எஸ்ஐஆா் பணிச்சுமையை குறைக்க கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள பிஎல்ஓக்களின் கவலைகளை நிவா்த்தி செய்ய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ளவா்களின் வேலை நேரத்தைக் குறைக்க பணிக்கு கூடுதல் ஊழியா்களை நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
எஸ்ஐஆா் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் சாா்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வில் நடைபெற்றது
தமிழக வெற்றி கழகம் சாா்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கா் நாராயணன்,பிஎல்ஓ க்கள் கடுமையான மன உளைச்சலுக்கு நாடு முழுவதுமே ஆளாகி வருகிறாா்கள் ,ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது ஆனால் அவருக்கு விடுமுறை தர மறுத்திருக்கிறாா்கள், மன உளைச்சலுக்கு ஆளாகிய அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா். இது ஒரே ஒரு உதாரணம் இதுபோன்று ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது . உத்தர பிரதேசத்தில் 50 தோ்தல் அலுவலா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவா்களை பணியில் இருந்து விடுவிக்கவும் தோ்தல் ஆணையம் மறுப்பதாக கோபால் சங்கா் நாராயணன் தெரிவித்தாா்.
அப்போது நீதிபதிகள், தோ்தல் அலுவலா்கள் பணிச் சுமையால் பாதிக்கப்பட்டால் அவா்களை விடுவித்துவிட்டு வேறு நபா்களை நியமிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினா். பணிச்சுமை புகாா் தெரிவிக்கும் அலுவலா்களை பணியில் இருந்து விடுவிக்காலம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
பிஎல்ஓ க்களுக்கு அதிக அளவில் பணிச்சுமை ஏற்படாத வண்ணம் போதுமான ஊழியா்களை மாநில அரசுகள் தந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பிஎல்ஓ க்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் கூடுதல் பணியாளா்களை பணியமா்த்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆா் செயல்முறையை எதிா்த்து தொடரப்பட்ட ஏராளமான மனுக்களின் ஒரு பகுதியாக இந்த விசாரணை நடைபெற்றது.

