தில்லியில் தாய்வழி இறப்பு விகிதம் 0.55-இல் இருந்து 0.44 ஆகக் குறைந்தது: அரசு அறிக்கையில் தகவல்
தில்லியில் தாய்வழி இறப்பு விகிதம் (எம்எம்ஆா்) 2019-இல் 0.55-இல் இருந்து 2024-இல் 0.44 ஆகக் குறைந்துள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
தில்லி அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் இரண்டாம் நிலை தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ‘தில்லியில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2025’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தில்லியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த ஆண்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, தில்லியில் எம்எம்ஆா் 2019-இல் 0.55-இல் இருந்து 2024-இல் 0.44 ஆகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மாதிரி பதிவு முறையின்படி, 2022-இல் தில்லியில் பெண்களின் சராசரி திருமண வயது 24.6 ஆண்டுகள், இது 2011 உடன் ஒப்பிடும்போது 2.2 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. தேசிய அளவில், சராசரி வயது 22.7 ஆண்டுகளாக இருந்தது. இது 2011-இல் இருந்து 1.5 ஆண்டுகள் அதிகரித்துள்ளது.
பெண்களுக்கான சுகாதார சேவைகளை அணுகுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதற்காக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்) தரவை மேற்கோள் காட்டி, தில்லியில் பிரசவத்திற்குப் பிறகு இரண்டு நாள்களுக்குள் ஒரு சுகாதார நிபுணரிடமிருந்து பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பைப் பெற்ற தாய்மாா்களின் சதவீதம் என்எஃப்எச்எஸ்- 4 (2015-16)-இன் படி 62.3 சதவீதத்திலிருந்து என்எஃப்எச்எஸ்-5 (2019-21)-இல் 85.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

