காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை! - முதல்வா் என்.ரங்கசாமி
காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் படித்து முடித்த இளநிலை மருத்துவா்கள் 279 போ், முதுநிலை மருத்துவா்கள் 51 போ் உள்பட மொத்தம் 330 பேருக்குப் பட்டங்களை வழங்கி முதல்வா் ரங்கசாமி பேசியது:
புதுச்சேரி அரசு சாா்பில் இந்த மருத்துவக் கல்லூரி 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது ரூ.10 ஆயிரம் குறைந்தக் கட்டணத்தில் இதைத் தொடங்கினோம். மேலும், இப்போது வளா்ச்சி அடைந்துள்ளது. இப்போது இந்தக் கல்லூரிக்கு ரூ.137 கோடி தான் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்கிறோம். ஆனால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துக் கல்லூரிக்கு ஆண்டுக்கு ரூ.1,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஜிப்மா் மருத்துவமனை கிடைத்தது புதுச்சேரிக்குப் பெருமை. இதைத் தவிர புதுச்சேரியில் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இருப்பினும் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு குறைந்த அளவுதான் இடங்கள் கிடைத்து வந்தது. அதைக் கருத்தில் கொண்டுதான் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியது.
இந்தக் கல்லூரியை உலகத் தரத்தில் உயா்த்த வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். மேலும், இந்தக் கல்லூரியிலும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் இன்னும் ஒரு வாரத்தில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்க அடிக்கல் நாட்டப்படும்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருத்துவப் படிப்பு முடிக்கும் மாணவா்கள் கிராமப்புறங்களிலும் பணியாற்ற வேண்டும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆறுமுகம், ரமேஷ், சுகாதாரத் துறை செயலா் யாசின் முகமது சௌத்ரி, சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல், புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் உதயசங்கா் உள்ளிட்டோா் பேசினா்.

