சர்வாதிகாரம் பற்றி காங்கிரஸா பேசுவது?
தமிழகத்தைப் பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது அதன் மூத்தத் தலைவர் இல. கணேசன்தான்.


தமிழகத்தைப் பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது அதன் மூத்தத் தலைவர் இல. கணேசன்தான்.
ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தனது வாழ்க்கைத் தொடங்கி, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கடந்த 40 ஆண்டுகளாக சுற்றி அலைந்து பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் வளர்த்தியப் பெருமை அவரையே சாரும். தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமிழகம் முழுவதும் தங்களது கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் இல. கணேசனை நெல்லையில் சந்தித்தபோது தினமணி நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க இப்போதைய அரசு சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த திருத்தத்தை விலக்கிக் கொள்வோம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தடுப்பது போல் ஆகிறது. அவர்களை ஊக்குவிப்பது போன்றதாகும். அதனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் அறிக்கையாக நான் பார்க்கிறேன்.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறினாலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஒற்றை இலக்க இடங்களையே கைப்பற்றும் எனத் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றனவே...
கடந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37-இல் அதிமுக வென்றது. இரண்டில் பாஜக கூட்டணியும் வென்றன. கடந்த முறை 2 தொகுதிகள் தவிர ஏனைய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எங்களுடன் இணைந்து களம் காண்கிறது. மோடிக்கு ஆதரவாக இருப்பவர்களும், அதிமுகவும் ஒன்று சேர்ந்துள்ளனர். பெருவாரியான தொகுதிகளில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவால் அதிமுக வாக்குவங்கி சரிந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அதிமுகவுக்கான வாக்கு என்பது இரட்டை இலை சின்னம், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கானது. இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் அதன் வாக்காளர்கள் அப்படியே இருப்பார்கள். திமுக எதிர்ப்பாளர்களும், அதிமுக ஆதரவாளர்களும்தான் அதிமுகவின் வாக்கு வங்கி. அந்த வாக்கு வங்கி குறையாது. பாஜகவின் வாக்கு வங்கியும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் எங்கள் அணியை பலமான அணியாக மாற்றியிருக்கிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் நினைப்பது இருக்கட்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி என்ன நினைத்தார் என்பது உலகுக்கே தெரியும். கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறி காங்கிரஸுடனான உறவைத் துண்டித்துக் கொண்டவர் அவர். இப்போது அதே காங்கிரஸுடன் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமைத்து ராகுல் காந்தியைப் பிரதமராக்க சூளுரைத்திருக்கிறது. கருணாநிதி கூறியதை நான் நினைவுபடுத்துகிறேன். கூடா நட்பு கேடாய் முடியும்!
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதில், அதிமுக சாணக்கியத்தனமாக நடந்து கொண்டதா?
கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியபோதுகூட 8 தொகுதிகளில் மட்டுமே நின்றோம். இந்த முறை தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுபவர்கள் மோடி பிரதமராக வேண்டும் என்று கை உயர்த்தப்போகிறார்கள். இதில் சாணக்கியத்தனம் எதுவும் இல்லை. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதல்ல முக்கியம். எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பது மட்டுமே எங்களது இலக்கு.
ஜெயலலிதா இல்லாத அதிமுக ஆட்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் மரணம் எதிர்பாராதது என்பதால், தனக்குப் பின்பு கட்சியை வழிநடத்தும் ஆளுமையை சுட்டிக்காட்ட முடியாமல் போனது. இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சி உடைபடாமல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைத்து, சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி புரிவதற்காக மக்கள் தந்த தீர்ப்பு 5 ஆண்டுகாலம். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்யும்.
தமிழகத்தில் டிடிவி தினகரன், கமல்ஹாசன் போன்றோர் புதிய தலைமுறை வாக்காளர்களை ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை அதிமுக, பாஜக தலைவர்கள் பெரிய அளவுக்கு விமர்சிக்கவில்லையே...
