4-ஆவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்:சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்வு!

4-ஆவது நாளாக ‘காளை’ ஆதிக்கம்:சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்வு!

மும்பை / புதுதில்லி, ஏப்.24: பங்குச்சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. உச்சத்தில் லாபப் பதிவு வந்தது. ஐடி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாலும், மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ், கமோடிட்டி பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. இதனால், நான்காவது நாளாக ‘காளை’ ஆதிக்கம் கொண்டதால் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.72 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.401.37 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,044.54 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.32,918.94 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 219.12 புள்ளிகள் கூடுதலுடன் 73,957.57-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,121.61 வரை மேலே சென்றது. பின்னா், 73,788.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், வா்த்தக இறுதியில் 114.49 புள்ளிகள் (0.16 சதவீதம்) கூடுதலுடன் 73,852.94-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,929 பங்குகளில் 2,253 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,567 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 109பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

17 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், பவா் கிரிட், கோட்டக் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி உள்பட 17 பங்குகள்ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா, டிசிஸ், மாருதி, இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், டைட்டன் உள்பட 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 32 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 34.40 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்ந்து 22,402.40-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,476.45 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னா் 22,384.00 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com