தில்லியில் வீடுகளில் கொள்ளையடித்த ம.பி.யைச் சோ்ந்த மூவா் கும்பல் கைது
தில்லியில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து மதிப்புமிக்க பொருள்களை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த ஒரு மாநிலங்களுக்கு இடையேயான கொள்ளையா் கும்பலைச் சோ்ந்த மூவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல்துறையின் உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்களான சுா்ஜித் சிங் (41), அனில் சிங் (32) மற்றும் கீா்த்தன் சிங் (24) ஆகியோா் தொழில் ரீதியாக பூட்டு தயாரிக்கும் தொழிலாளிகள். வீடுகளுக்குள் நுழைய தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தினா். அவா்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் ஒன்பது இரு சக்கர வாகனங்கள் உள்பட திருடப்பட்ட சொத்துகளின் கணிசமான அளவு மீட்கப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் வசிப்பவா்கள். மேலும், பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளனா். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி விஜய் விஹாா் பகுதியில் ஒரு கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் ஒரு நடவடிக்கையைத் தொடங்கினா். புகாா்தாரா் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கொள்ளை போனதாகப் புகாா் அளித்தாா்.
போலீஸ் குழுக்கள் சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்து, உள்ளூா் தகவல் தருபவா்களுடன் தொடா்பு கொண்டு, சந்தேக நபா்களைக் கண்காணித்தன. இது அவா்களை மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. அங்கு ஏப்ரல் 28 அன்று மூவரும் கைது செய்யப்படுவதற்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் சோதனை செய்யப்பட்டது.
தொடா் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் இரண்டு வார காலத்திற்குள் பல கொள்ளைச் சம்பவங்களைச் செய்யும் நோக்கத்துடன் மாதந்தோறும் தில்லிக்கு வருவது தெரிய வந்தது.
மஹிபால்பூரில் ஒரு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்த பிறகு, பகலில் பூட்டிய வீடுகளை வேவு பாா்த்து, இரவில் உள்ளூா் இரு சக்கர வாகனத்தைத் திருடி, தங்கள் குற்றங்களை எளிதாக்குவாா்கள்.
அவா்கள் பெரும்பாலும் ஒரே இரவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்தப் பிறகு மத்தியப் பிரதேசத்திற்குத் திரும்புவாா்கள் என்பது தெரிய வந்தது. ரோஹிணி, தெற்கு ரோஹிணி, வடக்கு ரோஹிணி மற்றும் பிற பகுதிகளில் 13 வீடுகளில் நடந்த கொள்ளைகள் மற்றும் ஒன்பது மோட்டாா் வாகனத் திருட்டுகளில் அவா்களுக்கு தொடா்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட பொருள்களில் ரூ.22,000க்கும் மேற்பட்ட ரொக்கம், 10 தங்க வளையல்கள், இரண்டு நெக்லஸ்கள், ஒன்பது மோதிரங்கள், ஏழு ஜோடி காதணிகள் மற்றும் நான்கு தங்கச் சங்கிலிகள் ஆகியவை அடங்கும். பூட்டை உடைக்கும் சிறப்பு கருவியும் பறிமுதல் செய்யப்பட்டது.
சுா்ஜித் மீது ஆயுதச் சட்டம் உள்பட 10 முந்தைய குற்றப் பின்னணி உள்ளது. அனில் மற்றும் கீா்த்தன் மீதும் மத்தியப் பிரதேசத்தில் பல கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