தினகரன் அரசியல் ரீதியாக தான் பாதிக்கப்பட்டு விட்டதாகக் கருதி, அதிமுக கூறிய குற்றச்சாட்டில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காகக் களம் காண்கிறார். ஜாதி அடிப்படையில் முன்னேற நினைப்பாரானால் அது எடுபடாது. கமல்ஹாசன் நடிப்பிற்கு நான்கூட மதிப்பெண் தருவேன். ஆனால் சமூக வலைதளங்களில் மட்டுமே கருத்து பரிமாறிக் கொண்டிருப்பவர்கள், இளைஞர்கள் ஆதரவு அளித்ததால், கமலும் உணர்ச்சிவசப்பட்டு அரசியல் களத்தில் நிற்கிறார். தமிழகத்தில் திரைப்பட நடிகனாக இருந்து அரசியலில் பரிணமித்தது எம்ஜிஆர் மட்டும்தான்.
திமுக இந்துக்களுக்கு விரோதி அல்ல என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறாரே...
அவர் இந்து மத கடவுள்கள் பற்றியும், இந்துத் திருமணச் சடங்குகள் பற்றியும் கூறிய கருத்துகள் இந்துக்களின் மன உணர்வுகளை மிகவும் பாதித்திருப்பதைப் பார்த்து ஏற்பட்ட அச்சத்தின் வெளிப்பாடுதான் அவருடைய இந்தப் பேச்சு. தி.க. தலைவர் வீரமணியின் விமர்சனங்களைத் துணிந்து மறுப்பதற்கு அவர் தயாராக இல்லை என்பதிலிருந்து அவரது உதட்டளவு இந்துப் பற்று தெரிகிறது. திமுக இந்துக்களுக்கு விரோதி அல்ல என்று ஸ்டாலின் கூறுவதிலிருந்தே, இந்துக்கள் திமுகவை விரோதியாகப் பார்க்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பன் குதிரைக்குள் இல்லை என்கிற கதைதான் இது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சி வந்துவிடும்; தேர்தலே இருக்காது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் பற்றி என்ன கூறப்போகிறீர்கள்?
சர்வாதிகாரம் பற்றி காங்கிரஸா பேசுவது? தனக்கு வந்த அவசர நிலையை நாட்டுக்கு வந்த அவசர நிலையாக அறிவித்த இந்திரா காந்தி எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? தேச விரோதிகளை ஒடுக்குவதில் இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கிறோம். அதை சர்வாதிகாரம் என்கிறார்கள். கருப்புப் பணத்துக்கு எதிராகவும், சமூக விரோதிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம். இதை அடக்குமுறை என்று ஓலமிடுகிறார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் ஓலமிடுவது போன்றதுதான் இந்த விமர்சனங்கள்.
ரஃபேல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக மத்திய அரசு எழுப்பிய முதல் கட்ட ஆட்சேபங்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது, தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு பின்னடைவாக அமையுமா?
பின்னடைவெல்லாம் கிடையாது. திருட்டுத்தனமாக ஆவணத்தைப் படமெடுத்து அதை வெளியிட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இவர்கள் புதிதாக சில ஆவணங்களை தந்திருப்பதால், அதனடிப்படையில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். நாங்கள் விசாரணைக்குத் தயார். மடியில் கனம் இல்லாதவர்களுக்கு வழியில் பயம் இல்லை.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு...
ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்தவரையில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அதற்கு அனுமதியளித்து கையெழுத்திடப் பட்டிருக்கிறது. அந்த ஆலைக்கு அனுமதியளித்தபோது, திமுகவும், காங்கிரஸும் ஆட்சியில் இருந்திருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டபோது, அந்தத் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்திருக்கிறார். இதில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் திட்டமிட்டே ஸ்டெர்லைட் விவகாரத்தில் எங்களை இழுக்கிறார்கள். பிரச்னையை திசைதிருப்பித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததைப் பற்றி பேசி வரும் பாஜக, தனது 5 ஆண்டுகால சாதனையைப் பற்றி எதுவும் பேசவதில்லையே, ஏன்?
