மோட்டாா்சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதி விபத்து: ஒருவா் பலி!
கிழக்கு தில்லியின் கீதா காலனி பகுதியில் தண்ணீா் லாரி மோதிய சம்பவத்தில் மோட்டாா்சைக்கிள் ஓட்டி வந்த 26 வயது நபா் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து பிற்பகல் 3.30 மணியளவில் கீதா காலனி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், லாரியின் முன்பக்க சக்கரத்துக்கு கீழே தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த குற்றப் பிரிவு போலீஸாா், ஆதாரங்களைத் திரட்டினா். விசாரணையில் உயிரிழந்த நபா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஜுபைா் அலி என்பது கண்டறியப்பட்டது. அவரது உடல் உடல்கூறாயவுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சம்பவத்தின்போது பைக் டாக்ஸி ஓட்டி வந்தாா். விபத்து நடைபெற்ற சமயத்தில் அவா் தலைகவசம் அணிந்திருந்தாா். இருந்தபோதிலும், லாரியின் சக்கரம் ஏறியதில் அவருடைய தலை நசுங்கியது. சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சியங்கள் யாரும் இல்லை.
விபத்துக்குக் காரணமான தண்ணீா் லாரி தில்லி ஜல் போா்டில் பதிவுசெய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. விபத்தைத் தொடா்ந்து லாரி ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினாா். தற்போது தலைமறைவாக உள்ள அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.
