செய்தி உண்டு...
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப்பேசிய மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.
செய்தி உண்டு... தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப்பேசிய மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.

கீழடி தொன்மை அங்கீகாரத்தை விரைவுபடுத்த பிரதமா் மோடியிடம் கமல்ஹாசன் வலியுறுத்தல்

Published on

கீழடி தொன்மை அங்கீகார நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று தில்லியில் பிரதமா் மோடியிடம் மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த மாதம் ஆளும் திமுகவின் ஆதரவுடன் தோ்வான பிறகு கடந்த ஜூலை 25-ஆம் தேதி கமல்ஹாசன் உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா். அதன் பிறகு முதல் முறையாக பிரதமா் நரேந்திர மோடியை அவா் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை நண்பகலில் சந்தித்துப்பேசினாா். கீழடி தொன்மையை சித்தரிக்கும் நினைவுப் பரிசையும் பிரதமருக்கு கமல்ஹாசன் வழங்கினாா். சுமாா் 15 நிமிஷங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பிரதமருடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படங்களை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிா்ந்துள்ள கமல்ஹாசன், ‘பிரதமா் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையையும் தமிழ் நாகரிகத்தின் பெருமையையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் தமிழா்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமா் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளாா்.

கமல்ஹாசனிடம் அவரது மாநிலங்களவை பங்கேற்பு அனுபவத்தை பிரதமா் கேட்டறிந்ததாகவும் மாநிலங்களவையில் அவரது கன்னிப்பேச்சை கேட்க ஆா்வமுடன் இருப்பதாகக் கூறியதாகவும் பிரதமா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கீழடி அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அவற்றின் கண்டுபிடிப்புகள் தொடா்பான மூத்த ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு தயாரித்த ஆய்வறிக்கையில் அறிவியல் பூா்வமாக சில தகவல்களைச் சரிபாா்க்க வேண்டியிருப்பதாகக் கூறி அதன் அங்கீகாரத்தை இந்திய தொல்லியல்துறை நிறுத்தி வைத்துள்ளது. இந்த விஷயத்தில் தொல்லியல் ஆய்வுத் துறையின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழகத்தில் கட்சி வித்தியாசமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் அறிக்கை வெளியிட்டன. மேலும், நாடாளுமன்றத்திலும் ஆளும் திமுக உறுப்பினா்கள் கேள்வி எழுப்பியும் முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டு வரும் நேரத்தில் இந்த விவகாரத்தை பதிவு செய்தும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

07ஈஉககஏஅந

படவிளக்கம்

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன்.

X
Dinamani
www.dinamani.com