Enable Javscript for better performance
MGR'S IMAGE AND FAN CLUB!|எம்.ஜி.ஆரின் பிம்பமும் ரசிகர் மன்றங்களும்- Dinamani

சுடச்சுட

  

  எம்.ஜி.ஆரின் பிம்பமும் ரசிகர் மன்றங்களும்

  By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published on : 04th November 2019 05:03 PM  |   அ+அ அ-   |    |  

  00000_MGR

   

  எம்ஜிஆர் மறைந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. எம்ஜிஆரை யார் என்றே தெரியாத ஒரு தலைமுறையும் தோன்றிவிட்டது. ஆனால் தமிழ் பொது சமூகத்தின் நினைவுகளில் எம்ஜிஆர் இன்றும் வாழ்கிறார். இப்போதும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அவர் கடவுள். அவரது பெயரைச் சொல்லியே இப்போதும் அவர் ஆரம்பித்த கட்சி ஆட்சிக்கு வருகிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்பும் அவரது நினைவு நாளின் போது வீதிக்கு வீதி அவரது படத்தை வைத்து தேங்காய், பழம், ஊதுவத்தி வைத்து வணங்குகிறார்கள். இப்படி ஒரு நினைவு நாளை நான் அறிந்த வரை தமிழகத்தில் வேறு எவருக்கும் அனுஷ்டித்துப் பார்த்ததில்லை.

  ஒரு நடிகராகவோ அரசியல்வாதியாகவோ அல்ல; கிட்டத்தட்ட நாட்டுப்புற தெய்வமாகவே எம்.ஜி.ஆர் இங்கு திகழ்ந்தார். அவருக்காகப் பலர் அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்; அவருடைய 'கட் அவுட்' தாங்கிய தேரின் இரும்புக் கொக்கிகளை ஒருவர் தன் முதுகுச் சதையில் பிணைத்துக்கொண்டு 9 கி.மீ., இழுத்துச் சென்றார். சபரிமலை யாத்திரைக்குப் போவதைப் போல் கடும் விரதமிருந்து பலர் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த சிறிய கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

  'தன் காதலியின் அருகில் இருக்கும் போது கூட ஏழைகளைப் பற்றியே எங்கள் தலைவர் சிந்தித்துக் கொண்டிருப்பார், தெரியுமா' என்கிறார் ஒரு ரசிகர். 'எப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்ட போது, ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'அதில் அப்படித்தான் காட்டியிருக்கிறார்கள், பாருங்கள்' என்று பதிலளித்திருக்கிறார். எது நிஜம்?, எது நிழல்? என்று பிரிக்க முடியாத படிக்கு எம்.ஜி.ஆரின் பிம்பம் தமிழக மக்களின் மனதில் குறிப்பாக அவரது ரசிகர்களின் மனதில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது

  எம்ஜிஆரின் கதாநாயக பிம்பத்தை வலுவாக்குவதில் அவரது வில்லன்கள் முக்கியப் பங்கு வகித்தனர். நம்பியாரின் கதாபாத்திரத்தை மிக மோசமானதாக படைப்பதன் மூலம் தனது கதாபாத்திரம் மிக நல்லவனாக, மக்கள் மனதில் தங்கும் என்பதை உணர்ந்து தொடர்ந்து அதைச் செய்து வந்தார். அதேபோல், திரைத்துறையில் சக கலைஞர்கள் அவரை மரியாதையாக அழைக்கும் ‘வாத்தியார்’ போன்ற வார்த்தைகளை தேங்காய் சீனிவாசன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மூலம் திரைப்படத்திலும் பேசவைத்தார். இதன்மூலம் பொதுமக்களிடையே எம்ஜிஆர் என்ற பிம்பம் எந்த மாதிரியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதை அவர் தனக்குத்தானே வடிவமைத்தார்.

  பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்ஜிஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்ஜிஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
  இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப்பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து கெட்டவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன். இப்படி எத்தனை எத்தனையோ பிம்பங்கள்!

  இந்த பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்ஜிஆரின் திரைப்படிமம் வெகு ஜனங்களின் மனவார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு, அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.
  எதிரிகளைப் பந்தாடும் எம்ஜிஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்ஜிஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

  “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்ஜிஆர் நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

  தனது படங்களில் மது குடிக்காதவராக நடித்த எம்.ஜி.ஆர் தந்தை பெரியாரைப் போலவே இறுதிவரை தன் வாழ்வில் அதை கடைப்பிடித்தார். அது, பெண்கள் மத்தியில் அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சராக இருந்தபோது 1984ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவந்து திரையில் கதாநாயகனாகத் தோன்றிய தனது கதாபாத்திரங்களுக்கும் தமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என நிரூபித்தார்.

  சிறுவயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த எம்ஜிஆர் இயல்பாகவே தாய்ப்பாசம் மிக்கவராக இருந்தார். தனது திரைப்படங்களிலும் தாய்ப்பாசம் மிக்கவராக தோன்றினார். அது, அவரை தமிழக மக்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது .

  எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.

  காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.

  இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ, வாலியையோ உணர்வோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

  திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

  திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.

  தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக் ஷன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.

  ரசிகர் மன்றம்

  முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது. 

  தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென  அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai