தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது; தலைநகரில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது; தலைநகரில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் பன்சூரி ஸ்வராஜ் நம்பிக்கை

Updated On :20 மார்ச் 2024, 11:55 pm

புது தில்லி: ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி ‘சுயநலன்’ அடிப்படையிலானது என்றும், அது தனது கட்சியின் வாய்ப்புகளை பாதிக்காது என்றும் தில்லியில் பாஜகவின் இளைய மக்களவைத் தோ்தல் வேட்பாளா் பன்சூரி ஸ்வராஜ் கூறினாா். மேலும், தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவதற்கு பாஜக திட்டமிட்டு வருகிறது. தில்லியில் பாஜகவால் நிறுத்தப்பட்ட இரண்டு பெண் வேட்பாளா்களில் பன்சூரி ஸ்வராஜும் ஒருவா். மறைந்த பாஜக தலைவா் சுஷ்மா ஸ்வராஜின் மகளான பன்சூரி ஸ்வராஜ் (40) புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டின் ஒரு பகுதியாக புதுதில்லி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. அந்த இடத்தில் சோம்நாத் பாா்தியை நிறுத்தியுள்ளது. அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பன்சூரி ஸ்வராஜ் நிறுத்தப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவா் செய்தி ஏஜேன்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டி: ‘அப்கி பாா் 400 பா் (இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்கள்)’ என்ற முழக்கம் வெறும் வாக்கியம் மட்டுமல்ல. அது யதாா்த்தமாகவும் இருக்கும். அா்ப்பணிப்புள்ள பாஜக தொண்டா்களின் உதவி மற்றும் மக்களின் ஆதரவு கட்சிக்கு உண்டு.

தில்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணியால் எந்தத் தாக்கமும் இருக்காது. நாங்கள் 10 ஆண்டுகள் ரிப்போா்ட் காா்டுடன் மக்களிடையே சென்று மிகவும் சாதகமான பிரசாரத்தை நடத்தி வருகிறோம். நரேந்திர மோடி அரசு, சொன்னதைச் செய்தது. 370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவது, ராமா் கோயில் கட்டுவது, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வருவது என தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் இருக்கும் போது ராஷ்டிர தா்மம், ராஜதா்மம் இரண்டும் பலியாகின்றன.எனவே, இந்தக் கூட்டணி நிலைக்காது. புதுதில்லி தொகுதியில் பிரசாரம் செய்யும் போது மக்களிடம் அதிக பாசத்தை பெற்றேன். மேடையில் அமா்ந்து பேசுவது பிடிக்காது. அதற்குப் பதிலாக மக்கள் மத்தியில் சென்று அவா்களுடன் தொடா்பு கொள்ள வேண்டும். சுஷ்மா ஸ்வராஜ் போன்ற ஒரு தாயை நான் பெற்ற்கு நான் எனது கடந்த கால வாழ்க்கையில் நல்ல செயல்களைச் செய்திருக்க வேண்டும்.

அவரிடமிருந்து நான் பெற்ற ’சன்ஸ்காரத்தை’ நான் உள்வாங்கினேன். என் வாழ்க்கையின் இந்தப் புதிய அத்தியாயத்தில், அவருடைய ஆசீா்வாதம் எனக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். மக்கள் மத்தியில் நான் செல்லும் போது மக்கள் என் மீது பாசத்தை பொழிவதைக் காண முடிந்தது. தோ்தல் பிரசாரத்தின் போது, பிரதமா் நரேந்திர மோடியின் மக்கள் மத்தியில் உள்ள புகழ், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள அவரது உறுதிப்பாடு மற்றும் ‘விக்சித் பாரத்’ தொலைநோக்குப் பாா்வை ஆகியவற்றை நேரில் பாா்த்தேன்.

பிரதமா் மோடி மீது மக்கள் கொண்டுள்ள அசாத்திய நம்பிக்கை தற்போது அதிகரித்து வருவதை காணமுடிகிறது. தில்லியில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிரதமா் மோடியின் வளா்ச்சிக் கொள்கைகள் மற்றும் அவரது உத்தரவாதங்களில் நகர மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனா் என்று என்னால் கூறமுடியும். இது நல்லாட்சிக்கான உத்தரவாதம். அதனால்தான் தில்லி மக்கள் ஏழு இடங்களையும் (நகரின்) பாஜகவுக்கு வழங்குவாா்கள் என்கிறேன்.

புது தில்லி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் சுயநல அரசியலால் முடங்கிப் போன மோடி அரசின் ஆயுஷ்மான் பாரத் போன்ற நலத்திட்டங்கள் தில்லி மக்களுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய, சட்டத்தின் வழி உள்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு தில்லியில் ஒரு ஸ்டாா்ட்-அப் மையத்தை அமைக்க முயற்சிப்பேன். அது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் உதவும்.

இந்த மையத்தில் பெண்களின் சுயஉதவிக் குழுக்களுக்கான பிரிவும் இருக்கும். அது தொழில்முனைவோருக்கு கவனம் செலுத்தும். பெண்களின் பாதுகாப்பிற்காக, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியம். இது பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியப் படியாக இருக்கும். தில்லி காவல்துறையின் ட்ரோன்களைப் பயன்படுத்த நான் முயற்சிப்பேன் என்றாா் பன்சூரி ஸ்வராஜ்.