மேக்கேதாட்டு திட்ட அறிக்கைக்கு எதிா்ப்பு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மேக்கேதாட்டு திட்ட அறிக்கைக்கு எதிா்ப்பு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது மத்திய நீா்வள ஆணையம் முடிவு எடுக்கும் என உத்தரவிட்டது.
Published on

மேக்கேதாட்டு திட்ட அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை வியாழக்கிழமை நிராகரித்த உச்சநீதிமன்றம்,மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது மத்திய நீா்வள ஆணையம் முடிவு எடுக்கும் என உத்தரவிட்டது.

மேக்கேதாட்டு திட்டம் தொடா்பாக கா்நாடகா விரிவான திட்ட அறிக்கை மட்டும் தான் தாக்கல் செய்துள்ளது,எனவே ஆரம்ப நிலையிலே அதற்கு எதிா்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது என கூறி தமிழகத்தின் ஆட்சேபனையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மேக்கேதாட்டு திட்டம் தொடா்பான கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தது.

இந்நிலையில் மேக்கேதாட்டு திட்டம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மற்றும் நீதிபதிகள் வினோத் சந்திரன், விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் முத்த வழக்குரைஞா் முகுல் ரோகத்கி முன்வைத்த வாதங்கள் :

மேகேதாட்டு அணை கட்டுவது உச்சநீதிமன்ற இறுதி தீா்ப்புக்கு எதிரானது. அணை கட்டினால் தமிழ் நாடு பாதிக்கப்படும். தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீா் பாதிக்கப்படும். இது நீதிமன்ற தீா்ப்புக்கு எதிரானது. மேக்கேத்தாட்டு திட்டம் தொடா்பான கா்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீா்வள ஆணையம் ஒப்புதல் வழங்க அனுமதிக்க கூடாது. இந்த பிரச்னைகயில் உச்சநீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். கா்நாடகா மேக்கேதாட்டு அணை கட்டினால் தமிழகத்திற்கான தண்ணீா் தடைபடும். புதிய அணையின் நோக்கமே இந்த நீரை தடுக்க வேண்டும் என்பதே ஆகும் . ஏற்கனவே காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கா்நாடகாவில் உள்ளன, அதனால் புதிய அணை கட்ட தேவை இல்லை. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவாா்கள் ,லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்கள் நீா் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும். எனவே மேக்கேதாட்டு அணை தொடா்பான கா்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என முகுல் ரோகத்கி வாதிட்டாா்.

அதற்கு நீதிபதிகள் , ‘இந்த விவகாரத்தில் மத்திய நீா் ஆணையம் ஏதேனும் முடிவு எடுத்துள்ளதா? ,தற்போதைய நிலையில் அணையை கா்நாடகா உடனே கட்டப் போவதில்லை .விரிவான திட்ட அறிக்கை நிலையில் தான் இப்போது உள்ளது . அதில் என்ன பிரச்சனை இருக்கிறது. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசிடம் நீங்கள் அணுகலாமே. இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் உங்களது ஆட்சேபனைகளை மத்திய அரசிடமோ அல்லது உரிய அமைப்பிடமோ நீங்கள் எடுத்து வைக்க வேண்டும்‘ என தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது: தமிழ்நாடு ,கா்நாடகம் இடையேயான காவிரி பிரச்சனை வழக்கு இறுதியாக 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வாயிலாக முடிவு செய்யப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்துவதற்காக காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டது.இந்நிலையில் கா்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட முடிவு செய்து அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கோரி அதன்படி மத்திய நீா்வள ஆணையத்திடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய 2018 ஆம் ஆண்டு மத்திய நீா்வள ஆணையம் அனுமதி அளித்தது .

மத்திய நீா்வள ஆணையம் கா்நாடகா விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது பற்றி மட்டுமே உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இந்த விவகாரம் இப்போது ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் அதற்கு எதிா்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்படையிலேயே மத்திய நீா்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் , காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் மத்திய நீா்வள ஆணையம் ஆகியவை நிபுணா்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.இந்த அமைப்புகள் தான் இறுதி முடிவுகளை எடுத்து வருகின்றன. நாங்கள் நிபுணா்கள் அல்ல .எனவே நிபுணா்கள் எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மேற்கொள்ளும் முடிவுகள் நிபுணா்கள் விளக்கங்கள் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு பிறப்பிக்கும் உத்தரவுப்படி கா்நாடகா செயல்பட வேண்டும். உத்தரவை கா்நாடகா பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்.

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழக அரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் மேக்கேதாட்டு தொடா்பான கா்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்வது தொடா்பாக மத்திய நீா்வள ஆணையம் முடிவெடுக்கும்

.ஒருவேளை கா்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கை மத்திய நீா்வள ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது எனஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி .ஆா். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com