

காபி குடிப்பது நல்லதா? எவ்வளவு குடிக்கலாம்? அதிகமாக குடித்தால் விளைவுகள் என்னென்ன?
காலையில் எழுந்தவுடன் டீ / காபி இல்லாமல் பலருக்கும் அந்த நாள் தொடங்குவதில்லை. சிலர் காலை உணவு சாப்பிட்டவுடன் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலருக்கு எந்த சூழ்நிலையிலும் டீ மிகவும் ஆசுவாசமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த டீ அல்லது காபி குடிப்பது உடலுக்கு நல்லதா? எவ்வளவு குடிக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் டீ அல்லது காபியை அளவாக எடுத்துக்கொள்வது உங்கள் வாழ்நாளை அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தினமும் 1-2 கப் காபி குடிப்பது இறப்பு அபாயத்தை 14% குறைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
டஃப்ட்ஸ் ஆய்வில் கடந்த 10 ஆண்டுகளாக 46,000-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் 1 முதல் 2 கப் காபி குடிப்பவர்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய் காரணங்களால் ஏற்படும் இறப்பு குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் தினமும் இரண்டு கப், சர்க்கரை இல்லாத காபி குடிப்பவர்களுக்கு புற்றுநோய்கள் மற்றும் அது தொடர்பான இறப்புகள் 11-16% குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கல்லீரல் கொழுப்பு மற்றும் அழற்சியை காபி குறைப்பதாக 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேல் காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் சிரோசிஸ் நோயால் ஏற்படும் இறப்பு 40% குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவான காபி குடிப்பது, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, அதிக கொழுப்பு உள்ளிட்டவற்றைத் தணிக்க உதவுகிறது. இது குடலில் உள்ள பாக்டீரியாக்களை நல்ல பாக்டீரியாக்களாக மாற்றுவதாகவும் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காபியை அளவாக எடுத்துக்கொள்வது பக்கவாதம், மறதி போன்ற ஏற்படுவதைக் குறைக்கும் என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது.
காபி எப்படி குடிக்க வேண்டும்?
டீ அல்லது காபி என்றவுடன் பால் சர்க்கரை சேர்த்த காபி / டீ என்று நினைத்துவிடாதீர்கள். சிலர் தினமும் பால், சர்க்கரை சேர்த்து 4க்கும் மேற்பட்ட காபி குடிப்பார்கள். அதுவும் இரவு நேரத்தில் எல்லாம் குடிப்பார்கள். இது மிகவும் தவறு என்கின்றனர் நிபுணர்கள்.
பால், சர்க்கரை இல்லாத காபி அல்லது சிறிதளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட பிளாக் காபி குடித்தால் மட்டுமே நன்மைகளைப் பெற முடியும்.
பால், சர்க்கரை இல்லாத பிளாக் காபி தினமும் 1 - 2 கப் குடிக்கலாம். அதுவும் காலையில்தான் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் 16% இறப்பு விகிதம் குறையும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
தேவையெனில் சிறிதளவு இனிப்பு சேர்த்த காபி குடிக்கலாம்.
காபியில் காஃபின் என்ற பொருள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது பதட்டம், தூக்கமின்மை, நரம்புகளில், பிரச்னை போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த காஃபின் அளவு குறைவாக உள்ள காபியை எடுத்துக்கொண்டால் விளைவுகளைக் குறைத்து அதிக நன்மைகளை பெற முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏனெனில் காபியில் சுமார் 1,000 சேர்மங்கள் உள்ளதாகவும் இவற்றில் பல உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.
பால் கலந்து குடிப்பது நல்லதா?
காபியில் 1 அல்லது 2 ஸ்பூன் பால் கலந்து குடித்தால் அது வயிற்றில் அமிலத்தன்மையைக் குறைக்கும். ஆனால் அது குளோரோஜெனிக் அமிலத்தை உறிஞ்சுவதைத் தடுக்கும். பால் மற்றும் சர்க்கரை அதிக கலோரி கொண்டது. இது உடலுக்கு நல்லதல்ல என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதனால் பிளாக் காபிதான் உடலுக்கு நல்லது என்றும் காபி ஒரு பானம்தானே தவிர, அது போதைப்பொருள் அல்ல என்றும் வலியுறுத்தும் மருத்துவர்கள், காபியை அளவோடு எடுத்துக்கொண்டால் உடலுக்கு எந்த பிரச்னையும் இல்லை, சில நன்மைகளைப் பெற முடியும் என்று கூறுகின்றனர்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
இதையும் படிக்க | இந்தியாவில் 9ல் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்! - ஐசிஎம்ஆர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.