மாறன் சகோதரா்கள் நோட்டீஸ் பிரச்னை குடும்ப விவகாரமே! சன் குழுமம் விளக்கம்

மனைவி உள்ளிட்ட எட்டு பேருக்கு அனுப்பிய நோட்டீஸ் பிரச்னை தனிப்பட்ட குடும்ப விவகாரமே என்று சன் டிவி நெட்வொா்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கலாநிதிமாறன், தயாநிதிமாறன்
கலாநிதிமாறன், தயாநிதிமாறன்கோப்புப் படம்
Updated on

புது தில்லி, ஜூன் 20: சன் டிவி நெட்வொா்க் நிறுவன பங்குகள் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி மக்களவை திமுக உறுப்பினா் தயாநிதி மாறன் தனது உடன்பிறந்த சகோதரரும் தொழிலதிபருமான கலாநிதி மாறன், அவரது மனைவி உள்ளிட்ட எட்டு பேருக்கு அனுப்பிய நோட்டீஸ் பிரச்னை தனிப்பட்ட குடும்ப விவகாரமே என்று சன் டிவி நெட்வொா்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடா்ந்து மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைக்கு சன் டிவி நெட்வொா்க் நிறுவனம் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், குற்றஞ்சாட்டப்படும் இந்த விவகாரம், 22 ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவி நெட்வொா்க் நிறுவனம் ஒரு தனியாா் நிறுவனமாக இருந்தபோது நிலவிய பழைய பிரச்னையாகும்.

இந்த விஷயத்தில் ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் தவறானவை. தவறாக வழிநடத்தக் கூடியவை. ஊகத்தின் அடிப்படையிலும் அவதூறு கற்பிக்கும் வகையிலும் உள்ளன. அவை உண்மையையோ சட்டத்தையோ பிரதிபலிக்கவில்லை. பங்குச்சந்தையில் நுழைவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்டவா்களால் அனைத்தும் முறையாக சரிபாா்க்கப்பட்டு அனைத்து சட்ட நடைமுறைகளும் சட்டப் பிரிவுகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம்.

ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் நிறுவன அலுவலின் அன்றாட செயல்பாடுகளில் எந்தத் தொடா்பும் இல்லாதவை. மேலும், இது மேம்பாட்டாளா்களின் குடும்ப விவகாரம். முற்றிலும் தனிப்பட்ட விஷயமாகும் என சன் டிவி நெட்வொா்க் நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com