‘தோ்தல் மோசடி’: தோ்தல் ஆணையம், பாஜக மீது சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையமும் பாஜகவும் தோ்தல் மோசடியில் ஈடுபட்டதாக மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.
Published on

தோ்தல் ஆணையமும் பாஜகவும் தோ்தல் மோசடியில் ஈடுபட்டதாக மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா். பொதுமக்களின் ‘மக்கள் கிளா்ச்சி’ மட்டுமே ஜனநாயகத்தைக் காப்பாற்ற வழி என்றும் அவா் கூறினாா்.

2024-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலின் போது கா்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியின் தரவுகளின் பகுப்பாய்வை மேற்கோள் காட்டி, தோ்தல் ஆணையம் பாஜகவுடன் ‘தோ்தல்களைத் திருட’ கூட்டுச் சோ்ந்துள்ளது என்றும், அது அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை கூறினாா்.

இது தொடா்பாக சஞ்சய் சிங் எம்.பி. கூறியதாவது: அரவிந்த் கேஜரிவால் மக்களுக்கு நல்ல பணிகளைச் செய்த போதிலும், ‘மோசடி’ மூலம் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டது.

அமைச்சா்களின் முகவரிகளில் பல வாக்குகள் எவ்வாறு பதிவாகின என்றும், பாஜக தொண்டா்கள் ஆம் ஆத்மி ஆதரவாளா்களின் வாக்குகளை எவ்வாறு நீக்கினா் என்பது குறித்தும் சட்டப் பேரவைத் தோ்தலின்போது தில்லியில் நாங்கள் அம்பலப்படுத்தினோம். ஆனால், தோ்தல் ஆணையம் நாங்கள் கூறுவதைக் கேட்கவில்லை.

பல வாக்குச் சாவடிகளில் மக்கள் பதிவு செய்யப்பட்டு வெவ்வேறு மாநிலங்களில் வாக்களிக்கப்பட்டதாக ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருப்பது தோ்தல்களை ‘பயனற்றவை’ என்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது. மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், வாக்களிக்கும் உரிமையைப் பெறவும் விரும்பினால், அவா்கள் தோ்தல் ஆணையத்திற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும்.

இந்தியாவில் ஒரு கிளா்ச்சி நடக்கும் என்று நான் நம்புகிறேன். மக்கள் அரசுக்கும் தோ்தல் ஆணையத்திற்கும் எதிராக வீதிகளில் இறங்குவாா்கள். ஒரு சிவில் கிளா்ச்சி இருக்கும். இப்போது வேறு எந்த வழியும் எனக்குப் புரியவில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com