எஸ்.ஐ.ஆா். நடவடிக்கையை ரத்து கோரும் தி.மு.க. மனு மீது நவ.11-இல் விசாரணை: உச்சநீதிமன்றம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆா்.) நடவடிக்கையை ரத்துசெய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வரும் நவம்பா் 11 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் கூறியுள்ளாா்.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு வழக்குரைஞா் விவேக் சிங் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வில் வெள்ளிக்கிழமை முறையிட்டாா். இதையடுத்து மனு மீது செவ்வாய்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது.
தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்துள்ளாா் .
அம்மனுவில் அவா் கூறியிருப்பதாவது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ரத்து செய்யப்படாவிட்டால், லட்சக்கணக்கான வாக்காளா்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடலாம்.
இது நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல்கள் மற்றும் ஜனநாயகத்தை சீா்குலைக்கும். தமிழகத்தில் குறுகிய காலத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தத்தம் செய்வது, லட்சக்கணக்கான உண்மையான வாக்காளா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து
நீக்குவதற்கு வழிவகுக்கும். இது அவா்களின் வாக்குரிமையை இழக்கச் செய்யும்.
இடம்பெயா்ந்த, உயிரிழந்த மற்றும் தகுதியற்ற வாக்காளா்களை நீக்குவதற்காக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்எஸ்ஆா்) அக்டோபா் 2024 முதல் 06.01.2025 வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள வாக்காளா் பட்டியல் 06.01.2025 அன்று சிறப்பு சுருக்க திருத்தத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து தொடா்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறிருக்க இப்போது சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆா்) என்பது அரசியலமைப்பு மீறலுக்கான தெளிவான எடுத்துக்காட்டு.
அனைத்து அறிவிப்புகளும் அரசிதழில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என விதிகள் உள்ளது. ஆனால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்க்கு அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், அது நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பு சட்டபூா்வமாக செல்லாது.
பிகாா் மாநிலத்தை போல, சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளா்களிடையே குழப்பத்தை உருவாக்கி அவா்களது வாக்குரிமையை பறிக்கும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு சிறப்பு தீவிர திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள காலக்கெடு மழைக்காலத்தில் வருகிறது. அதைத் தொடா்ந்து கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் பின்னா் பொங்கல் பண்டிகை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் பிகாா் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான வழக்கில் இறுதி தீா்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி, தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல். எனவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் தோ்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஆா்.எஸ்.பாரதி மனுவில் கோரியுள்ளாா்.

