இருவருக்கு இடையேதான் போட்டி!

நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். 
இருவருக்கு இடையேதான் போட்டி!
Updated on
1 min read


நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். 
தொழிலதிபர் ஏ.சி.சண்முகம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர். எம்ஜிஆர் காலம் முதலே அதிமுக விசுவாசியாக இருந்து வரும் இவர், ஏற்கனவே 1984-இல் வேலூர் தொகுதியில் அதிமுக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு அதிமுகவுக்கு அடுத்து 2-ஆவது இடம் பிடித்திருந்தார். இம்முறை அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் இவர், கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளுடன், கடந்த தேர்தல்களில் தான் பெற்ற வாக்குகள், தொகுதியில் முக்கிய வாக்கு வங்கியான முதலியார் சமுதாய வாக்குகள் கிடைத்தாலே வெற்றி வாய்ப்பு உறுதி என்ற நம்பிக்கையில் உள்ளார்.
இவரை எதிர்த்து திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த் களம் இறக்கப்பட்டுள்ளார். சொந்த மாவட்டத்தில் தனது மகன் தோல்வி அடைந்துவிடக் கூடாது என்ற கெளரவ பிரச்னை, மண்ணின் மைந்தரான துரைமுருகனுக்கு உள்ளது. அண்ணா காலம் முதலே திமுகவின் கோட்டையாக கருதப்படும் வேலூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் திமுகவின் கொடியை நாட்ட வேண்டும் என்பது துரைமுருகனின் பெரும் கனவாக உள்ளது. இதனால், இத்தொகுதியில் போட்டி என்பது ஏ.சி.சண்முகத்துக்கும், துரைமுருகனுக்கும் இடையேதான் என்பதாகவே பார்க்கப்படுகிறது.
இதில், திமுகவின் வெற்றிக்கு அவர்கள் போடும் கணக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவ சிறுபான்மையினர் வாக்குகளும், மத்திய, மாநில அரசுகளின் மீதான வெறுப்பும் திமுகவுக்குக் கைகொடுக்கும் எனக் கருதுகின்றனர். தொகுதியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு கணிசமான வாக்கு சதவீதம் இருப்பதாகக் கருதப்படும் நிலையில், அக்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் களம் இறக்கப்பட்டிருப்பதும் திமுகவுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதும், துரைமுருகனின் மகன் என்ற அறிமுகத்தைத் தவிர திமுக வேட்பாளர் கதிர்
ஆனந்துக்கு வேறு அடையாளம் ஏதும் இல்லை. தொகுதியில் பல மூத்த நிர்வாகிகள் உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரைமுருகன் தனது மகனை நிறுத்தியிருப்பது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல், ஏ.சி.சண்முகத்துக்கு, அவர் அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் போட்டியிடும் அணியில் பாஜக இடம்பெற்றிருப்பதும், 2016 பேரவைத் தேர்தலில் ஆம்பூர், குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பின்னர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதும் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
எனவே, சமபலத்துடன் மோதும் ஏ.சி.சண்முகம், துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் ஆகியோரில் வேலூர் கோட்டையை பிடிப்பது யார் என்பது குறித்து தொகுதி மக்களிடையே மட்டுமின்றி அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com