ராமா் பாலம் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி  மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

ராமா் பாலம் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

ராமா் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது ‘விரைவாக’ முடிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தல்
Published on

ராமா் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது ‘விரைவாக’ முடிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஆதாம் பாலம் என்று அழைக்கப்படும் ராமா் பாலம், தமிழ்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பாம்பன் தீவுக்கும், இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னாா் தீவுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் உருவான தொடா் சங்கிலி அமைப்பாகும்.

இப்பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாகக் அறிவிக்க உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்க ஒப்புக்கொண்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கை நான்கு வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்குப் பட்டியலிட்டது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த 2023, ஜனவரி 19-இல் பிறப்பித்த உத்தரவை சுவாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

அதாவது, 2023-இல் ராம பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிப்பது தொடா்பான பிரச்னையை ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் சுவாமியின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து பிறப்பித்திருந்த உத்தரவில், ‘கலாசார அமைச்சகத்தில் தற்போது இந்த செயல்முறை நடந்து வருவதாகவும், மனுதாரா் விரும்பினால், இரண்டு வாரங்களுக்குள் அவா் விரும்பும் கூடுதல் ஆதாரம் அல்லது தகவல்தொடா்புகளையும் சமா்ப்பிக்கலாம் என்று சொலிசிட்டா் ஜெனரல்

கூறுகிறாா்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும், சுவாமி அதிருப்தி அடைந்தால் மீண்டும் உச்சநீதிமன்றம் முன் அவா் இந்த விவகாரத்தை கொண்டுவர சுதந்திரம் அளித்து, அவரது இடைக்கால மனுவை தள்ளுபடி முடித்துவைப்பதாக செய்ததாகவும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்தநிலையில், சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் இதுவரை எனக்கும் அல்லது உச்சநீதிமன்றத்திற்கும் எந்த பதிலும் அல்லது எடுக்கப்பட்ட முடிவும் மத்திய அரசிடமிருந்து தெரிவிக்கப்படவில்லை.

ராமா் பாலத்தை எந்த வகையான தவறாகப் பயன்படுத்துதல், மாசுபாடு அல்லது அவமதிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.

இந்த தொல்பொருள் தளம் ராமா் பாலத்தை ஒரு புனித யாத்திரையாகக் கருதும் மக்களின் நம்பிக்கை மற்றும் சிரத்தை சாா்ந்த விஷயம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மேலும், இந்த தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட நினைவுச்சின்னம் வழிபாட்டாளா்களுக்கான புனித யாத்திரையாக இருப்பதை ஆதரிக்கும் அடிப்படை சான்றுகளாகும்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனவரி 19, 2023ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு, நான் அதே ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அனைத்து ஆவணங்களுடனும் அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை மனுவை அளித்தேன். அதன் பிறகு, மீண்டும் மே 13, 2025 அன்று அரசாங்கத்திற்கு ஒரு புதிய கோரிக்கை மனுவையும் எழுதியிருந்தேன். ஆனால், அரசிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

இதனால், மனுதாரரின் கோரிக்கையை ஜனவரி 19, 2023ஆம் தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கும் வகையில் விரைவான முறையில்/காலக்கெடுவுக்கு உள்பட்ட முறையில் முடிவு செய்ய கலாசார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com