சுயேச்சைகளும் மக்களவைத் தேர்தலும்

மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக வர்ணிக்கப்படும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சுயேச்சைகளும் மக்களவைத் தேர்தலும்
Updated on
2 min read


மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக வர்ணிக்கப்படும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் அனைத்து உயிரினங்களையும் தள்ளாட வைத்துக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கு சவால் விடும் வகையில் சூடு பிடித்துள்ளது  அரசியல் கட்சிகளின் பிரசாரம்.

சுதந்திர இந்தியா ஒவ்வொரு குடிமகனுக்கும் விலை மதிக்க முடியாத ஜனநாயக உரிமையான, வாக்குரிமையை வழங்கியிருக்கிறது. அதன் வலிமையை உணர்த்துவதாக தேர்தல்கள் இருக்கின்றன.  ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கான திறவுகோலாக தேர்தல்கள் உள்ளதால், அரசியல் கட்சிகளிடம் போட்டா போட்டி நிலவுகிறது.

வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என கவர்ச்சிகரமான  அறிவிப்புகளுடன் வண்ண வண்ண பலூன்களை அரசியல் கட்சிகள் பறக்கவிடுகின்றன. ஆளுங்கட்சியினர் எதிர்க் கட்சிகளையும், எதிர்க் கட்சியினர் ஆளும் கட்சியையும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுவது தேர்தல் நேரத்தில் அரங்கேறும் வழக்கமான காட்சிகள்.

ஆட்சி அதிகாரம், தொண்டர் பலம், பண பலம், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு என அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் களத்தை வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,  நாங்களும் வேட்பாளர்கள் தான் என சுயேச்சைகள், கொடி பிடித்து இறங்குவது தேர்தல் கால நிகழ்வு. 

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை சுயேச்சைகளுடன் ஒப்பிடுவது மலைக்கும்-மடுவுக்குமான இடைவெளியைக் காட்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.  வாக்களிப்பது குடிமகனின் முக்கியக் கடமையாக இருப்பதைப் போல, ஜனநாயகத்தின் வலியை உணர்த்த தேர்தலில் போட்டியிடுவது என்ற ஒரே நோக்கத்துக்காக போட்டியிடுபவர்களாக சுயேச்சைகள் சிலர் இருக்கின்றனர்.

1952-இல் தொடங்கி இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களைப் பார்த்தால்,  சுயேச்சைகள் பெற்ற வாக்குகள், வெற்றி பெற்றவர்கள்  எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதே அதற்குச் சாட்சியாக இருக்கிறது.

வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்,  நிர்வாகச் செலவினம் கூடும் என்பதால், முன்பு  சுயேச்சைகள் வேட்புமனுவைப் பரிசீலனை செய்வதில்  அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளப்படும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்த பிறகு சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் மீது அதிக கெடுபிடி காட்டுவதில்லை.

1952-இல் நாடு முழுவதும் 849 சுயேச்சைகள் போட்டியிட்டு 36 பேர் வெற்றி பெற்றனர். 1957 தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சைகளின் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்தது.அதேநேரம் முந்தைய தேர்தலைவிட குறைவான எண்ணிக்கையில் அதாவது 667 பேர் மட்டுமே போட்டியிட்டனர்.  இதுவரை நடந்த தேர்தல்களில் 1957- இல் தான் அதிக சுயேச்சை உறுப்பினர்கள் மக்களவைக்குச் சென்றது குறிப்பிடத் தக்கது.

அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்ற சுயேச்சைகளின் எண்ணிக்கை, முறையே  20, 35, 14 எனக் குறையத் தொடங்கியது. 1977-இல் இருந்து சுயேச்சை எம்பி-க்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு மாறியது. ஆனால்,  1996-க்குப் பிறகு போட்டியிடும் சுயேச்சைகள் எண்ணிக்கை உயர்ந்தது. 1996 தேர்தலில் 10 ஆயிரத்து 636 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 9 பேர் எம்பிக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் 1996-இல் தான் அதிக எண்ணிக்கையில் சுயேச்சைகள் போட்டியிட்டுள்ளனர்.

1998-இல் 1915 பேர் போட்டியிட்டு 6 பேர் வெற்றி பெற்றனர். பதிவான மொத்த வாக்குகளில் சுயேச்சைகளின் வாக்குகள் 2.4 சதவீதமாகும். 1999-இல் 1946 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலிலும் 6 பேர் வெற்றி பெற்றனர். சுயேச்சைகள் பெற்ற வாக்குகள் 2.74 சதவீதம்.

2004 மக்களவைத் தேர்தலில் 2 ஆயிரத்து 385 பேர் போட்டியிட்டு 5 பேர் மக்களவைக்குச் சென்றனர்.  மொத்த வாக்குகளில் சுயேச்சைகளின் பங்கு  4.25 சதவீதம். 2009-இல் 3 ஆயிரத்து 831 பேர் போட்டியிட்டு 9 பேர் வெற்றி பெற்றனர். முந்தைய 3 தேர்தல்களைக் காட்டிலும் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை சற்று கூடியது. வாக்குகள் எண்ணிக்கையும் 5.2 சதவீதமாக உயர்ந்தது. 2014 இல் 3 ஆயிரத்து 234 பேர் போட்டியிட்டு 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். வாக்குகள் எண்ணிக்கை 3.6 சதவீதம் தான். மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுயேச்சைகள் வெற்றி பெற்றது இந்த தேர்தலில் தான்.

உள்ளாட்சித் தேர்தல்களில் தங்களது சொந்த செல்வாக்கில், சுயேச்சைகள் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஆட்சியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக சுயேச்சை எம்எல்ஏக்கள் இருந்திருக்கின்றனர். ஆனால், லட்சக்கணக்கான வாக்காளர்களைக் கொண்ட மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சிகள் மக்கள் மீது வீசும் பல்வேறு அஸ்திரங்களுக்கு இடையே வெற்றி என்பது சுயேச்சைகளுக்கு சவால்களுக்கெல்லாம் சவாலானது.     இதனால் மக்களவைத் தேர்தல்களைப் பொருத்தவரை நாங்களும் போட்டியிட்டோம் என்ற பட்டியலில் தான் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் இடம்பெறுகின்றனர். தேர்தல் முடிவுகளும்  இதைத் தான் காட்டுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com