

ஆளுங்கட்சியான அதிமுக, பிரதான எதிர்க் கட்சியான திமுக என இரு கட்சிகளுக்குமே மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் நடைபெற உள்ள 18 தொகுதிகளின் பேரவைத் தேர்தல் தான் மிகுந்த முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை அமைத்துள்ளன.
தமிழகத்தில் இதுவரை நடந்த பல்வேறு இடைத்தேர்தல்கள் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் மேலோங்கி இருக்கிறது.
தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு தற்போது பெரும்பான்மை பலம் இருந்தாலும், 18 தொகுதிகளின் இடைத் தேர்தலுக்குப் பிறகு பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க இன்னும் கூடுதலாக உறுப்பினர்கள் தேவை. அதிருப்தி எம்எல்ஏக்கள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கின் தீர்ப்பு என ஆட்சிக்கு தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இடைத் தேர்தலில் குறிப்பிட்ட இடங்களை அதிமுக கைப்பற்றியாக வேண்டும். அப்போது தான் பிரச்னையின்றி ஆட்சியைத் தொடர முடியும்.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எந்த வகையிலும் வாக்குகளைச் சிதற விடக் கூடாது என்பது அதிமுகவின் கணக்கு. அதற்காகவே, பாஜக, தேமுதிக, பாமக, தமாகா என பலமான கூட்டணியை அமைத்திருக்கிறது.
இந்த இடைத்தேர்தல் மூலமாக, ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாதா என்ற ஏக்கம் திமுகவுக்கு. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த நிலையில், ஏதாவதொரு தேர்தல் மூலமாகவே செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது. இந்த இடைத் தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுவதைச் தனக்கு சாதகமாகக் கருதும் திமுக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் துணையோடு இடைத்தேர்தலைச் சந்திக்க உள்ளது.
இடைத்தேர்தலை முன்னிருத்தியே... அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை எனக் கூறி வந்தாலும் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் தான், இடைத்தேர்தலை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது எப்படியும் தங்களை கூட்டணியில் இணைத்துக் கொள்ளும் என நினைத்த பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மோடியா? அல்லது இந்த லேடியா? என களம் இறங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளைக் கைப்பற்றினார்.
அதேபோல, கடைசி வரை காத்திருந்த காங்கிரஸ் கட்சியை, திமுக கழற்றிவிட்டது. இருப்பினும் 2- ஆம் இடத்தைத் தான் பெற முடிந்தது. பாஜக அணியில் தேமுதிக, பாமக போட்டியிட்டன. பாஜக, பாமக தலா ஒரு இடத்தில் வென்றன. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு நான்காவது அல்லது ஐந்தாவது இடங்களைப் பிடித்தன.
கடந்த தேர்தலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த கட்சிகள் இப்போது இணைந்திருக்கின்றன. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தலைமையில் இந்த மக்களவைத் தேர்தலுக்கான அணி அமைந்திருக்கிறது. அதுவும் இடைத்தேர்தலில் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் கூட்டணி சேர்ந்துள்ளன. இரு அணிகளில் உள்ள கட்சிகளுமே அணித் தலைமைகளான அதிமுக மற்றும் திமுகவுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு என்ற உறுதிமொழியுடன் தங்களது தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்திருக்கின்றன. மக்களவைத் தேர்தலின்போது தேசியப் பிரச்னைகள், மாநில உரிமைகள் ஆகியவற்றைத் தான் மாநில கட்சிகளும் பிரதானமாக முன்வைப்பது வழக்கம். இந்தத் தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை கூட்டணிக்குப் பொறுப்பேற்றுள்ள அதிமுக, திமுக இரு கட்சிகளுமே இடைத் தேர்தலை முன்னிறுத்தியே மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன. மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் இடைத் தேர்தலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து களப் பணிகளைத் தொடங்கியிருக்கின்றன.
நிலையான ஆட்சி, மதச்சார்பற்ற அரசு, சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என மக்களவைத் தேர்தல்களின்போது தலைவர்களின் வழக்கமான உறுதிமொழிகளை எல்லாம்விட தமிழகத்தில் இடைத்தேர்தல் பிரசாரம் தான் களத்தில் ஓங்கி ஒலிக்கப் போகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.