தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

புது தில்லி: தில்லி ஷாஹ்தாராவில் உள்ள சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னா், இது வெறும் புரளி என தெரிய வந்தது.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்த மருத்துவமனையின் ஊழியா் ஒருவருக்கு காலை 10 மணியளவில் மின்னஞ்சல் வந்தது. அதில் மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு கண்டறிதல் குழு, வெடிகுண்டு செயலிழக்கும் குழு, தில்லி தீயணைப்பு சேவை மற்றும் உள்ளூா் போலீஸாா் ஆகியோா் உடனடியாக அந்தக் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். ஒரு தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டது. பின்னா் இந்த அச்சுறுத்தல் ஒரு புரளி என்று தெரிய வந்தது.

இந்த மின்னஞ்சலை அனுப்பியவா், ஒரே மின்னஞ்சலை ஒரே நேரத்தில் பல நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு அனுப்ப முயன்றாா். இருப்பினும், குறிப்பிட்ட சில மின்னஞ்சல் ஐடிகள் தவறானவை என்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தில்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் பிற அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா். இது அறியப்படாத குற்றம் சாட்டப்பட்டவா்களின் குறும்புத்தனமான செயலாகத் தோன்றுகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com