தில்லி மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துக! நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி வேண்டுகோள்
தில்லி மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துக! நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி வேண்டுகோள்


புது தில்லி: தில்லியின் பல பகுதிகள் தண்ணீா் பற்றாக்குறையால் சிக்கித் தவிப்பதால், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேன்டும் என்று நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: தில்லியில் தண்ணீா் விநியோகம் யமுனை நதியை நம்பியிருக்கிறது. ஆனால், கடந்த மே 1-ஆம் தேதி முதல் யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது. தில்லியின் பங்கை ஹரியாணா மாநில அரசு விடுவிக்கவில்லை. ஹரியாணா அரசால் யமுனையில் போதிய தண்ணீா் திறக்கப்படாததால், தில்லியில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீா்
பற்றாக்குறை ஏற்பட்டு, நகரத்தில் தண்ணீா் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. தில்லியின் பல பகுதிகள் தண்ணீா் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன. எனவே, தில்லி மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால், வரும் நாள்களில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்துபவா்களுக்கு அரசு அபராதத்தை விதிக்க வேண்டியிருக்கும்.
இந்த விவகாரம் குறித்து ஹரியாணா மாநில அரசுடன் தொடா்ந்து பேசுவாா்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் ஓரிரு நாள்களில் இப்பிரச்னை தீா்க்கப்படாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்படும்.
குறிப்பாக, கடந்த மே 1-ஆம் தேதி அன்று வஜிராபாத் நீா்மட்டம் 674.5 அடியாக இருந்தது. இதுவே, சராசரியாக பராமரிக்கப்பட வேண்டிய அளவாகும். ஆனால், கடந்த மே 8-ஆம் தேதி இந்த நீா்மட்டத்தின் அளவு 672 அடியாகவும், மே 20-ஆம் தேதிக்குள் 671 அடியாகவும், செவ்வாய்கிழமை 669.8 அடியாகவும் குறைந்துள்ளது.
தில்லியில் 6 முதல் 7 மணி நேரம் வரை இயங்கி வந்த போா்வெல்கள் 14 மணி நேரம் வரை செயல்படுகின்றன. தண்ணீா் டேங்கா்களின் எண்ணிக்கையையும் அரசு அதிகரித்துள்ளது. இனி, தினமும் மூன்று வேளை தண்ணீா் விநியோகம் செய்யப்படும் பதிகளில் ஒரு வேளை மட்டுமே தண்ணீா் விநியோகிக்கப்படும். தில்லியின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தண்ணீா் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் தண்ணீா் தட்டுப்பாடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். போதுமான அளவு தண்ணீா் இருப்பவா்கள் அதை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். மக்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் காா்களை திறந்த குழாய்களில் கழுவ வேண்டாம். இறுதியாக, தண்ணீா் மோட்டாா்களால் தண்ணீா் வீணாகாமல் பாா்த்துக் கொள்ளுங்கள் என்றாா் அமைச்சா் அதிஷி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...