குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உடல் பருமன், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றி...
child obesity
Published on
Updated on
2 min read

இப்போதைய உணவு முறை, வாழ்க்கைச் சூழல், மரபியல் காரணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதுமே உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் உடல் பருமன் வேகமாக வளர்ந்து வரும் பிரச்னையாக இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பினால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் என பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான நோய்களுக்கு உடல் பருமனே முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்நிலையில் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் உடல் பருமனால் இப்போது அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபற்றிய முழுமையான தரவுகள் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளிடையே ஏற்படும் உடல் பருமன் குறித்து உலக சுகாதார நிறுவனமும் கவலை தெரிவித்துள்ளது. குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடும் முக்கியக் காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

"கடந்த இரு தசாப்தங்களாக நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கம் மாறியுள்ளது. துரித உணவு, பொருந்தா உணவு, அதிக சர்க்கரை மிகுந்த குளிர்பானங்கள், அதிகம் பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் என அதிக கலோரி கொண்ட உணவுகளைக் குழந்தைகள் அதிகம் சாப்பிடுகின்றனர். இது சந்தையில் எளிதாகவும் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் அதிகம் பயன்பாட்டில் உள்ளது" என்று ஆஸ்தர் சிஎம்ஐ மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் பரிமளா திருமலேஷ் கூறுகிறார்.

அதேநேரத்தில் டிஜிட்டல் சாதனங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டினாலும் பள்ளிகளில் அதிக நேர வகுப்பினால் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையாலும் குழந்தைகள் விளையாடுவது இன்றைய காலகட்டத்தில் குறைந்துவிட்டதும் காரணம் என்று கூறுகிறார்.

குழந்தைகளிடையே உடல் பருமனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்டகால நோய்கள் சிறு வயதிலேயே ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கும் மருத்துவர், ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வி இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.

Obesity,
Obesity,

கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளிடையே உடல் பருமன் இரு மடங்கு அதிகரித்துவிட்டதாக பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளைவிட நகர்ப்புறங்களில்தான் பாதிப்பு அதிகமுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் டாக்டர் பரிமளா இதுகுறித்து கூறுகையில் "விற்கப்படும் உடலுக்கு நல்லது என்று சந்தைகளில் மார்க்கெட்டிங் உத்திகளுடன் விற்கப்படும் உணவுப் பொருள்களை பெற்றோர்களும் நம்பி, குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். ஆனால், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கெட்ட கொழுப்புகள், பதப்படுத்த உதவும் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன.

அதேபோல குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடும் உடல் பருமனுக்கு காரணமாகிறது. பள்ளிகளில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு, குழந்தைகளை விளையாடுவதற்கு ஊக்கப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் வேண்டும். மாறாக பள்ளிகளில் உள்ள கேன்டீன்களிலே பதப்படுத்தப்பட்ட அல்லது பொருந்தா உணவுகள்தான் அதிகம் விற்கப்படுவது கவலைக்குரிய விஷயம்.

கடைகளில் பாக்கெட் உணவுப் பொருள்களின் விலை குறைவாக இருப்பதால், நடுத்தர வருமானம் கொண்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அதனை எளிதாக வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் உடல் பருமன் ஏற்படுகிறது" என்றார்.

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் வயிறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.என். ராம்ராஜ் கூறுகையில், "நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் குழந்தைகளிடையே உடல் பருமன் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

உடல் பருமனால் சுகாதார பிரச்னைகள் அதிகமாகி வருவதால், இதனை ஒரு தீவிரமான சுகாதார சவாலாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் இதுகுறித்த தரவுகள் முழுமையாக இல்லை என்பதால் இதனைத் தடுக்கும் நடவடிக்கைகள் சவாலாக உள்ளது" என்றார்.

மேலும், குழந்தைகளிடையே ஏற்படும் உடல் பருமனைத் தடுக்க பள்ளிகள், சுகாதார மையங்கள், சமூக நலத் திட்டங்கள் மூலமாக குழந்தைகளின் உடல்நிலை குறிப்பாக உடல் பருமனைக் கண்காணிப்பது அவசியம் என்றும் இது அவசர நிலையாக மாறுவதற்கு முன், விழிப்புணர்வு, சந்தைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்கும் விதிகளில் மாற்றம் என தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது என்று சுட்டிக்காட்டுகிறார்.

அவ்வாறு இல்லையெனில் அடுத்த மருத்துவ அவசர நிலையாக உடல் பருமன் மாறும் என்றும் இதனால் இறப்புகள்கூட ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.

இறுதியாக, தொற்றுநோய்களைப் போலவே குழந்தைகளிடையே ஏற்படும் உடல் பருமன், மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள், பெற்றோர்கள் இதுகுறித்த விழிப்புணர்வுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தர வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

தொற்றுநோய்கள் குறிப்பிட்ட காலங்களில் மறையக்கூடியவை என்றும் ஆனால் உடல் பருமன், அடுத்தடுத்த படிப்படியான சிக்கல்களை அமைதியாக ஏற்படுத்துவதால் சுகாதாரத் துறைகள் உடல் பருமன் பற்றிய தரவுகளை சேகரித்து அடுத்த இளைய தலைமுறையை இதிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com