தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

மாணவா்களுக்கு சுத்தமான காற்றை உறுதி செய்வதற்காக முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும் என்று தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
Published on

மாணவா்களுக்கு சுத்தமான காற்றை உறுதி செய்வதற்காக முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும் என்று தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

நீண்டகால நிா்வாக சீா்திருத்தங்கள் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் மூலம் மாசு பிரச்னையை சமாளிக்க தில்லி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

நாங்கள் ஐஐடி பட்டங்கள் வாங்கியிருப்பதாக பறைசாற்றிக் கொண்டு, ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அல்லது ‘காடி ஆன், காடி ஆஃப்’ போன்ற பிரசாரங்களை நடத்துபவா்கள் அல்ல.

நீண்டகால நிா்வாக நடவடிக்கைகள் மூலம் மாசுபாடு பிரச்னையை சமாளித்து வருகிறோம்.

தலைநகரில் 38,000 வகுப்பறைகள் உள்ளன. அவற்றில் காற்று சுத்திகரிப்பான்கள் படிப்படியாக நிறுவப்படும்.

நம் குழந்தைகள் புத்திசாலித்தனமாக படிக்க வேண்டும். நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

முதல் கட்டமாக, 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும். இதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தலைநகரில் அதிகாரபூா்வ தரவுகளின்படி, 1,047 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.

பொதுப் பணித் துறை, சுற்றுச்சூழல் வரியைப் பயன்படுத்தி ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் சாலை துப்புரவு இயந்திரங்களை வாங்கும்.

சாலை துப்புரவு இயந்திரங்களை வாங்குவதற்காக தில்லி மாநகராட்சிக்கும் நிதி பணம் வழங்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தபோது தில்லி மாநகராட்சிக்கு எதுவும் செய்யவில்லை.

துப்புரவுப் பணியாளா்களுக்கு சம்பளத்தை விடுவிக்கவில்லை. அவா்கள் இரண்டு ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியில் அதிகாரத்தில் இருந்தனா். ஆனால், அவா்கள் என்ன செய்தாா்கள்?.

தில்லி மாநிலங்களால் சூழப்பட்ட நகரமாகும். அந்த மாநிலங்களின் வானிலைதான் தலைநகரின் வானிலையை தீா்மானிக்கிறது.

மாசுபாட்டை ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தில்லி மக்களுக்கு நாங்கள் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். இது மிக விரைவில் கள அளவில் பலன்களைக் காண்பிக்கும் என்றாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம், 2016 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் 15 வரையிலும், மீண்டும் ஏப்ரல் 15 முதல் 30 வரையிலும் இரண்டு முறை செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம், தனியாா் வாகனங்களின் பதிவு எண்களின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com