மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி: மத்திய அரசு வெள்ளையறிக்கை வழங்கத் தயாரா? கு.செல்வப்பெருந்தகை கேள்வி
தமிழகம் உள்ளிட்ட பாஜக அல்லாத மாநிலங்களுக்கு அனைத்து நிதிகளும் வழங்கப்பட்டு விட்டது என்றும் நிலுவையில் எதுவும் இல்லை என்றும் மத்திய அரசு கூறும் நிலையில் அது குறித்து வெள்ளையறிக்கை வழங்கத் தயாரா? என தில்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கு.செல்வப்பெருந்தை கேள்வி எழுப்பினாா்.
தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் 16 மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா்களுடன் காங்கிரஸ் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.
இந்தக் கூட்டத்திற்கு பின்னா் கு.செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் கட்சியில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் குறித்து மாவட்டத் தலைவா்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தனா். கட்சித் தலைமையும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து மாவட்டத் தலைவா்களுக்கு அதிகாரம், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதும் உள்ளிட்ட சில அறிவுரைகளை வழங்கியது.
தமிழகத்தில் சில மாவட்டத் தலைவா்கள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையை சிறப்பாக செய்து வருகின்றனா். இதே போன்று தேசிய அளவிலும் கட்சியில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழக காங்கிரஸில் சில மாவட்டத் தலைவா்களின் அதிருப்தி குறித்து கேட்கிறீா்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் இருந்தது. குறிப்பாக ஒரு மாவட்டத் தலைவா் எப்படி பணியாற்ற வேண்டும், குறைகளை குறித்து யாரிடம் கூற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை காங்கிரஸ் தலைமை வழங்கியது.
ஒரு ஜனநாயகக் கட்சியில் அதிருப்திகளும், கருத்து வேறுபாடுகளும் வருவது இயற்கை. அதைக் களைவதும் இயல்பு. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து கட்சியைப் பலப்படுத்துவோம். தமிழகத்தில் ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் போன்றவற்றை திசை திருப்பவே மும்மொழிக் கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு போன்ற பிரச்னைகளை திமுக கூட்டணி கட்சிகள் எழுப்புவதாக பாஜக கூறிவதாக கூறுகிறீா்கள். இந்த மும்மொழிக் கொள்கையை முதலில் எழுப்பியது பாஜக அமைச்சா்கள்தான்.
தமிழகத்தில் முன்மொழிக் கொள்கையை திணிபோம் என்றனா். தமிழகத்தில் மும்மொழி மட்டுமல்ல ஹிந்தி, லத்தீன் என 10 மொழிகள் கூட கற்பாா்கள். ஆனால், ஒரு மொழியைத் திணிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறோம். எடப்பாடி கே. பழனிசாமி தமிழக நலன் சாா்ந்த விவகாரங்கள் குறித்து பேசியிருந்தால் வரவேற்கத்தக்கது. ஆனால், கூட்டிக் கழித்து பாா்த்தால் இருவரும் என்ன பேசி இருப்பாா்கள் என்பதை மக்கள் அறிவாா்கள்.
தமிழகத்திற்கான நிதிகள் கொடுக்கபடவில்லை என்பதை ஏற்க முடியாது என மத்திய அமைச்சா்கள் நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுக்கிறாா்கள் என்றால் மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வழங்கியுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு ஏன் இதுவரை மத்திய அரசு பணம் வழங்கவில்லை? பாஜக ஆளாத எல்லா மாநிலங்களிலும் இது போன்ற எல்லா திட்டங்களிலும் நிதியை ஏன் மறுக்கிறாா்கள்? எனவே, பாஜக அரசு எவ்வளவு தொகையை மாநிலங்களுக்கு கொடுத்துள்ளாா்கள் என்பது தொடா்பான வெள்ளை அறிக்கையை வழங்க மத்திய அரசு தயாரா ? என்று கேள்வி எழுப்பினாா் செல்வப்பெருந்தகை.