
உறவுகள் என்றாலே சண்டை, சச்சரவு எனும் அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் உறவு குறித்த புரிதல்கள் மிகவும் சிக்கலாகியுள்ளன. குறிப்பாக கணவன் - மனைவி உறவில் புரிதல் இல்லாமலே விவாகரத்துகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆரோக்கியமான உறவுக்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்?
ஒரு ஆரோக்கியமான உறவு என்பது பரஸ்பர அன்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, (சுய)மரியாதை ஆகியவற்றைக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது என்று சொல்லலாம். நீங்கள் செய்யும் தவறுகளை விவாதம் செய்யாமல் அவற்றை ஒப்புக்கொள்ளுதலும் திருத்திக்கொள்ளுதலும் இதில் அடங்கும். ஒருவருடனான உறவைப் பேணுவது சாதாரண விஷயமல்ல. பரஸ்பர புரிதலைத் தாண்டி இருவருக்குமே உறவுகளின் மதிப்பு தெரிய வேண்டும். சுதந்திரமும் நம்பிக்கையும் இருக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவில் இருக்கிறீர்கள் என்பதற்கான 5 அறிகுறிகள்...
பரிமாறிக்கொள்ளுதல்
எந்தவொரு செய்தியையும் சரியான முறையில் சேர்த்தால் மட்டுமே அதன் பலன் கிடைக்கும். அதுபோலவே உறவுகளுக்குள்ளும் பரிமாறிக்கொள்ள வேண்டிய விஷயங்களை உடனே தெரிவித்துவிட வேண்டும். பிடித்தவருடன் சில விஷயங்களைப் பகிர்தலிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.
அது அன்பாக, காதலாக இருந்தாலும் சரி, மனக்கசப்புகளாக இருந்தாலும் சரி. அன்பாக இருக்கும்பட்சத்தில் உங்கள் துணையை நீங்கள் மகிழ்விக்க முடியும். அது உறவை மேலும் வலிமையானதாக மாற்றும்.
தவறாக இருக்கும்பட்சத்தில் அதையும் முறையான வழியில் வெளிப்படுத்துவது இருவருக்கு இடையே உள்ள பிரச்னைகளை வெகு விரைவில் சரிசெய்ய உதவும். சுதந்திரமாக கருத்துகளை பரிமாறிக்கொள்ள இருவருமே பரஸ்பர இடமளிக்க வேண்டும். சுதந்திரமாக பேச அனுமதித்தால் மட்டுமே எதிர் தரப்பினரால் மனதில் உள்ளதை வெளிப்படுத்த முடியும். உறவுகள் மட்டுமின்றி வீட்டு பிரச்னைகள், நிதி, பொது பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையாக பேசுவது உறவில் விரிசலைத் தடுக்கும்.
நீங்கள் இவ்வாறு இருந்தீர்களானால் நீங்கள் ஆரோக்கியமான உறவில்தான் இருக்கிறீர்கள்.
விருப்பத்தை மதிப்பது
ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும். அவரவர்க்கு பிடித்த விஷயங்கள் என்று இருக்கும். அதைச் செய்வதற்கு முழு மனதுடன் மகிழ்ச்சியாக அனுமதிக்க வேண்டும். இந்த சுதந்திரம் இருந்தால் மட்டுமே அது ஆரோக்கியமான உறவாகும். பலர், தங்கள் விருப்பத்தைக் கூறினால் அது சண்டையில் கொண்டுபோய் விட்டுவிடுமோ என்று தனக்குளேயே வைத்துக்கொள்வார்கள். அது ஆரோக்கியமானதல்ல. முன்பே சொன்னதுபோல, எதுவானாலும் துணையிடம் எந்த தயக்கமும் இல்லாமல் சொல்வதற்கான சூழலை உருவாக்கியிருக்க வேண்டும்.
அதேநேரத்தில் உங்கள் துணை, தவறான ஒரு பழக்கவழக்கத்தைக் கொண்டிருந்தால் அதைத் தடுக்கவும் தண்டிக்கவும் உரிமை இருக்கிறது.
பிரச்னைகளைப் பகிர்வது
இருவருமே தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை பகிர்ந்துகொண்டு அதை ஒன்றாக சமாளிக்க வேண்டும். நீங்கள் ஒரு பிரச்சனையை மூடி மறைத்தால் அது எதிர்காலத்தில் வெளியே தெரிந்து உங்களுக்கும் துணைக்கும் கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்கக் கூடும்.
ஏதேனும் ஒரு பிரச்னையை உங்கள் துணை வந்து கூறினால் அது ஏன், எப்படி என்று கேட்கலாம். அதற்காக அவரைத் திட்டுவதோ தரக்குறைவாக பேசுவதோ அல்லாமல் 'சரி நடந்துவிட்டது, நாம் சமாளிக்கலாம்' என்று தைரியமான வார்த்தைகளைக் கூறுங்கள். நீங்கள் அப்படி செய்தால் மட்டுமே அவர்கள் அடுத்த முறையும் பிரச்னை என்றால் உங்களைத் தேடி வருவார்கள். மாறாக, திட்டினால் உங்களிடம் இருந்து பிரச்னைகளை மறைக்கத்தான் செய்வார்கள்.
வீட்டு வேலைகளையும் நிதி சார்ந்த பொறுப்புகளையும் பகிர்ந்துகொள்ளுதலும் அவசியம்.
நம்பிக்கை
மனிதர்களுக்கு நம்பிக்கை என்பது அடிப்படையான ஒன்று. நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு உறவில் மன அழுத்தமோ பாதுகாப்பின்மையோ இருக்காது. துணைக்காக ஒரு விஷயம் செய்யும்போது, அதை அவர் நம்புவது, மகிழ்ச்சியைக் கொடுக்கும். வீடு, நிதி, உறவுகள் என அனைத்து விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை இருவரும் தக்கவைத்துக்கொள்ளவும் வேண்டும். அதற்கு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது அவசியம்.
மகிழ்ச்சியாக உணர்தல்
பிடித்தவருடன் நேரம் செலவிட எல்லோருக்கும் பிடிக்கும். உங்கள் துணையுடன் இருக்கும்போது நீங்கள் மகிழ்ச்சியாக உணர வேண்டும். அவருடன் இன்னும் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமான உறவில் இருக்கிறீர்கள்.
ஒன்றாக நேரத்தைச் செலவிடுவதும் பிடித்த விஷயங்களை ஒன்றாகச் செய்வதும் பயணங்கள் மேற்கொள்வதும் உறவில் ஆறுதல், பாதுகாப்பு உணர்வுகளைத் தரும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒருவர் எப்போதும் எல்லாவற்றிலும் துணையாக இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய ஆறுதல்தானே. இந்த 'ஒரு' வாழ்க்கையை வாழ்வதற்கு அதுதானே எல்லாருக்கும் தேவையாகவும் இருக்கிறது.
உறவுகள் மதிப்புமிக்கது...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.