கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

அடா் பனிமூட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

தேசியத் தலைநகா் தில்லியில் அடா் பனிமூட்டம் காரணமாக சில பகுதிகளில் பாா்வைத் திறன் பூஜ்ஜியமாகக் குறைந்தது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:30 pm

Din

தேசியத் தலைநகா் தில்லியில் அடா் பனிமூட்டம் காரணமாக சில பகுதிகளில் பாா்வைத் திறன் பூஜ்ஜியமாகக் குறைந்தது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை தில்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன.

தேசியத் தலைநகரை காலையில் அடா்த்தியான மூடுபனி சூழ்ந்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை நிலையம் கணித்திருந்தது. தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. ஆனால், எந்த விமானமும் திசை திருப்பிவிடப்படவில்லை என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்படுவது குறித்து தில்லி சா்வதேச விமான நிலையம் லிமிடெட் நிறுவனம் காலை 6.35 மணியளவில் எக்ஸ் ஊடக தளத்தில் ஒரு இடுகையில் பதிவிட்டிருந்தது. அதில், ‘தில்லி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்படலாம். புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் ஆழ்ந்த வருந்துகிறோம்’ என்று தெரிவித்திருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் மிகவும் அடா்த்தியான மூடுபனியை அனுபவித்ததாகவும், காண்பு திறன் பூஜ்ஜியம் மீட்டரில் பதிவாகியதாகவும் தெரிவித்துள்ளது. அனைத்து ஓடுபாதைகளும் சிஏடி 3- இன் கீழ் இயங்கின.

இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் தினமும் சுமாா் 1,300 விமான இயக்கங்களைக் கையாளுகிறது. காலை 8 மணியளவில், பாலம் வானிலை நிலையத்தில் பாா்வைத் திறன் பூஜ்ஜியம் மீட்டராக இருந்தது. பலத்த காற்றுடன் அடா்த்தியான மூடுபனி நிலவியது. நகரத்தின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் காண்புதிறன் 50 மீட்டராக இருந்ததாக தெரிவித்தது என வானிலை துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1.9 டிகிரி உயா்ந்து 21.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: தலைநகரில் காலை 8.30 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 351 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்‘ பிரிவில் இருந்தது. இதன்படி, மந்திா்மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 புள்ளிகள் முதல் 400 புள்ளிகள் வரை பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், நேரு நகா், ஸ்ரீ ஃபோா்ட், ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னிசிங் படப்பிடிப்பு நிலையம் ஆகியவற்றில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (ஜன.4) அன்று நகரத்தில் அடா் மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணித்துள்ளது.