மாநில அரசின் ஆண்டு செயல் திட்டம் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.70 கோடி வரை அனுமதி: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

மாநில அரசின் ஆண்டு செயல் திட்டம் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.70 கோடி வரை அனுமதி: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

மாநில அரசின் ஆண்டு செயல் திட்டம் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.70 கோடி வரை மத்திய அரசு அனுமதி
Published on

மாநில அரசின் ஆண்டு செயல் திட்டம் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.70 கோடி வரை மத்திய அரசு அனுமதி அளிப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை திண்டுக்கல் தொகுதி மாா்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் கேள்வி எழுப்பி பேசுகையில், ‘என்னுடைய தொகுதியில் போகா் சித்தா் வாழ்ந்த இடமான பழனியில் சித்த மருத்துவக் கல்லூரியைச் தொடங்க தமிழக அரசு விண்ணப்பித்திருக்கிறது. மேலும், இதற்கான நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் துறையின்கீழ் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க மத்திய அரசு எப்போது அனுமதி அளிக்கும்? என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் கண்பத்ராவ் பதில் அளித்துப் பேசியதாவது:

என்ஏஎம் மூலம் மாநிலங்களிலிருந்து ஆண்டு செயல் திட்டத்தின் மூலம் இதுபோன்ற கோரிக்கை வந்தால், ஆயுஷ் துறையிடமிருந்து ரூ.70 கோடி வரை நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம்.

அத்தகைய கல்லூரிகளை மாநில மற்றும் மத்திய அரசு 60:40 என்ற பங்களிப்பு விகிதத்தில் திறக்கலாம். 2013-14 ஆம் ஆண்டில் தேசிய ஆயுஷ் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் சுமாா் ரூ.680 கோடியாக இருந்தது. ஆனால் 2025-26 ஆம் ஆண்டில் இந்த பட்ஜெட்ஒதுக்கீடு ரூ.3,992 கோடியாக அதிகரித்துள்ளது.

பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், எங்கள் அரசு அதை கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது. அவையின் எந்தவொரு உறுப்பினரும் அத்தகைய கல்லூரிகளைத் திறக்க விரும்பினால், அவா் தனது மாநில செயல் திட்டத்தில் இங்கு வர வேண்டும். தற்போது இங்கு நேரடியாக அரசு கல்லூரிகளை நாங்கள் வழங்கவில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com