வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

ஐ/ஓ 2024: கூகுளின் புதிய ஏஐ தயாரிப்புகள்
கூகுள் ஐ/ஓ நிகழ்வில்
கூகுள் ஐ/ஓ நிகழ்வில்யூ-டியூப்

கூகுளின் புதிய தயாரிப்புகள் குறித்த அறிமுக நிகழ்வான ஐ/ஓ 2024 செவ்வாய்க்கிழமை கலிபோர்னியாவில் நடைபெற்றது. கூகுளின் செய்யறிவு (ஏஐ) தயாரிப்பான ஜெமினை முதல் அடுத்த கட்டமாக நிறுவனம் களமிறங்கியுள்ள விஷயங்கள் குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட கூகுளின் அதிகாரிகள் அறிமுகப்படுத்தி பேசினர்.

புராஜெக்ட் அஸ்த்ரா:

கூகுளின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான புராஜெக்ட் அஸ்த்ரா, எழுத்து உள்ளீடுகளுக்கு மட்டுமின்றி அலைபேசியின் கேமரா வழியாக காண்பதையும் உணர்ந்து பயனர்கள் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்கிறது.

இதன் அறிமுகத்தின்போது கேமரா வழியாக தெரியும் பொருள்களில் கண்ணாடி எங்கிருக்கிறது என்கிற கேள்விக்கு கூகுள் சரியாக பதில் சொல்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாட்ஜிபிடி 4ஓ-க்குப் பதில் சொல்லும் வகையில் கூகுள் இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக தொழில்நுட்ப உலகில் தெரிவிக்கப்படுகிறது.

கூகுள் ஐ/ஓ நிகழ்வில் சுந்தர் பிச்சை
கூகுள் ஐ/ஓ நிகழ்வில் சுந்தர் பிச்சையூ-டியூப்

கூகுள் ஓர்க்ஸ்பேஸ்:

கூகுளின் செய்யறிவு செயலியான ஜெமினை, கூகுளின் மற்ற தயாரிப்புகளான ஜிமெயில் தொடங்கி பல்வேறு இடங்களிலும் பயனர்களின் வேலையை எளிதாக்குகிறது. எடுத்துக்காட்டாக ஜிமெயிலில் வந்துள்ள நீளமான மெயிலை வாசித்து அதன் சுருக்கத்தை தருவதுடன் அதற்கான பதிலுக்கான பரிந்துரையையும் அளிக்கிறது.

ஆண்ட்ராய்டு முழுக்க இனி செய்யறிவு:

ஒரு செயலியாக இல்லாமல் அலைபேசியின் முதன்மையான கட்டமைப்பில் செய்யறிவு திறனை அதிகரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. ஆண்ட்ராய்ட்டின் கோப்புகள் உள்ளிட்டவற்றை அணுகி பயனரின் தேவைக்கேற்ப செய்யறிவு செயலி பதிலளிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட கூகுள் தேடல்:

கூகுள் தேடல்களுக்கு பதிலளிக்கும் செய்யறிவு தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் ‘ஏஐ ஓவர்வியூ’ என்கிற பெயரில் விரைவான தேடல் முடிவுகளை அளிப்பதிலும் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது.

கூகுள் வியூ:

நாம் கொடுக்கிற உரையாடல்களுக்கு ஏற்ப விடியோவினை உருவாக்குகிற செய்யறிவு செயலியாக கூகுள் வியூ உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல படங்களை உருவாக்குகிற இமாஜென் 2 என்பதையும் கூகுள் அறிமுகப்படுத்துகிறது.

கூகுள் ஐ/ஓ நிகழ்வில்
கூகுள் ஐ/ஓ நிகழ்வில்யூ-டியூப்

இந்த நிகழ்வில் மட்டும் தாங்கள் எத்தனை முறை ஏஐ என்கிற வார்த்தையை குறிப்பிட்டோம் என கூகுளே சொல்லிவிடும் என்று தெரிவித்து ஒரு கோப்பை பதிவேற்றி சுந்தர் பிச்சை கேட்டதற்கு 120 என கூகுள் பதிலளித்தது நிகழ்வின் முடிவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சாட்ஜிபிடி 4ஓ அறிமுகம் சமீபத்தில் நடந்த நிலையில் கூகுளின் இந்த அறிமுகங்கள் தொழில்நுட்ப உலகில் செய்யறிவை மையமிட்ட போட்டியை காட்டுகிறது.

செய்யறிவு எல்லா வடிவங்களிலும் இனி நம்மை சூழவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com