மய்யத்தில் தொடரும் சினிமா மயம்!
தமிழக அரசியலில் மாற்றத்துக்கு அச்சாரமிடுமா என எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்திருக்கிறது.


தமிழக அரசியலில் மாற்றத்துக்கு அச்சாரமிடுமா என எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்திருக்கிறது. கடந்த ஓராண்டாக கமல்ஹாசனோடு இணைந்து பணியாற்றிய தொழிலதிபர் சி.கே.குமாரவேலு, சமீபத்தில் கட்சியிலிருந்து விலகியதோடு, கமல்ஹாசனை யாரும் நெருங்க விடாமல் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மருத்துவர் மகேந்திரன், பொதுச் செயலர் அருணாசலம், விஜய் டி.வி. மகேந்திரன் ஆகியோர் அரணாக நிற்கிறார்கள் என பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.
குமாரவேலுவின் விலகலைத் தொடர்ந்து, மேலும் சில மாவட்டப் பொறுப்பாளர்கள் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளதாகவும், அவர்களுக்குப் பதிலாக வேறு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கமல்ஹாசன் ஆலமரம் என்றால், நற்பணி இயக்கத்தாரும், ரசிகர்களும் அவரைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய விழுதுகள். அந்த விழுதுகள் எல்லாம், சமீபத்தில் கட்சிக்குள் புகுந்த அதிகார மையங்களால் அறுத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பணத்தை எப்போதுமே கமல்ஹாசன் பிரதானமாக நினைத்ததில்லை. ஆனால் இப்போது தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் எல்லாம் யாருக்கும் பரிச்சயமில்லாத, கள நிலவரம் துளியும் தெரியாத தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். அதை வைத்துப் பார்க்கும்போது மக்கள் நீதி மய்யத்திலும் பணமே பிரதானம் என்றாகிவிட்டதோ, கமல்ஹாசன் தவறாக வழிநடத்தப்படுகிறாரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது என்கிறார்கள் நற்பணி இயக்கத்தினர்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதில் இருப்பவர்கள் அனைவருமே எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இன்று வரை உடல் தானம், ரத்த தானம், சமூக சேவை என பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து யாரும் செயல்பட்டதில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட பிறகு கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள்.
மருத்துவர் மகேந்திரன், பொதுச் செயலர் அருணாசலம், விஜய் டி.வி. மகேந்திரன் ஆகியோரே கட்சியில் அதிகார மையங்களாக செயல்படுகிறார்கள். கமல்ஹாசனும் அவர்களைத்தான் முழுமையாக நம்புகிறார். அவர் எங்களிடம் கள நிலவரங்களை கேட்கத் தயாராக இல்லை.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில்கூட, மாவட்ட பொறுப்பாளர்களிடம் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தவில்லை. வேட்பாளர் நேர்காணலின்போதுகூட அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களை அழைக்கவில்லை. முதல் கட்ட வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாக, அன்றைய தினம் காலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், வேட்பாளர் விவரம் எங்களுக்குத் தெரிவிக்கப்படும், எங்களின் கருத்து கேட்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. அப்போதே பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் இனியும் இங்கு இருக்க வேண்டுமா என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
ஒரு வாரத்துக்கு முன்னதாக கட்சிக்கு வந்த தொழிலதிபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் தொடர்பான விவரங்களை ஊடகத்தினர் கேட்டபோது, வேட்பாளரை பற்றிய எந்த விவரமும் எங்களிடம் கிடையாது. வேட்பாளர்கள் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தப்படவில்லை. நாங்களாகத்தான் தேடிச் சென்று அறிமுகம் செய்து கொண்டோம்.
மாற்று அரசியலை முன்னெடுப்போம் என கமல்ஹாசன் கூறியபோது மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் உலகமறிந்த மனிதர் உள்கட்சி அரசியலை அறியாமல் இருப்பது கவலையளிக்கிறது. கட்சிக்குள் நிலவும் பூசலை, கள நிலவரத்தை கமல்ஹாசனிடம் யார் கொண்டு போய்ச் சேர்ப்பது எனத் தெரியவில்லை. கமல்ஹாசனின் பெயர் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே மாவட்டப் பொறுப்பாளர்கள் அமைதி காக்கிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களின்போதுகூட, கமல்ஹாசனின் வருகை உள்ளிட்ட எந்த விஷயத்தையும் கூட்டத்தை நடத்திய மாவட்டப் பொறுப்பாளர்களுக்குகூட தெரியாமல் பார்த்துக் கொண்டது அதிகார மையம். மாவட்டப் பொறுப்பாளர்களால் கமல்ஹாசனை சந்தித்துக்கூட பேச முடியவில்லை.
தொடரும் சினிமா மயம்: கட்சியில் சிலருடைய ஆதிக்கம் காரணமாகவே, சமீபத்தில் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து சுகா விலகினார். மக்கள் நீதி மய்யம் இன்னும் சினிமா மயமாகவே இருக்கிறது. தமிழகம் முழுவதுமே பெரும்பாலான மாவட்டப் பொறுப்பாளர்களும், முன்னணி நிர்வாகிகளும் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். சிலர் ராஜிநாமா கடிதம் அளித்துவிட்டார்கள். மேலும் சிலர் ராஜிநாமா கடிதத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள் என்றார்.
கட்சி ஆரம்பிக்கும்போது வலதும் இல்லை; இடதும் இல்லை; மய்யம் என்றார் கமல்ஹாசன். ஆனால் இன்று அவருடைய கட்சியின் அதிகாரம் மூன்று பேரின் கைக்கு சென்றுவிட்டதாக நற்பணி இயக்கத்தார் வேதனை தெரிவிக்கிறார்கள்.
புதிதாக கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்தத் தேர்தலில் விழும் வாக்குகள்தான் அவருடைய அரசியல் வாழ்க்கையை மட்டுமல்ல, மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதாக அமையும். யாரும் கூட்டணிக்கு அழைக்காததால் தான் தனித்து விடப்பட்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம். எனவே வரக்கூடிய தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாங்கும் வாக்கு சதவீதத்தைப் பொருத்துதான், அடுத்து வரக்கூடிய தேர்தலில் கூட்டணியோ, மற்ற வாய்ப்புகளோ அந்தக் கட்சிக்குக் கிடைக்கும்.
மக்கள் நீதி மய்யத்தில் முதல் கட்ட வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்களில் 7 பேர் தொழிலதிபர்கள், 3 பேர் மருத்துவர்கள், ஒருவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, மற்றொருவர் ஓய்வு பெற்ற நீதிபதி, மேலும் சிலர் படித்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொகுதிக்கு பரிச்சயமில்லாதவர்கள். அதனால் இவர்களுக்கு மக்களிடம் எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கும், அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் எந்தளவுக்கு களப்பணியாற்றுவார்கள், விரக்தியடைந்துள்ள பொறுப்பாளர்களை கமல் எப்படி சமாதானப்படுத்தப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எது எப்படியோ, கட்சி விவகாரங்களிலும், வேட்பாளர் தேர்விலும் கமல்ஹாசனின் முடிவு சரியா, தவறா என்பது தேர்தல் முடிவு வெளியாகும்போது வெட்ட வெளிச்சமாகிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...