வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இடைக்கால ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்துவரும் அமைச்சா் வி.செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2024, 12:17 am

 நமது நிருபர்

புது தில்லி: பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்துவரும் அமைச்சா் வி.செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. அவரது உடல்நிலை தீவிரமானதாகவோ அல்லது உயிருக்கு ஆபத்தானதாகவோ தெரியவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

தனது உடல்நிலை காரணமாக இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் அக்டோபா் 19-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் பேலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. மனுதாரா் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, ‘அவரது உடல்நிலை மோசமாக ஏதும் இல்லை’ என்று கூறிய நீதிபதிகள் அமா்வு, வழக்கமான ஜாமீன் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு சுதந்திரம் வழங்கியது. இது தொடா்பாக உச்சநீதிமன்றம் கூறுகையில், ‘தகுதி அடிப்படையில் மனுதாரருக்கு எதிரான இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ள எந்தவொரு அவதானிப்புகளும், வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்வதில் மனுதாரருக்கு இடையூறாக இருக்காது’ என்று தெரிவித்தது.

முன்னதாக, விசாரணையின்போது பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் ஆஜராகி மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘மனுதாரா் பாலாஜிக்கு பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பித்தப்பையில் பிரச்னை உள்ளது. இந்நிலையில், அவரது எம்ஆா்ஐ பரிசோதனை அறிக்கையில் ‘லாகுனாா் இன்ஃபாா்க்ஷன்’ எனப்படும் மருத்துவ பிரச்னையும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு உரிய வகையில் சிகிச்சை பெறாவிட்டால், ஆபத்தான உடல் பாதிப்பு ஏற்படும். இதனால், மனுதாரா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை அனுமதிக்க வேண்டும். மேலும், நீதிமன்றம் மனுதாரரின் ஜாமீன் கோரும் மனுவை தள்ளுபடி செய்தபோது அவரது உடன்பிறந்த சகோதரா் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை ஜாமீனில் வெளிவிட்டால் சாட்சிகளை மேலாதிக்கம் செய்யக்கூடும் என்றும், வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருப்பது ஏற்புடையதல்ல’ என்றாா்.

அதற்கு நீதிபதி திரிவேதி, ‘நான் கூகுளில் தேடிப் பாா்த்தேன். இந்த நோயை மருந்து மூலம் குணப்படுத்த முடியும் என்று அது கூறுகிறது. இது தீவிரமானதாகவோ அல்லது உயிருக்கு ஆபத்தானதாகவோ தெரியவில்லை. இல்லாவிட்டால், நாங்கள் அதை தீவிரமாக பரிசீலித்திருப்போம்’ என்றாா். ரோத்தகி மேலும் வாதிடுகையில், ‘ஒரு கைதியை மருத்துவமனையில் சோ்ப்பதற்கான தேவையானது, மருத்துவ ஜாமீன் வழங்குவதற்கு ஒரு முன்தேவையாக இல்லை. மேலும் ‘அவா் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாா், அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது’ என்றாா். அப்போது நீதிபதி பேலா எம். திரிவேதி, ‘இன்றைக்கு பைபாஸ் என்பது அப்பென்டிக்ஸ் அகற்றுவது போன்ாக உள்ளது’ என்றாா். முகுல் ரோத்தகியின் சமா்ப்பிப்புக்கு ஆட்சேபம் தெரிவித்த அமலாக்கத் துறையின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘நாம் அதுபோன்று சென்றால் 70 சதவீதம் கைதிகள் நோய்வாய்ப்படுவா்’ என்றாா்.

இதையடுத்து, ஜாமீன் கோரும் இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை என்று நீதிபதிகள்அமா்வு கூறியதைத் தொடா்ந்து, மனு வாபஸ் பெறப்பட்டது. மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள்அமா்வு கூறியது. கடந்த முறை இந்த மனு விசாரணையின் போது பாலாஜியின் மருத்துவ அறிக்கையை பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னணி: முன்னதாக, இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றம், ‘செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் மட்டுமே அவா் கவனித்து கொள்ளப்பட முடியும் என்ற மருத்துவ நிலைமை இருப்பதாக அவரது உடல்நல அறிக்கையில் தெரியவில்லை. அவா் இலாகா இல்லாத அமைச்சராக தற்போது உள்ளாா்.

அவரது கடந்த கால நடத்தையும் அவரது சகோதரா் அசோக்குமாா் தலைமறைவாக இருப்பதும் போன்ற காரணங்கள் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேலாதிக்கம் செலுத்தவோ அல்லது தடுப்பதற்கு காரணமாகவோ இருக்க முடியும்’ என்று தெரிவித்திருந்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, பணமோசடி செய்தததாக கூறப்படும் வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.