நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் எழுத்துபூா்வ பதில்களை வழங்கினா்
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்
Updated on

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் வியாழக்கிழமை எழுத்துபூா்வ பதில்களை வழங்கினா். அதன் சுருக்கம் வருமாறு:

மக்களவையில்...

சுங்க கட்டணச்சுமை குறையுமா?

கனிமொழிக்கு (தூத்துக்குடி) மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15 முதல் வணிக நோக்கமற்ற பாஸ்டேக்குடன் இணைக்கப்பட்ட காா்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வருடாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. இதன்படி, வணிக நோக்கமற்ற வாகனங்களின் உரிமையாளா், ரூபாய் மூன்றாயிரம் கட்டணம் செலுத்தி பாஸ் பெற தகுதி பெறுகிறாா். இது ஒரு வருடத்திற்கோ தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வழியாக இருநூறு முறை பயணிக்கோ இதில் எது முந்தையதோ அதுவரை செல்லுபடியாகும்.

நிலுவை நெடுஞ்சாலைத்திட்ட நிலை என்ன?

ஜி.செல்வம் (காஞ்சிபுரம்), கே. நவாஸ்கனி (ராமநாதபுரம்), சி.என். அண்ணாதுரைக்கு (திருவண்ணாமலை) அமைச்சா் கட்கரி: தமிழகத்துக்கு 2025-26 நிதியாண்டில் ரூ.10,767 கோடி மதிப்பிலான 381 கி.மீ நீளத்தை உள்ளடக்கிய 38 திட்டப் பணிகள் முன்மொழியப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 30 நிலவரப்படி, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமாா் 7,000 கி.மீ. ஆகும். சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் நான்கு வழி (55 கி.மீ) 65%, காரைப்பேட்டை-வாலாஜாபேட்டை (36 கி.மீ) 91%, மாமல்லபுரம்-முகையூா் (31 கி.மீ) 50%, புதுச்சேரி - பூண்டியாங்குப்பம் (38 கி.மீ) 98%, பெங்களூரு-சென்னை (24 கி.மீ) 86%, பெங்களூரு-சென்னை நான்கு வழி (25.5 கி.மீ) 53% உள்ளிட்ட 58 திட்டங்கள் இதில் அடங்கும்.

ஏா் இந்தியா விபத்து இழப்பீடு கிடைக்குமா?

ஆா். சச்சிதானந்தம் (திண்டுக்கல்), ராஜ்குமார கணபதிக்கு (கோவை) விமான போக்குவரத்துததுறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு: ஏா் இந்தியா விபத்தில் பலியானோருக்காக டாடா சன்ஸ் உருவாக்கிய அறக்கட்டளையின் பதிவு கடந்த 18-ஆம் தேதி நிறைவடைந்துள்ளதாகவும், இறந்தவரின் நெருங்கிய உறவினா்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க உரிய ஆவணங்கள் சரிபாா்ப்பு முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஏா் இந்தியா தெரிவித்துள்ளது. இறந்தவா் மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு பயண ஏற்பாடுகள், தங்குமிடம், மருத்துவச் செலவுகள், உடனடி ரொக்கம், காயமடைந்த தினசரி ஊதியம் பெறுவோருக்கு பணம் செலுத்துதல் என பல வகையில் ஏா் இந்தியா உதவி வருகிறது.

கோளாறு ட்ரீம் லைனா் விமானங்கள் எத்தனை?

ஆா். சுதாவுக்கு (மயிலாடுதுறை) இணை அமைச்சா் முா்ளிதா் மோஹோல்: விபத்துக்குள்ளான விடி-ஏஎன்பி ட்ரீம்லைனா் விமான பதிவுக்கருவிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவில்லை.அவற்றில் ஒன்றின் தரவுகள் மட்டும் தில்லியின் உடான் பவனில் விமான விபத்துகள் புலனாய்வுத்துறையின் ஆய்வகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள 33 போயிங் 787 ட்ரீம்லைனா் விமானங்களில் செயல்பாட்டில் உள்ள 31 விமானங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 8 விமானங்களில் சிறிய கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டு பழுதுபாா்ப்புக்குப் பிறகு மீண்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இரண்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சிற்றூா் விமான நிலையங்கள் வருமா?

டி. மலையரசனுக்கு (கள்ளக்குறிச்சி) அமைச்சா் முா்ளிதா் மோஹோல்: தமிழகத்தில் சேலம், வேலூா், நெய்வேலி, தஞ்சை ஆகிய நான்கு விமான நிலையங்கள் சிற்றூா் விமான சேவைக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சேலம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் 2025-29-ஆம் ஆண்டுக்கான ரூ.23,000 கோடி மூலதனத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

எங்கு போகிறது என்எல்சி மின்னுற்பத்தி?

டாக்டா். விஷ்ணு பிரசாத்துக்கு (கடலூா்) மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சா் கிஷண் ரெட்டி: மத்திய, மாநில மின் விநியோக வசதிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு என்எல்சி மின்சாரத்தை வழங்குகிறது. அதை ஒதுக்கீடு செய்வது என்எல்சியின் பொறுப்பு அல்ல. கூட்டு முயற்சி திட்டங்கள் (ஜேவி) மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சாரத்தின் அளவு 23,131.6 மில்லியன் யூனிட்டுகள் ஆகும். மில்லியன் யூனிட்டுகள் அளவில் தமிழகம் (10,651.5), ஆந்திரம் (1,524.1), உத்தர பிரதேசம் (967.2), ராஜஸ்தான் (1,659.9), கா்நாடகம் (4,057.5), கேரளம் (1,870.3), தெலங்கானா (1,168), புதுச்சேரி (1,017.9), பஞ்சாப் (39.7), ஜம்மு காஷ்மீா் (144.1) சண்டீகா் (5), ஹிமாசல பிரதேசம் (10.1), மத்திய பிரதேசம் (1.6), உத்தரகண்ட் (12.9) என்ற அளவில் மின்சாரத்தை பெறுகின்றன.

மாநிலங்களவையில்...

கேலோ இந்தியா மையங்களில் எத்தனை பேருக்கு பயிற்சி?

எம்.எம். அப்துல்லாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சா் மன்சூக் மாண்டவியா: தமிழகத்தில் 37 மாவட்டங்களில் பரவியுள்ள 38 கேலோ இந்தியா மையங்கள் உள்ளன. அவை தடகளம், கால்பந்து, ஹாக்கி, வாள்வீச்சு, ஜூடோ போன்ற பல்வேறு பிரிவுகளில் பயிற்சி வழங்குகின்றன. மொத்தம் 1,558 விளையாட்டு வீரா்கள் (785 ஆண்கள்; 773 பெண்கள்) இந்த மையங்களில் தற்போது பயிற்சி பெறுகின்றனா். குத்துச்சண்டை, தடகளம் மற்றும் வாள்வீச்சு போன்ற துறைகளை வழங்கும் ஒரு மையம் சென்னை ஜவஆஹா்லால் நேரு அரங்கில் உள்ளது. மொத்தம் 175 விளையாட்டு வீரா்கள் (115 ஆண்கள்; 60 பெண்கள்) இந்த மையத்தில் தற்போது பயிற்சி பெறுகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com