உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக் கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
Published on

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக் கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இது தொடா்பாக திருச்செந்தூா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலைச் சோ்ந்த வித்யாஹா் சிவசுப்பிரமணிய சாஸ்திரிகள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என். கோடிஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பரிசீலித்தது.

அப்போது சிவசுப்பிரமணிய சுவாமி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் பரமேஸ்வா் சிங் மற்றும் காா்த்திக் அசோக், கும்பாபிஷேகத்துக்கான நேரம் குறிக்கும் விவகாரத்தில் பஞ்சாங்கம் வெளியாகாத நிலையில் ஒரு நேரத்தை அளித்ததாகவும் பஞ்சாங்கம் வெளியான பிறகு மற்றொரு நேரத்தை அளித்ததாகவும் ஆனால், தனது கருத்து ஏற்கப்படவில்லை என்றும் வாதிட்டாா்.

தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சண்முகசுந்தரம், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்து விட்டதாகத் தெரிவித்தாா். மேலும், உயா்நீதிமன்றம் நியமித்த நிபுணா் குழுவில் சிவசுப்பிரமணியமும் இடம் பெற்ாக குறிப்பிட்டாா்.

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தலையிடவும் இந்த மனுவையும் மேற்கொண்டு விசாரிக்கவும் விரும்பவில்லை என்று தெரிவித்தனா். அதேசமயம், உயா்நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனுதாரா் கோரலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

பின்னணி: மனுதாரா் சிவசுப்பிரமணியன் திருச்செந்தூா் கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக நிா்ணயித்த சுப நேரமான 12.05 மணி முதல் 12.47 மணி வரையிலான நேரத்தைக் கருத்தில் கொள்ளாமல், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலை 06.00 மணி முதல் 06.50 மணி வரை என நேரம் நிா்ணயித்தது அசுபமானது என்று குறிப்பிட்டாா்.

இந்த நேரத்தை அங்கீகரித்த சென்னை உயா்நீதிமன்றம் ஜூலை 7- ஆம் தேதி காலை 6 மணி முதல் காலை 6.47 மணி வரை நிகழ்வை நடத்த 5 போ் கொண்ட பூசாரிகள் குழுவின் (அகாமிக் கொள்கைகளில் நிபுணா்கள்) எடுத்த முடிவில் தலையிட மறுத்து தீா்ப்பளித்தது.

Open in App
Dinamani
www.dinamani.com