Enable Javscript for better performance
நாமக்கல்லில் பார்வையற்ற பெண் துணிச்சல் பிரசாரம் | Give me the opportunity- Namakkal story- Dinamani

சுடச்சுட

  

  வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுகிறேன்.. நாமக்கல்லில் பார்வையற்ற பெண் துணிச்சல் பிரசாரம்

  By - எம். மாரியப்பன்  |   Published on : 26th December 2019 12:31 PM  |   அ+அ அ-   |    |  

  IMG-20191221-WA0062_(1)

  நாமக்கல்: மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்களும் சாதிக்கப் பிறந்தவர்கள் தான், கைகளோ, கால்களோ, கண்களோ இல்லாத பலரும் மற்றவர்கள் பாராட்டும் வகையில் உலக அளவில்  திறமைமிக்கவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

  அந்த வகையில், இரு கண்களில் பார்வையில்லாதபோதும், தன்னாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற முனைப்புடன், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ளார், நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ராசாம்பாளையம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பார்வையற்ற பெண் பி.சரண்யா (24).

  தனக்கு ஓர் வாய்ப்பு கொடுங்கள், இல்லாதவர்கள் மற்றும் இயலாதவர்கள் வாழ்க்கையை மாற்றிக் காட்டுகிறேன் என தனியாகவே வீடு, வீடாகச் சென்று மக்களிடையே  வாக்குகளை சேகரித்து வருகிறார்.

  மேலும் படிக்க.. திருச்சியின் கொப்பாவளி ஊராட்சியில் மகளிர் ஆட்சி!

  தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளைச் சேர்ந்த 1,855 வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு அளிக்குமாறு கேட்க வேண்டும் என ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்த பி.சரண்யாவை சந்தித்தபோது அவர் தெரிவித்தது; "கடந்த 16-ஆம் தேதி மனு தாக்கல் நிறைவடையும் நேரத்தில், போட்டியிடுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், கணவர் துணையுடன் சென்று ராசாம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தேன். பரிசீலனையில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் மனு ஏற்கப்பட்டது. இந்த ஊராட்சியில் என்னுடன் சேர்த்து 5 பேர் போட்டியிடுகின்றனர்.

  சொந்த ஊர் எல்லம்பாளையம். கணவர் பாலசுப்பிரமணி லாரி ஓட்டுநராகவும், உரிமையாளராகவும் உள்ளார். 3 வயதுடைய ஆண் குழந்தையும், ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையும் உள்ளனர். சிறு வயதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில், கோவையில் உள்ள பார்வையற்ற பள்ளியில் பிரெய்லி முறையில் படித்தேன்.

  அதன்பின் 12-ஆம் வகுப்பு வரை, திருச்சியில் உள்ள பார்வையற்ற பள்ளியில் படிப்பை தொடர்ந்தேன். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை கல்லுரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து முடித்துள்ளேன், அதிகளவில் வெளியில் சென்றது இல்லை.
  ஏதாவது ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. இந்த வேளையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தது. கணவரும் போட்டியிட ஒப்புதல் அளித்தார். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

  அவ்வாறு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதேபோல், உடல்நலம் பாதிப்படைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையில், ஊராட்சிக்கென தனியாக ஓர் வாகனம் வாங்கி, அதற்கென ஓட்டுநரை நியமித்து மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிடும் வகையிலான திட்டமும் எனது எண்ணத்தில் உள்ளது. நான் ஒருபுறம் வாக்கு சேகரிக்கிறேன், கணவர் மற்றும் பெற்றோர் ஒரு புறம் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஊனம் என்பது உடலில் எங்காவது ஒரு இடத்தில் இருந்தால் அது ஓர் குறைபாடாக தான் தெரியும், ஆனால் மனதில் ஏற்பட்டால் மொத்த உடலின் இயக்கமும் செயல்படாமல் நின்று விடும். எனது ஊனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மனதில் ஏற்பட்ட நம்பிக்கை தான் தேர்தல் களத்தில் என்னை இறக்கி விட்டுள்ளது என்கிறார் சரண்யா. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai