வரை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இது அதிகம். 2021 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், பதின்வயது பெண் குழந்தைகளிடையே பிசிஓஎஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் பிசிஓஎஸ் ஒரு தடை செய்யப்பட்ட கோளாறாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் மாதவிடாய் குறித்து பெண்கள் வெளியில் அதிகம் பேசுவதில்லை. மாதவிடாய், கருத்தரித்தல் என பெண்களின் உடல்ரீதியாக நடக்கும் நிகழ்வுகளை பேசத் தயங்குகின்றனர். பலரும் இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூச்சப்படுகின்றனர். பிசிஓஎஸ், கருவுறாமை ஆகிய பிரச்னைகளை சரிசெய்ய பெண்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏனெனில், ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அவருக்கு குடும்பத்தில் மட்டுமின்றி சமூக அழுத்தமும் ஏற்படுகிறது. ஆனால், பிசிஓஎஸ் போன்ற பிரச்னைகள் இருப்பது பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதே இல்லை. கருவுறாமைக்கு இது ஒரு காரணம் என்று பலரும் அறிவதில்லை. எனவே, பருவம் அடைந்தது முதலே பெண்கள் சுகாதார பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த டாக்டர் அன்ஷுமாலா சுக்லா கூறுகிறார்.

இந்தியாவில் 5-ல் ஒரு பெண், பிசிஓஎஸ் பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது இதற்கு முக்கிய காரணம் என்றும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் கிருத்திகா தேவி கூறுகிறார். மரபணுவும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சிகிச்சை முறைகள்

பிசிஓஎஸ்-க்கு எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம். அதாவது உணவு முறை மாற்றங்கள், வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை சரிசெய்வதன் மூலமாக அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம் என்று டாக்டர் சுக்லா-குல்கர்னி கூறுகிறார்.

நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கக் கூடாது, இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும், பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்க வேண்டும், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்கிறார்.

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளைத் தவிர்த்து அதற்குப் பதிலாக சிறுதானிய உணவுகளை அதிகம் சாப்பிடவும் பரிந்துரைக்கிறார்.

குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் அடுத்த தலைமுறையினர் இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான எடை மற்றும் வாழ்க்கை முறையை பராமரிப்பது அவசியம் என்றும் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை மூலம் பிரச்னையை சரிசெய்வதன் மூலமாக கருத்தரிக்க முடியும் என்று டாக்டர் கிருத்திகா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மேலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்த ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது அல்லது நிர்வகிப்பது,

இன்சுலின் எதிர்ப்பை சரிசெய்ய மெட்ஃபோர்மின் மருந்துகளை எடுத்துக்கொள்வது,

கருத்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு அண்டவிடுப்பைத் தூண்டுவது போன்ற கருத்தரிக்கும் சிகிச்சைகள்,

முகப்பரு மற்றும் உடலில் ரோமங்களுக்கு ஆண்ட்ரோஜன் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வது,

மனநலப் பிரச்னைகளுக்கான மருந்துகள் அல்லது ஆலோசனை என குறிப்பிட்ட அறிகுறிகளுக்கான மருந்துகளை மருத்துவரின் அறிவுரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

பிசிஓஎஸ் பிரச்னைக்கு காஃபின் தீர்வா?

'நேச்சர் ஜர்னல்' இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, பிசிஓஎஸ் பிரச்னையை காஃபின் சரிசெய்யும் என்று கூறுகிறது.

மிதமான அளவு காஃபின் எடுத்துக்கொள்ளும்போது அது இன்சுலின் அளவை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் பிசிஓஎஸ் பிரச்னையை ஓரளவு மேம்படுத்தலாம் என்றும் இது உடல் பருமனான நோயாளிகளுக்கு உதவும் என்றும் ஹைதராபாத் கேர் மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நிறுவன இயக்குனர் டாக்டர் மஞ்சுளா அனகானி கூறுகிறார்.

உடல் எடையையும் உயரத்தையும் வைத்து கணக்கிடும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) அதிகரிப்பதனால் பிசிஓஎஸ் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, உடல் எடையைக் குறைப்பது இதன் முதல் சிகிச்சை என இந்த ஆய்வு கூறுகிறது.

எனினும் காஃபின் எடுத்துக்கொள்வது பிசிஓஎஸ் பிரச்னையை சரிசெய்யுமா என்பது பற்றிய மேலும் ஆய்வுகள் தேவை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை

கருப்பை துளையிடுதல் எனும் ஆண்ட்ரோஜன் உற்பத்தியைக் குறைப்பதற்கான ஒரு அறுவைச் சிகிச்சை உள்ளது. இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. கருத்தரிப்பதற்கான பிற சிகிச்சைகள் தோல்வியடைந்தால் மட்டுமே இந்த அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் வராமல் இருப்பது.

முகம், உடலில் அதிகப்படியான முடி (ஹிர்சுட்டிசம்)

முகப்பருக்கள், எண்ணெய் பசை சருமம்

எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பதில் சிரமம்

தலைமுடி உதிர்தல்

தோலில் கருமையான திட்டுகள் (அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ்)

மனநிலை மாற்றங்கள் அல்லது மனச்சோர்வு

கருத்தரிப்பதில் சிரமம்

தடுக்கும் வழிமுறைகள்

பிசிஓஎஸ் பிரச்னையை முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பதன் மூலம் இதன் ஆபத்து மற்றும் தீவிரத்தைக் குறைக்கலாம்.

முழு தானியங்கள், புரதம், குறைவான சர்க்கரை என சமச்சீரான உணவை உட்கொள்வது

உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது

மன அழுத்தத்தைக் குறைப்பது

போதிய தூக்கம்

ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய வழக்கமான சுகாதார பரிசோதனை ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com