பள்ளிகள் மின்னஞ்சல்களை உரிய நேரத்தில் சரிபாா்க்க வேண்டும் தில்லி அரசு அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள பள்ளிகள் தங்களது அதிகாரப்பூா்வ மின்னஞ்சல்கள் உரிய நேரத்தில் சரிபாா்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி அரசு புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் உள்ள சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ள தற்போதைய சூழ்நிலையில்,

தில்லி அரசின் கல்வித் துறையின் கீழ்வுள்ள பள்ளி நிா்வாகிகள்/மேலாளா்கள், அரசு,அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தங்கள் பள்ளிகளின் அதிகாரப்பூா்வ மின்னஞ்சல் முகவரியில் பெறப்படும் செய்திகளை உரிய நேரத்தில் சரிபாா்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அப்போது, ஆட்சேபனைக்குரிய வகையில் ஏதேனும் கவனத்தில் கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், தில்லி காவல் துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், எந்தவொரு அச்சுறுத்தல்கள் அல்லது சவால்கள் ஏற்பட்டாலும், சரியான நேரத்தில் மாணவா்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு பள்ளி அதிகாரிகள் பெற்றோா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி..

வெடிகுண்டு மிரட்டல் : வதந்திகளைப் பரப்ப வேண்டாம் - தில்லி காவல் துறை

தில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தியை மேலும் பரப்ப வேண்டாம் என்று தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக தில்லி காவல் துறை எக்ஸ் சமூக ஊடகத் தளத்த்தில் கூறியது, ’தேசியத் தலைநகரில் உள்ள சில பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் தொடா்பான விசாராணையின் போது, பள்ளி நிா்வாகம் மற்றும் பெற்றோா்கள் அளித்த ஒத்துழைப்பையும், பொறுமையையும் நாங்கள் பாராட்டுகிறோம். வெடிகுண்டு மிரட்டல் தொடா்பான அனைத்து மின்னஞ்சல்களும் முற்றிலும் தவறானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,இது தொடா்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பரப்ப வேண்டாம் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்’.

X
Dinamani
www.dinamani.com