அது தவறு. 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் புல்வாமா சம்பவத்துக்கு பதில் தாக்குதல் நடத்தியதைப் பற்றிப் பேசவில்லை. ராணுவ வீரர்களுக்கு பாராட்டுத்தான் தெரிவித்தோம். தீவிரவாதத்தை வேரறுக்கவும், பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என்று சொல்கிறோம். அதில் தவறு என்ன இருக்கிறது?
உங்களால் புல்வாமா தாக்குதலை ஏன் தடுக்க முடியவில்லை என ஸ்டாலின் கேட்கிறார். அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
தெரிந்திருந்தால் நிச்சயம் தடுத்திருப்போம். திமுக ஆட்சியில் இருந்தபோது, அத்வானி பங்கேற்ற கோவை கூட்டத்தில் மனித வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்பது காலையிலேயே தமிழக அரசுக்குத் தெரியும். என்ன நடந்தது என்பதற்கு என்னிடம் சான்று இருக்கிறது. அதை மறுக்க முடியாது. கோவையில் குண்டு வெடிக்கப்போவது திமுகவுக்கும், கோவையில் இருந்த அமைச்சருக்கும் தெரியும். அதை ஏன் தடுக்கவில்லை? அல்லது நடக்கட்டும் என நினைத்தார்களா என்பதற்கு ஸ்டாலின் முதலில் பதில் சொல்லட்டும்.
இது பெரியார் பிறந்த மண். நாத்திகவாதம் தழைக்கும் மண். இங்கே ஆன்மிகம் பரப்பும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறதே, என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு காலத்தில் கருப்பு என்று சொன்னால் நாத்திகவாதத்தையும், சிவப்பு என்று சொன்னால் பிரிவினைவாதத்தையும் குறிக்கும். ஆனால் இப்போது கருப்பு என்று சொன்னால் ஐயப்ப சாமியையும், சிவப்பு என்றால் ஆதிபராசக்தியையும் குறிக்கும் என்று மாறிவிட்டதே. தமிழகம் என்றைக்குமே ஆன்மிக பூமியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. பெரியார், பெரியார் என்று இவர்கள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழக மக்கள் பெரியாரையோ, அவரது கொள்கைகளையோ என்றைக்குமே ஏற்றுக் கொள்வதில்லை. பெரியாரின் நாத்திகவாதக் கொள்கைகள் வெற்றி பெற்றிருந்தால் இன்று கோயில்கள், பாழடைந்திருக்க வேண்டும். நாங்கள் இந்துக்களின் எதிரியல்ல என்று ஸ்டாலின் பேசுகிறார் என்றால், நாத்திகவாதம் எடுபடவில்லை என்றுதானே பொருள். பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்பது பயத்தின் வெளிப்பாடு என்றுதான் நான் கருதுகிறேன்.
தேர்தலுக்குப் பிறகு 3-ஆவது அணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதா?
மோடிக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்போம் என்றார்கள். சென்னை, கொல்கத்தாவில் கூடினார்கள், கையை உயர்த்தினார்கள். ஆனால் கூட்டணி என்று வரும்போது, உத்தரப் பிரதேசத்தில் தனியாக நிற்கிறது காங்கிரஸ். கேரளத்தில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும் மோதிக் கொள்கிறார்கள். வயநாட்டில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என சபதமெடுத்துள்ளனர் இடதுசாரிகள். சந்திரபாபு நாயுடு ஒருபுறம், சந்திரசேகர ராவ் ஒருபுறம், மம்தா பானர்ஜி ஒருபுறம். நாங்கள் வென்று ஆட்சி அமைத்த பிறகு வேண்டுமானால், இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சி வரிசையில் ஒன்றாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிடக் குறைவான வாக்குகளே பாஜக வாங்கியது. அக்கட்சிக்கு வாக்கு வங்கி இல்லை என திமுகவினர் தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறார்களே...
ஆர்.கே.நகரில் திமுக டெபாசிட் இழந்ததைப் பற்றியும் அவர்கள் பேசினால் நன்றாக இருக்கும். அதைப் பேசாமல் எங்களைப் பற்றி மட்டுமே பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...