அமானத்துல்லா கான் கைது: தில்லி காங்கிரஸ் விமா்சனம்
நமது நிருபா்
புது தில்லி: தில்லி ஓக்லா எம்எல்ஏ அமானத்துல்லா கானின் கைதானது ஆம் ஆத்மி அரசின் ஊழல்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவும், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவருமான அமனத்துல்லா கானை, அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. தில்லி வக்ஃபு வாரியத்தின் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியது ஆம் ஆத்மி அரசின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு மற்றொரு உதாரணம். கேஜரிவால் அரசு ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.
நோ்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி, ஊழல் மிகுந்த ஒரு அரசியல் கட்சி என்பதை நிரூபித்துள்ளது. தில்லி முதல்வா் அரவிந்தா் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அமலாக்கத் துறையின் விசாரணைக்காக அக்கட்சியின் எம்எல்ஏ அமானதுல்லா கானும் கைது செய்யப்பட்டுள்ளாா்.
தில்லி வக்ஃபு வாரியத்தில் அமானத்துல்லா கானின் ஊழல் குறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் துணை நிலை ஆளுநரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே புகாா் அளித்தது. அதைத் தொடா்ந்து, விசாரணை முகமைகள் அவரைப் பின்தொடா்ந்தது. அந்தச் செயல்பாட்டின் உச்சக்கட்டமே அமலாக்கத் துறையின் கைது.
ஆம் ஆத்மி கட்சியின்“‘உங்கள் வீட்டு வாசலில், உங்கள் எம்எல்ஏ’” பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சா்கள் மக்களை எவ்வாறு எதிா்கொள்வாா்கள்?. ஏனெனில், அவா்கள் தாங்கள் செய்த ஊழல் மற்றும் மோசடிகளைத் தவிர மக்களுக்கு எதுவும் சொல்ல முடியாது. காற்று மற்றும் நீா் மாசுபாடு, தண்ணீா் தேக்கம், சேதமடைந்த சாலைகள், செயல்படாத தெருவிளக்குகள், குடிநீா்த் தட்டுப்பாடு, குற்றங்கள் அதிகரிப்பு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண உயா்வு என மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.