

உடலில் சில புற்றுநோய்க் கட்டிகளை உறைய வைத்து அழிக்க முடியும் என்ற நவீன தொழில்நுட்ப சிகிச்சை முறை புற்றுநோயியல் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
புற்றுநோய் பாதிப்புகள் உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் அதுசார்ந்த ஆய்வுகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. அந்த வகையில் உடலில் சில புற்றுநோய்க் கட்டிகளை உறைய வைத்து அழிக்க முடியும் என்பது புற்றுநோய் சிகிச்சையில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள லிவர்பூல் மருத்துவமனை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளில் எம்ஆர்ஐ மூலமாக கிரையோஅப்லேஷன்(cryoablation) முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த அதிநவீன தொழில்நுட்பம், உடலின் உள்ளே இருக்கும் புற்றுநோய்க் கட்டிகளை உறைய வைத்து துல்லியமாக அழிக்க உதவுகிறது.
தற்போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் புற்றுநோய் சிகிச்சையில் இந்த முன்னேற்றம் மிகப்பெரிய ஆறுதலாக உள்ளதாகவும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மாற்றாக இந்த தொழில்நுட்பம் உதவும் என்று ஆய்வாளர்களும் மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
கிரையோஅப்லேஷன் என்றால் என்ன?
கிரையோதெரபி அல்லது கிரையோசர்ஜரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நவீன புற்றுநோய் சிகிச்சையாகும். அசாதாரண அல்லது வீரியமிக்க புற்றுநோய் திசுக்களை அழிக்க நைட்ரஜன் அல்லது ஆர்கான் வாயு மூலமாக கடுமையான குளிரை ஏற்படுத்தி கட்டிகளை உறைய வைக்கிறது. இந்த முறையை தோல் புற்றுநோய்களில் வெளிப்புறமாகவும் மற்ற புற்றுநோய்களில் உடலுக்குள் இருக்கும் கட்டிகளை அழிக்கவும் பயன்படுத்தலாம்.
எப்படி வேலை செய்கிறது?
ஆர்கான் வாயு நிரப்பப்பட்ட மெல்லிய கிரையோப்ரோப்களை (உடலுக்குள் செலுத்தக்கூடிய, கட்டிகளை அழிக்கப் பயன்படுத்தும் மெல்லிய ஊசி போன்ற மருத்துவக் கருவி) நேரடியாக உடலுக்குள் புற்றுநோய் கட்டி இருக்கும் பகுதியில் செலுத்துகின்றனர். சரியான இடத்தைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ தொழில்நுட்ப இமேஜிங்கைப் பயன்படுத்துகின்றனர். கிரையோப்ரோப் ஊசியை புற்றுநோய் கட்டி இருக்கும் இடத்தில் வைத்து வாயுவை செலுத்துகின்றனர். வாயு வேகமாக விரிவடையும்போது அந்த இடத்தில் வெப்பநிலை -180°C வரை குறைந்து அந்த கட்டியை உறையச் செய்கிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்களை உடைக்கிறது. சில நேரங்களில், கட்டியின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் கட்டியின் வெவ்வேறு பகுதிகளை உறைய வைக்க ஒன்றுக்கு மேற்பட்ட கிரையோப்ரோப்கள் பயன்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் உடல் இயற்கையாகவே இறந்த அந்த திசுக்களை உறிஞ்சி, கழிவுகளாக வெளியேற்றுகிறது.
மருத்துவர்கள் விளக்கம்....
கட்டியைச் சுற்றி ஒரு பனி போன்ற பந்து உருவாவதாக தில்லி எய்ம்ஸின் அறுவைச் சிகிச்சை புற்றுநோயியல் மருத்துவர் டாக்டர் முகுர்திபி ரே கூறுகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "கடுமையான குளிர், புற்றுநோய் செல்களை உறைய வைக்கிறது, இதனால் அவை உடைந்து இறக்கின்றன. எம்ஆர்ஐ இமேஜிங், புற்றுநோய் கட்டியைச் சுற்றி உருவாகும் பனிப் பந்தின் அளவு, பரவலைத் தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலமாக சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாக்கிறது. புற்றுநோய் கட்டி மட்டும் பனியால் சூழப்பட்டு மூடப்படுகிறது. வெறும் 24 மணி நேரத்தில் இந்த சிகிச்சை செய்யப்பட்டு நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
பெங்களூரின் ஆஸ்டர் வைட்ஃபீல்டு மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் அஸ்வின் இதுபற்றி கூறுகையில், "திறந்த அறுவைச் சிகிச்சையைவிட கிரையோஅப்லேஷன் தொழில்நுட்பம், புற்றுநோய் கட்டிகளை தெளிவாகக் காணவும் பனிப் பந்து உருவாகும்போது அதைக் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது, சுற்றியுள்ள உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுவதைக் குறைப்பது மட்டுமின்றி வெற்றிகரமான முழுமையான சிகிச்சையை உறுதி செய்கிறது" என்றார்.
கிரையோஅப்லேஷனை கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவைச் சிகிச்சையுடன் இணைத்து செயல்படுத்தலாம். கிரையோதெரபி சிகிச்சை புற்றுநோய் கட்டி மீண்டும் வரும் அபாயத்தைக் குறைக்கின்றன. ஒரே பகுதியில் பல முறை இந்த சிகிச்சையை செய்ய முடியும் என்பது முக்கியமான ஒன்று. இதனால் மீண்டும் மீண்டும் வரும் புற்றுநோய்களுக்கும் புற்றுநோய் கட்டிகளுக்கும் இது தீர்வாக அமையும்.
"இந்த சிகிச்சைக்கு பெரிய கீறல்கள் தேவையில்லை, சிறிய துளைகள் மட்டுமே போதுமானது என்பதால் ரத்த இழப்பு குறைவாக இருக்கும், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலி குறைவாகவே இருக்கும், விரைவில் சிகிச்சை பெற்று திரும்புதல் என பல நன்மைகள் உள்ளன" என்று புவனேஸ்வரம் அப்போலோ மருத்துவமனையின் சர்வதேச கதிரியக்க மூத்த நிபுணர் டாக்டர் மனாஸ் ரஞ்சன் கூறினார்.
எவ்வளவு செலவாகும்?
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கிரையோஅப்லேஷன் முறை நவீன சிகிச்சைக்கு 10,000 டாலர் முதல் 25,000 டாலர் வரை (இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை) செலவாகிறது. மேலும் இது சிகிச்சை மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பைப் பொருத்து மாறுபடும்.
எந்தெந்த மருத்துவமனைகளில்...
இந்தியாவில், கல்லீரல், சிறுநீரகம், மார்பகம், எலும்பு, சர்கோமா வகை புற்றுநோய்களுக்கு அப்போலோ, மேக்ஸ் ஹெல்த்கேர், ராஜீவ் காந்தி புற்றுநோய் நிறுவனம், ஃபோர்டிஸ், ஆஸ்டர் மருத்துவமனை, யசோதா, சி.கே. பிர்லா உள்ளிட்ட புற்றுநோய் மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிரையோஅப்லேஷன் சிகிச்சை கிடைக்கிறது. கட்டியின் வகை மற்றும் சிக்கலான தன்மையைப் பொருத்து, ரோபோடிக் அல்லது விரிவான அறுவை சிகிச்சை முறைகளைவிடக் குறைவாகவே (ஒரு அமர்வுக்கு ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை) செலவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.