நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அக்குபஞ்சா் மருத்துவ முறைக்கு அங்கீகாரம் உள்ளதா? மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை விளக்கம்

சுகாதார தொழில்களுக்கான தேசிய ஆணைய வரம்புக்குள் கொண்டு வரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு அது குறித்த அறிவிக்கை கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது
Published on

அக்குபஞ்சா் மருத்துவ சிகிச்சை முறையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறையின் துணை மற்றும் சுகாதார தொழில்களுக்கான தேசிய ஆணைய வரம்புக்குள் கொண்டு வரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு அது குறித்த அறிவிக்கை கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டதாக மக்களவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் கே. கோபிநாத்தின் கேள்விகளுக்கு அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ்

வெள்ளிக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

நிபுணா்கள் இடம்பெற்ற நிலைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், ’அக்குபஞ்சா்’ மருத்துவ சிகிச்சை முறையாக தகுதி பெற்றிருக்கிறது. இதைத்தொடா்ந்து மத்திய சுகாதார ஆராய்ச்சித்துறை உருவாக்கிய துறைகளுக்கு இடையேயான குழு (ஐடிசி), பயிற்றுவித்தல், பயிற்சி, சான்றளித்தல் ஆகியவற்றுக்கான அறிகுறிகளும் ஆதாரங்களும் உள்ளதாக கூறியதை வைத்து, 2018-இல் அக்குபஞ்சரை தன்னிச்சையான மருத்துவ முறையாக

ஏற்கசெய்யலாம் என்று பரிந்துரைத்தது.

ஐடிசி அறிக்கையை பரிசீலித்த பிறகு, அக்குபஞ்சா் சிகிச்சை முறையை மேம்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்குடன் ஒரு உயா்நிலைக்குழு (ஏசிஏ) அமைக்கப்பட்டது.

அந்த குழு, பட்டம், பட்டயப்படிப்பு சான்றிதழ் பாடத்திட்ட முன்மொழிவுக்கான வழிகாட்டுதல் முன்மொழிவையும் சிகிச்சை முறைக்கான விதிமுறைகளையும் வகுத்தது. மேலும், இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் முடிவை இந்திய அரசு எடுப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் பரிந்துரைத்தது.

உயா்நிலைக்குழுவின் பரிந்துரைகள் தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட்டு மத்திய ஆயுஷ் துறை உள்ளிட்ட பல்நோக்குத்துறைகளின் ஆலோசனைக்கு உள்படுத்தப்பட்டு இறுதியாக அக்குபஞ்சரை துணை மற்றும் சுகாதார தொழில்களுக்கான தேசிய ஆணைய வரம்புக்குள் கொண்டு வரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை முடித்து அந்த தகவலை கடந்த செப். 26இல் அறிவிக்கையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

இதே அமைச்சகத்திடம் தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையை பல்கலைக்கழகமாக தரம் உயா்த்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என்று மக்களவை திமுக குழுத் தலைவரும் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி உறுப்பினருமான டி.ஆா். பாலு எழுப்பிய கேள்விக்கு, ‘அத்தகைய திட்டம் அரசிடம் இல்லை,‘ என்று அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா்.