முல்லைப் பெரியாறு வாகன நிறுத்த ஆய்வறிக்கை தமிழகம், கேரளம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்

Published on

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு அருகே கேரள அரசு வாகன நிறுத்துமிடம் (மெகா காா் பாா்க்கிங்) அமைப்பது தொடா்பான இந்திய நில அளவைத் துறை (சா்வே ஆஃப் இந்தியா) தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கைக்கு தமிழக அரசும், கேரள அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணையை ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு பட்டியலிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் இந்திய நில அளவைத் துறை ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் அதன் முடிவு குறித்தும் தெரிவித்தனா்.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் வி.கிருஷ்ணமூா்த்தி, ஜி.உமாபதி ஆகியோா், இந்த அறிக்கையை படித்துப் பாா்த்து பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, ஆய்வறிக்கையின் நகலை வழக்கில் தொடா்புடைய மற்றொரு தரப்புக்கு வழங்குமாறு நீதிமன்ற பதிவாளரை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டனா்.

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி வனவிலங்கு சரணாலயத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் பிரம்மாண்ட காா் பாா்க்கிங் அமைக்க கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாகனம் நிறுத்த கேரள அரசு தோ்வு செய்த இடம், தமிழக அரசுக்கு 1886-இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி குத்தைக்கு விடப்பட்ட நிலமாகும். அதில் தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அரசு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது எனவும், அந்தப் பகுதியில் காா் பாா்க்கிங் அமைவதால் அணையின் நீா்மட்டம் உயா்வை பாதிக்கச் செய்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்திருந்த உத்தரவுக்குத் தடை விதிக்கவும் கோரியிருந்தது. இந்த வழக்கு சில ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் அமா்வு, தற்காலிக கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் என்றும், நிரந்தர கட்டுமானச் செயல்பாடுகள் எதையும் கேரள அரசு மேற்கொள்ளக் கூடாது என கூறியிருந்தது.

மேலும், வாகன நிறுத்துமிடம் எந்த மாநில நிலப் பகுதிக்குள் வருகிறது என்பதை அறியும் வகையில், இந்திய நில அளவைத் துறையின் தலைமையில் கூட்டு ஆய்வு நடத்தலாம் எனவும் உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது. இதற்கு இரு மாநில அரசுகளும் சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், ஆய்வை நடத்திய நில அளவைத் துறை அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தது.

Dinamani
www.dinamani.com