

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும், திமுகவின் தீர்மானக் குழுத் தலைவருமான பொன். முத்துராமலிங்கம் (78).
1965-இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். தனது 30-ஆவது வயதில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவை உறுப்பினராகவும், தமிழக அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பல தேர்தல்களில் களம் கண்டவர். தனது தேர்தல் அனுபவங்கள் குறித்து அவர் அளித்த பேட்டி:
1967-இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணா, முதல் முறையாக மதுரைக்கு வந்தார். அண்ணாவை சந்திக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் வெங்கடசேஷய்யர் விரும்பினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்களுக்காக திமுக தரப்பில் ஆஜராகி, கைதான அனைவருக்கும் விடுதலை பெற்றுக் கொடுத்தவர் வழக்குரைஞர் வெங்கடசேஷய்யர். அவரது விருப்பத்தைத் தெரிவித்ததும், அண்ணா உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது அலுவல் ரீதியான நிகழ்வுகளை ஒரு மணி நேரத்துக்கு தள்ளி வைத்தார். மதுரை ஷெனாய் நகரில் இருக்கும் வழக்குரைஞரின் வீட்டுக்குச் சென்ற அண்ணா, சுமார் ஒரு மணிநேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாவை அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து தான் எனது அரசியல் பயணம் தொடங்கியது.
தேர்தல் அனுபவம்: எனது 30-ஆவது வயதில் 1971-இல் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு 1973-இல் திண்டுக்கல் மக்களவைக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டேன். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது, குறுகிய காலத்தில் நடந்த தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதிமுக சார்பில் மாயத் தேவர் போட்டியிட்டார். திமுக சார்பில் நானும், காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தனும் போட்டியிட்டோம். எனக்கு ஆதரவாக திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் செ.மாதவன், அன்பில் தர்மலிங்கம், சாதிக் பாட்ஷா என அனைத்து அமைச்சர்களும் பிரசாரம் செய்தனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
அதன் பிறகு மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 1977, 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டேன். 1980-இல் எம்ஜிஆரை எதிர்த்து களம் இறக்கப்பட்டேன். அப்போது "எம்ஜிஆரை எதிர்த்துப் போட்டியிட நீ தான் சரியான நபர்' என கருணாநிதி போட்டியிட வைத்தார். இத் தொகுதியில் 1984 மற்றும் 1989 தேர்தல்களில் வெற்றிபெற்றேன். அதேபோல, 1999-இல் மதுரை மக்களவைத் தொகுதியிலும், 2014-இல் தேனி மக்களவைத் தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிட்டுள்ளேன்.
ஒரு டீ, மிக்ஸர் பொட்டலம்: ஆரம்ப காலத்தில் தேர்தலில் போட்டியிட்ட போது பிரசாரத்துக்கு வரும் கட்சித் தொண்டர்களுக்கு டீ, மிக்ஸர் பொட்டலம் ஆகியவைதான் அதிகபட்ச செலவாக இருந்தது. அதையும் அந்தந்தப் பகுதி கட்சி நிர்வாகிகளே ஏற்றுக் கொள்வர். எங்களுக்கு மதிய சாப்பாடும் அவர்கள் தான் ஏற்பாடு செய்வர். பணம் விநியோகம் என்பதெல்லாம் ஒருபோதும் இருந்ததில்லை. அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள் கட்சிக்கு வந்தக் காலம் அது. கட்சித் தொண்டர்களும் சரி, மக்களும் சரி எதையும் எதிர்பார்க்கவில்லை. இதனால் தேர்தல் செலவு என்பது சுமையாக இருந்ததில்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பணம் இருப்பவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்றாகிவிட்டது.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெருந்தொகையை செலவிடுகின்றனர். ஏதோ தொழிலில் முதலீடு செய்வதைப் போல செலவு செய்து, பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் அதை லாபத்துடன் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற மனப்போக்கிற்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாறிவிட்டது வேதனைக்குரியது.
மாறிப்போன தேர்தல் களம்: கட்சியின் கொள்கைகள், வாக்குறுதிகள், மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வு இவை தான் வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருந்தன. இப்போது அதற்கு இடமில்லாமல் போய்விட்டது. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை பெருமுதலாளிகள் தீர்மானிக்கின்றனர். அதற்காகப் பெருந்தொகையை தாங்கள் விரும்பும் கட்சிகள் மூலமாகச் செலவிடுகின்றனர். காலப்போக்கில் தேர்தல் என்றாலே வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் மக்களுக்கு சுதந்திரத்துடன் ஜனநாயகத்தையும், வாக்குரிமையையும் அளித்தனர். இப்போதைய தேர்தல் நடைமுறை நமது தீர்க்கத்தரிசிகள் வழங்கிய ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான ஜனநாயகம், சமதர்மம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியன சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வோர் தேச துரோகிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். லஞ்சம் அனைத்து மட்டத்திலும் புற்றுநோயாகப் பரவிவிட்டது. இவற்றையெல்லாம் தூய்மைப்படுத்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
புதிய மாற்றத்தை நோக்கி: தேர்தல் நடைமுறையிலேயே மாற்றம் வரவேண்டும் என்பதைத் தான் நீண்டகாலமாக திமுக வலியுறுத்தி வருகிறது. கட்சிகளுக்கு வாக்களித்து விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும். சமீபகாலமாக தேர்தல் அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை மக்கள் வரவேற்கவில்லை. குறிப்பாக, இளைஞர்கள் இத்தகைய சூழலுக்கு எதிர்ப்பாகவே இருக்கின்றனர். இளம் தலைவர்களும் அதை உணரத் தொடங்கிவிட்டனர். 2014 தேர்தலின்போது நரேந்திர மோடி தான், பிரதமராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உருவாக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் அனுபவங்கள் தற்போது மக்களிடம் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஆகவே, புதிய மாற்றங்கள் வெகுதூரத்தில் இல்லை என்பது தேர்தல்களில் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
படம்: ப.விஜயகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.